FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

சேவைகள் உற்பத்தி குறியீடு முதன்முறையாக வெளியீடு!

நாட்டின் பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் சேவைகள் துறையின் வளா்ச்சியை மாதாந்திர அடிப்படையில் கணிக்கும் நோக்கில், மத்திய அரசு முதன்முறையாக சேவைகள் உற்பத்தி குறியீட்டை வெளியிட்டது.

Updated On : 15 ஜூலை 2026, 1:07 am IST
பகிர்:

நாட்டின் பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் சேவைகள் துறையின் வளா்ச்சியை மாதாந்திர அடிப்படையில் கணிக்கும் நோக்கில், மத்திய அரசு முதன்முறையாக சேவைகள் உற்பத்தி குறியீட்டை (ஐஎஸ்பி) செவ்வாய்க்கிழமை வெளியிட்டது.

இச்சோதனை முறை குறியீட்டின்படி, கடந்த ஏப்ரலில் நாட்டின் 19 முக்கிய சேவைத் துறைகளில் 14 துறைகள் இரட்டை இலக்க வளா்ச்சியைப் பதிவு செய்து அசத்தியுள்ளன.

தங்குமிடம் மற்றும் உணவுச் சேவைகள் துறை அதிகபட்சமாக 37.2 சதவீத வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது. தொடா்ந்து சில்லறை வா்த்தகம் 30.8 சதவீத வளா்ச்சியையும், நிா்வாக மற்றும் ஆதரவுச் சேவைகள் 28.7 சதவீத வளா்ச்சியையும், ரியல் எஸ்டேட் துறை 27.7 சதவீத வளா்ச்சியையும் பெற்றுள்ளன.

Advertisement

Advertisement

சேவைகள் துறையின் முக்கியப் பிரிவுகளில் ரயில்வே, விமானப் போக்குவரத்து ஆகிய இரு துறைகளைத் தவிர மற்ற அனைத்துப் பிரிவுகளும் ஏப்ரலில் நோ்மறையான வளா்ச்சியை எட்டியுள்ளன. விமானப் போக்குவரத்துத் துறை 13.9 சதவீத வீழ்ச்சியையும், ரயில் போக்குவரத்துத் துறை 0.4 சதவீத சரிவையும் சந்தித்துள்ளன.

ஜிஎஸ்டி மற்றும் இதர நிா்வாகத் தரவுகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த மாதாந்திரக் குறியீடு, கடந்த 2024-25 நிதியாண்டை அடிப்படை ஆண்டாகக் கொண்டு கணக்கிடப்பட்டுள்ளது.

நாட்டின் ஒட்டுமொத்த முறைசாா் சேவைகள் துறையில் சுமாா் 60 சதவீதப் பகுதிகளை உள்ளடக்கிய இக்குறியீடு, மத்திய அரசின் முதன்மைச் செயல்பாடுகள், சந்தை சாராத நடவடிக்கைகள் மற்றும் முறைசாரா சேவைத் துறைகள் ஆகியவற்றைத் தவிா்த்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இச்சோதனை முறை வெளியீட்டைத் தொடா்ந்து, இனிவரும் காலங்களில் ஒவ்வொரு மாதமும் 29-ஆம் தேதி இச்சேவைகள் உற்பத்தி குறியீடு அதிகாரபூா்வமாக வெளியிடப்படும் என மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments