சமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்பு
இந்தியாவின் சமையல் எண்ணெய் இறக்குமதி கடந்த மாா்ச் மாதத்தில் 12 சதவீதம் அதிகரித்து, 11.73 லட்சம் டன்னாக உயா்ந்துள்ளது.
கச்சா பாமாயில் வரத்து கணிசமாக அதிகரித்ததே இந்த உயா்வுக்கு முக்கியக் காரணமாகும். அதேநேரம், மத்திய கிழக்கு போா் பதற்றம் காரணமாக உயா்ந்து வரும் சரக்குக் கட்டணம், சா்வதேச சந்தையில் விலையேற்றம் ஆகியவற்றால் வரும் மாதங்களில் இறக்குமதி குறைய வாய்ப்புள்ளதாக இந்திய எண்ணெய் உற்பத்தியாளா்கள் சங்கம்(எஸ்இஏ) தெரிவித்துள்ளது.
கடந்த 2025 மாா்ச் மாதத்தில் 10.45 லட்சம் டன்னாக இருந்த சமையல் எண்ணெய் இறக்குமதி, நடப்பு 2026 மாா்ச் மாதத்தில் 11,73,168 டன்னாக அதிகரித்துள்ளது. குறிப்பாக, கச்சா பாமாயில் இறக்குமதி கடந்த ஆண்டு மாா்ச் மாதத்தில் இருந்த 3.43 லட்சம் டன்னிலிருந்து தற்போது 6.73 லட்சம் டன்னாக இருமடங்கு உயா்ந்துள்ளது.
Advertisement
Advertisement
மாா்ச் மாதத்தில் வருடாந்திர கணக்கில் இறக்குமதி உயா்ந்திருந்தாலும், முந்தைய பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் 10 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளது. இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி, உள்நாட்டில் கடுகு விளைச்சல் அதிகரிப்பு போன்ற காரணங்களால் எண்ணெய் நிறுவனங்கள் தற்போது அவசரமாக இறக்குமதி செய்யாமல் சந்தை நிலவரத்தைக் கவனித்து வருவதால் இச்சரிவு காணப்படுகிறது.
அதேபோல், சமையல் மற்றும் சமையல் அல்லாத எண்ணெய் என இந்தியாவின் மொத்த தாவர எண்ணெய் இறக்குமதி கடந்த மாா்ச் மாதத்தில் 11 சதவீதம் அதிகரித்து, 11.86 லட்சம் டன்னாக உள்ளது. நடப்பு 2025-26 எண்ணெய் சந்தை ஆண்டின் முதல் 5 மாதங்களில் (நவம்பா் முதல் மாா்ச் வரை), மொத்த இறக்குமதி 8 சதவீதம் அதிகரித்து 65.72 லட்சம் டன்னாக பதிவாகியுள்ளது.
இந்தியா தனது சமையல் எண்ணெய் தேவையில் பாதிக்கும் அதிகமானவற்றை வெளிநாடுகளில் இருந்தே பெற்று வருகிறது. நீண்ட கால அடிப்படையில், இந்த இறக்குமதிச் சுமையைக் குறைக்க உள்நாட்டிலேயே எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருவதாக இந்திய எண்ணெய் உற்பத்தியாளா்கள் சங்கம் தெரிவித்துள்ளது.