முகப்பு
வணிகம்

ரூ. 400 கோடி ஏலக்காய் வர்த்தகம் முடக்கம்: சிறப்புத் தளர்வுக்கு கோரிக்கை

தமிழகம் மற்றும் கேரளத்தில் கரோனா தடுப்பு பொதுமுடக்கக் கட்டுப்பாடுகளால், கடந்த ஒன்றரை மாதத்தில் ரூ.400 கோடி மதிப்பிலான ஏலக்காய் வர்த்தகம் முடங்கியுள்ளது. 

Updated On : 18 ஜூன் 2021, 10:47 am IST
பகிர்:

தேனி: தமிழகம் மற்றும் கேரளத்தில் கரோனா தடுப்பு பொதுமுடக்கக் கட்டுப்பாடுகளால், கடந்த ஒன்றரை மாதத்தில் ரூ.400 கோடி மதிப்பிலான ஏலக்காய் வர்த்தகம் முடங்கியுள்ளது. 
கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் உற்பத்தியாகும் ஏலக்காய், நறுமணப் பொருள் வாரியம் சார்பில் தனியார் ஏல நிறுவனங்கள் மூலம் இடுக்கி மாவட்டம் புத்தடி, தேனி மாவட்டம் போடி ஆகிய இடங்களில் மின்னணு ஏல வர்த்தக முறையில் விற்பனை செய்யப்படும். இந்த ஏல வர்த்தகத்தில் தினமும் சராசரியாக 80 ஆயிரம் கிலோ ஏலக்காய் விற்பனையாகும்.
இந்த நிலையில், தற்போது கரோனா தடுப்பு பொதுமுடக்கத்தால் தமிழகம், கேரளம் இடையே போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் புத்தடி, போடி ஆகிய இடங்களில் கடந்த 
மே 10-ஆம் தேதி முதல் ஏலக்காய் மின்னணு ஏல வர்த்தகம் 
நிறுத்தப்பட்டுள்ளது. ஏலக்காய் தரம் பிரிப்பு கிட்டங்கிகளும் மூடப்பட்டுள்ளன. 
இதனால், கடந்த ஒன்றரை மாதங்களாக மொத்தம் ரூ.400 கோடி மதிப்பிலான ஏலக்காய் வர்த்தகம் முடங்கியுள்ளது. மேலும், ஏலக்காய் தோட்டங்களில் பாரமரிப்பு மற்றும் பயிர்ப் பாதுகாப்புப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
கரோனா பரிசோதனை நிபந்தனையால் சிக்கல்: தற்போது தமிழகத்தில் கரோனா தொற்று பரவல் குறைந்து வரும் நிலையில் பொதுமுடக்கக் கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.  
தேனியிலிருந்து  இடுக்கி மாவட்டப் பகுதிகளுக்கு வருவோர் 72 மணி நேரத்திற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனை சான்றினை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் இடுக்கி மாவட்ட நிர்வாகம் நிபந்தனை விதித்துள்ளது. 
ஆனால், தேனி மாவட்டத்தில் இடுக்கி மாவட்டத்திற்கு செல்லும் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொண்டு உடனடியாக சான்றிதழ் வழங்க மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. 
இதனால், ஏலக்காய் தோட்டங்களில் குடியிருந்து வரும் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் மட்டுமே இந்த நிபந்தனையை கடைப்பிடித்து இடுக்கி மாவட்டத்திற்குச் சென்று வர முடிகிறது. அன்றாடம் பணிக்கு சென்று வரும் சிறு விவசாயிகள், குத்தகை நில விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு கரோனா பரிசோதனை நிபந்தனையால் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 
இடுக்கி மாவட்டத்தில் தற்போது தென்மேற்கு  பருவமழை பெய்து வரும் நிலையில், ஏலக்காய் தோட்டங்களுக்குச் சென்று விவசாயப் பணிகளை மேற்கொள்ள  முடியாமல் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
விவசாயிகள் கோரிக்கை: இந்த நிலையில், கேரளத்தில் பொதுமுடக்கக் கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளிப்பது தொடர்பாக புதன்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் இது தொடர்பாக எந்த அறிவிப்புகளும் வெளியாகவில்லை.  இதனிடையே, ஜூன் 21-ஆம் தேதி முதல் ஏலக்காய் மின்னணு வர்த்தகத்தை தொடங்க இடுக்கி மற்றும் தேனி மாவட்ட நிர்வாகத்திடம் நறுமணப் பொருள் வாரியம் அனுமதி கோரியுள்ளது.
இந்த நிலையில், தேனி மாவட்டத்திலிருந்து இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஏலக்காய் தோட்டங்களுக்கு பராமரிப்பு பணிகளுக்கு விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் சென்று வருவதற்கு வாய்ப்பாக, 72 மணி நேரத்திற்கு முன்னதாக மேற்கொள்ளப்பட்ட கரோனா சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என்ற நிபந்தனையில் சிறப்பு தளர்வு அளிக்க கேரள அரசிடம் தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என ஏலக்காய் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

போடியில் தனியார் கிட்டங்கியில் ஏலக்காய்களை தரம் பிரிக்கும் பெண் தொழிலாளர்கள்.   (வலது) போடியில் நறுமணப் பொருள் வாரியம் சார்பில் நடைபெறும் ஏலக்காய் மின்னணு ஏல வர்த்தகம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments