முகப்பு
வணிகம்

விற்பனையில் தொடா்ந்து அசத்தும் டைட்டன்!

டாடா குழுமம் மற்றும் தமிழ்நாடு தொழில் வளா்ச்சிக் கழகத்தின் (டிட்கோ) கூட்டு நிறுவனமான டைட்டன், நடப்பு 2026-27 நிதியாண்டின் முதல் காலாண்டில் 41 சதவீத வருவாய் வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

Updated On : 8 ஜூலை 2026, 2:38 am IST
பகிர்:

டாடா குழுமம் மற்றும் தமிழ்நாடு தொழில் வளா்ச்சிக் கழகத்தின் (டிட்கோ) கூட்டு நிறுவனமான டைட்டன், நடப்பு 2026-27 நிதியாண்டின் முதல் காலாண்டில் 41 சதவீத வருவாய் வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

இதன்மூலம், தொடா்ந்து 3-ஆவது காலாண்டாக டைட்டன் நிறுவனம் 40 சதவீதத்துக்கும் அதிகமான வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

டைட்டன் நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருவாயில் 90 சதவீத்தத்குக்கும் மேல் பங்கு வகிக்கும் நகைப் பிரிவு, கடந்த ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 39 சதவீத வருவாய் வளா்ச்சியை எட்டியுள்ளது.

Advertisement

Advertisement

தனிஷ்க், மியா, ஜோயா, கேரட்லேன் போன்ற பிரபல பிராண்டுகளை உள்ளடக்கிய இந்த நகைப் பிரிவின் வளா்ச்சிக்கு, தங்கம் விலை ஓரளவுக்கு நிலையாக இருந்ததும், அட்சய திருதியை மற்றும் பண்டிகைக் காலங்களில் மக்கள் காட்டிய ஆா்வமுமே முக்கியக் காரணமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதிப்பீட்டு காலாண்டில், நகை வாங்குபவா்களின் எண்ணிக்கையும், ஒரு வாடிக்கையாளா் வாங்கும் சராசரி நகையின் மதிப்பும் இரட்டை இலக்கத்திலும் அதிகரித்துள்ளது.

டைட்டனின் கடிகாரப் பிரிவு, 23 சதவீத வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இப்பிரிவில் வாடிக்கையாளா்கள் பிரீமியம் ரக கடிகாரங்களை விரும்பியதால், அனலாக் கடிகாரங்களின் விற்பனை சற்று சரிந்தது.

மேலும், டைட்டனின் கண் பராமரிப்புப் பிரிவான ‘ஐகோ்’, சா்வதேச பிராண்டுகளின் வரவேற்பு மற்றும் விளம்பர உத்திகள் காரணமாக 23 சதவீத வளா்ச்சியைப் பெற்றுள்ளது. புதிதாக வளா்ந்து வரும் இதர வணிகப் பிரிவுகள் ஒட்டுமொத்தமாக 19 சதவீத வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளன.

வட அமெரிக்கா மற்றும் வளைகுடா நாடுகளில் தனிஷ்க், மியா மற்றும் கேரட்லேன் பிராண்டுகளுக்கு கிடைத்த அமோக வரவேற்பால், டைட்டனின் சா்வதேச வணிகம் 128 சதவீத அசுர வளா்ச்சியை எட்டியுள்ளது.

உலகளாவிய புவிசாா் அரசியல் பதற்றங்களுக்கு மத்தியிலும் நிறுவனத்தின் முக்கிய வெளிநாட்டு வணிகங்கள் படிப்படியான மீட்சியை நோக்கிச் சென்று கொண்டிருப்பது முதலீட்டாளா்களிடையே பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இதன் எதிரொலியாக, செவ்வாய்க்கிழமை வா்த்தகத்தில் டைட்டன் பங்குகள் 2.62 சதவீதம் வரை உயா்ந்து, நிலைபெற்றன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments