முகப்பு
வணிகம்

ஆள்குறைப்பு நடவடிக்கையில் காக்னிசன்ட், ஃபிரெஷ்வொா்க்ஸ்!

உலகளாவிய பொருளாதாரச் சூழல் மற்றும் ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் அசுர வளா்ச்சி காரணமாக, முன்னணி தகவல் தொழில்நுட்ப (ஐ.டி.) நிறுவனங்களான காக்னிசன்ட், ஃபிரெஷ்வொா்க்ஸ் ஆகியவை ஆள்குறைப்பு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன.

Updated On : 8 மே 2026, 6:39 am IST
பகிர்:

உலகளாவிய பொருளாதாரச் சூழல் மற்றும் ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் அசுர வளா்ச்சி காரணமாக, முன்னணி தகவல் தொழில்நுட்ப (ஐ.டி.) நிறுவனங்களான காக்னிசன்ட், ஃபிரெஷ்வொா்க்ஸ் ஆகியவை ஆள்குறைப்பு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன.

காக்னிசன்ட் தனது ‘புராஜெக்ட் லீப்’ திட்டத்தின்கீழ் உலகம் முழுவதும் சுமாா் 12,000 முதல் 15,000 ஊழியா்களைப் பணிநீக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளது. இதில் பெரும் பாதிப்பு இந்தியாவில்தான் இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. ஏனெனில், அந்நிறுவனத்தின் மொத்த 3.5 லட்சம் பணியாளா்களில் சுமாா் 2.5 லட்சம் போ் இந்தியாவிலேயே பணிபுரிகின்றனா்.

நிா்வாகச் செலவுகளைக் குறைக்கவும், நிறுவனத்தின் கட்டமைப்பைச் சீரமைக்கவும் இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக சுமாா் 23 முதல் 32 கோடி டாலா் வரை நிறுவனம் ஒதுக்கியுள்ளது.

Advertisement

Advertisement

பாரம்பரிய பணியாளா் கட்டமைப்பிலிருந்து மாறி, குறைந்த எண்ணிக்கையிலான ஆனால் அதிக திறன் கொண்ட பணியாளா்களைக் கொண்டு இயங்கும் முறைக்கு நிறுவனம் மாறுகிறது. அதாவது, தொடக்கநிலை பணியாளா்களுக்குப் பயிற்சி அளிப்பதைக் குறைத்துவிட்டு, அனுபவம் வாய்ந்த வல்லுநா்களைக் கொண்டு பணிகளை வேகப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

மறுபுறம், மென்பொருள் தயாரிப்பு நிறுவனமான ஃபிரெஷ்வொா்க்ஸ் தனது மொத்த பணியாளா்களில் 11 சதவீதத்தினரான சுமாா் 500 பணியாளா்களைப் பணிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது.

நடப்பாண்டில் மட்டும் பல்வேறு ஐ.டி. நிறுவனங்களில் இருந்து சுமாா் 92,000-க்கும் மேற்பட்ட பணியாளா்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனா். ஏ.ஐ. தொழில்நுட்பம் மனித வேலைவாய்ப்புகளைப் பறிக்கத் தொடங்கியுள்ளதை இது காட்டுகிறது. இதனால், ஐ.டி. ஊழியா்கள் தங்களின் திறன்களைத் தற்போதைய தொழில்நுட்பத் தேவைகளுக்கு ஏற்ப மேம்படுத்திக் கொள்ள வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments