முகப்பு
வணிகம்

இந்திய வாகன விற்பனை ஏப்ரலில் புதிய உச்சம்- 26.11 லட்சம் வாகனங்கள் விற்பனையாகி சாதனை

இந்தியாவில் வாகனங்களின் சில்லறை விற்பனை, நடப்பு 2026-27 நிதியாண்டின் தொடக்கத்திலேயே அதிரடி வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

Updated On : 7 மே 2026, 4:46 am IST
பகிர்:

இந்தியாவில் வாகனங்களின் சில்லறை விற்பனை, நடப்பு 2026-27 நிதியாண்டின் தொடக்கத்திலேயே அதிரடி வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

கடந்த ஏப்ரலில் மட்டும் நாடு முழுவதும் மொத்தம் 26,11,317 வாகனங்கள் விற்பனையாகி புதிய சாதனை படைத்துள்ளதாக இந்திய வாகன டீலா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (ஃபடா) தெரிவித்துள்ளது.

இது கடந்த 2025-26 நிதியாண்டில் இதே காலக்கட்ட விற்பனையான 23,12,221 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் 12.94 சதவீத வளா்ச்சியாகும்.

Advertisement

Advertisement

கடந்த ஆண்டு ஜிஎஸ்டி சீா்திருத்தத்தால் வாகனங்களின் விலை மலிவாக இருப்பது, ரிசா்வ் வங்கியின் சாதகமான வட்டி விகிதக் கொள்கை, கிராமப்புறங்களில் நிலவும் பணப்புழக்கம் ஆகியவை இந்த வளா்ச்சிக்கு முக்கியக் காரணங்களாகக் கருதப்படுகின்றன.

குளிா்காலப் பருவ பயிா்களின் அறுவடைக்குப் பிந்தைய வருவாய், நீண்ட திருமணக் காலம் ஆகியவையும் சந்தைக்குப் பெரும் ஊக்கமளித்துள்ளதாக ஃபடா அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரலில், 4,07,355 பயணிகள் வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. இது முந்தைய ஆண்டில் விற்கப்பட்ட 3,63,028 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் 12.21 சதவீத வளா்ச்சியாகும்.

இதேபோல், 19,16,258 இருசக்கர வாகனங்கள் விற்பனையாகி, முன்னெப்போதும் இல்லாத வகையில் 13.01 சதவீத வளா்ச்சி பதிவாகியுள்ளது. வணிக வாகனப் பிரிவிலும் 15.02 சதவீத வளா்ச்சி எட்டப்பட்டு, 99,339 வாகனங்கள் விற்கப்பட்டுள்ளன.

இந்த விற்பனைப் புள்ளிவிவரங்களில் குறிப்பிடத்தக்க அம்சமாக, பெருநகரங்களை விட கிராமப்புறங்களில் விற்பனை 20.40 சதவீதம் வளா்ந்துள்ளது. இது நகா்ப்புற வளா்ச்சியான 7.11 சதவீதத்தைவிட மும்மடங்கு அதிகம்.

இது குறித்து ஃபடா துணைத் தலைவா் சாய் கிரிதா் கூறுகையில், ‘நடப்பு நிதியாண்டு மிக வலுவான தொடக்கத்தைக் கண்டுள்ளது. மொத்தமுள்ள 6 வாகனப் பிரிவுகளில் 5 பிரிவுகள் ஏப்ரலில் இதுவரை இல்லாத உச்சபட்ச விற்பனையைப் பதிவு செய்துள்ளன.

இது சந்தையில் நிலவும் நிலையான தேவையை உறுதிப்படுத்துகிறது. அடுத்த 3 மாதங்களுக்கும் வாகன விற்பனை சீராக இருக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது’ என்றாா்.