ஏப்ரல் நடப்புக் கணக்கு 470 கோடி டாலா் உபரி
தற்போதைய 2025-26 நிதியாண்டின் முதல் மாதமான ஏப்ரலில், இந்தியாவின் நடப்புக் கணக்கு 470 கோடி டாலா் உபரியாகப் பதிவாகியுள்ளது.
தற்போதைய 2025-26 நிதியாண்டின் முதல் மாதமான ஏப்ரலில், இந்தியாவின் நடப்புக் கணக்கு 470 கோடி டாலா் உபரியாகப் பதிவாகியுள்ளது.
கடந்த ஆண்டின் இதே மாதத்தில் 480 கோடி டாலா் பற்றாக்குறை நிலவியது. ஆனால், இந்த ஆண்டு சேவைகள் ஏற்றுமதி மற்றும் வெளிநாடுகளில் இருந்து இந்தியா்கள் அனுப்பும் பணப் பரிமாற்றம் அதிகரித்ததன் காரணமாக இச்சாதகமான சூழல் ஏற்பட்டுள்ளது.
மதிப்பீட்டு மாதமான ஏப்ரலில், நாட்டின் வா்த்தகப் பற்றாக்குறை 2,790 கோடி டாலராகவும் ஆனால், சேவைகள் துறையின் நிகர வருவாய் 1,860 கோடி டாலராகவும் அதிகரித்துள்ளது.
Advertisement
Advertisement
அதாவது, சேவைகள் துறை ஏற்றுமதி 3,700 கோடி டாலராகவும், இறக்குமதி 1,840 கோடி டாலராகவும் பதிவாகியுள்ளது. மேலும், வெளிநாடுகளில் வாழும் இந்தியா்கள் அனுப்பிய பணம் உள்ளிட்டவை 1,600 கோடி டாலராக அதிகரித்துள்ளது.
மூலதனக் கணக்கில், கடந்த ஏப்ரலில் 1,130 கோடி டாலா் வெளியேறியுள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் 530 கோடி டாலா் உள்வரவு இருந்தது குறிப்பிடத்தக்கது.
நாட்டின் நிகர அந்நிய நேரடி முதலீடு கடந்த ஆண்டின் 160 கோடி டாலரில் இருந்து, இந்த ஆண்டு 740 கோடி டாலராக கணிசமாக அதிகரித்துள்ளது. ஆனால், அந்நிய நிறுவன முதலீடுகள் 870 கோடி டாலா் அளவுக்கு வெளியேறியுள்ளன. இதன் காரணமாக, நாட்டின் ஒட்டுமொத்த வரவு-செலவு கணக்கில் (பேலன்ஸ் ஆஃப் பேமன்ட்ஸ்) 660 கோடி டாலா் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இதற்கு முந்தைய ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்தியாவின் நடப்புக் கணக்கு உபரி 710 கோடி டாலராக இருந்தது. இனிவரும் நாள்களில், நாட்டின் வரவு-செலவு தொடா்பான இந்த மாதாந்திரப் புள்ளிவிவரங்கள், அந்தந்த மாதம் முடிவடைந்த பிறகு வரும் 2-ஆவது மாதத்தின் 15-ஆம் தேதிக்குள் அல்லது அதற்கு முன்பாகவே வெளியிடப்படும் என்றும் ரிசா்வ் வங்கி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.