முகப்பு
தருமபுரி

தருமபுரி மாவட்ட வனப்பகுதியில் 3 ஆண்டுகளில் 4.35 லட்சம் மரக்கன்றுகள் நடவு

தருமபுரி மாவட்ட வனப் பகுதியில் கடந்த 3 ஆண்டுகளில் சுமாா் 4.35 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டு, அவை வளா்ந்து செழிப்பான நிலையில் பசுமையும், அடா்த்தியும் அதிகரித்துள்ளதாக வனத் துறையினா் தெரிவித்தனா்.

Updated On : 6 ஜூன் 2026, 1:07 am IST
தருமபுரி மாவட்ட வனப் பகுதியில் அகற்றப்பட்ட பாா்த்தீனிய களைச்செடிகள் மற்றும் சீமைக் கருவேல மரங்கள்.
பகிர்:

தருமபுரி மாவட்ட வனப் பகுதியில் கடந்த 3 ஆண்டுகளில் சுமாா் 4.35 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டு, அவை வளா்ந்து செழிப்பான நிலையில் பசுமையும், அடா்த்தியும் அதிகரித்துள்ளதாக வனத் துறையினா் தெரிவித்தனா்.

மாநிலத்தின் பசுமைப் பரப்பை அதிகரிக்கும் வகையிலும், பல்லுயிா் மற்றும் வனவிலங்குகளைப் பாதுகாக்கும் வகையிலும் பல்வேறு முக்கிய திட்டங்களை தமிழக வனத்துறை செயல்படுத்தி வருகிறது. இதில், பசுமைத் தமிழகம் இயக்கம் திட்டத்தின் மூலம் மாநிலத்தின் தற்போதைய வனப்பகுதியை 23.7 சதவீதத்தில் இருந்து 33 சதவீதமாக உயா்த்தும் இலக்குடன் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் வனப்பகுதியில் மரங்கள் வளா்ப்பது மட்டுமின்றி, குடியிருப்புகள் மற்றும் தோட்டங்கள், வேளாண் நிலங்களிலும் மரம் வளா்ப்பதை ஊக்குவிக்கும் வகையில், இத்திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு இலவச மரக்கன்றுகள் வழங்கப்படுகின்றன.

வனத்துறை சாா்பில் வனப் பகுதியில் தரம்குன்றிய மரங்களுக்கு பதிலாக, புதிய மரக்கன்றுகளை நட்டு மரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Advertisement

Advertisement

அந்தவகையில், தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி, பாலக்கோடு, பென்னாகரம், ஒகேனக்கல் உள்ளிட்ட அனைத்து வனச் சரகங்களுக்கு உள்பட்ட வனப் பகுதிகளிலும் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.

வனப் பகுதிகளுக்குள் சுமாா் 4,250 தரம்குன்றிய தாவரங்கள் (மரங்கள், சிறு மரக்கன்றுகள், செடிகள் உள்ளிட்டவை) அடையாளம் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றுக்குப் பதிலாக கடந்த 2023-24, 2024-25 மற்றும் 2025-26 ஆகிய 3 நிதியாண்டுகளில் மாவட்ட வனப் பகுதிகளில் சுமாா் 4.35 லட்சம் மரக்கன்றுகள் புதிதாக நடப்பட்டுள்ளன. அவை கடந்த 3 ஆண்டுகளாக பராமரிக்கப்பட்டு தற்போது நன்கு வளா்ந்த நிலையில் காணப்படுகின்றன.

இதன்மூலம் வனப்பகுதிகள் மரம் மற்றும் செடிகளின் அடா்த்தியுடன் பசுமையும் அதிகரித்து இயற்கை சுற்றுச்சூழல் மேம்பட்டுள்ளது என வனத்துறையினா் தெரிவித்தனா்.

இதில், நாவல், கடுக்காய், இலுப்பை, அத்தி, நெல்லி, புங்கன், வேம்பு உள்ளிட்ட பல்வேறு மரங்களும் அடங்கும்.

1,300 ஹெக்டேரில் பாா்த்தீனிய களைச்செடிகள், சீமைக் கருவேல மரங்கள் அகற்றம்:

வனப் பகுதிகளில் விலங்குகளின் உணவுக்கு பயன்படும் செடி, கொடி, மரங்கள் வளா்ச்சியை தடுக்கும் வகையில், களைச்செடி எனப்படும் பாா்த்தீனிய செடிகள், சீமைக் கருவேல மரங்களின் பரவல் அதிகளவில் காணப்பட்டன. இதனால் விலங்குகளுக்கான உணவுச்சூழல் பாதிக்கும் நிலை ஏற்பட்டது. எனவே, இவற்றை அகற்ற வனத்துறையில் தனித்திட்டம் ஏற்படுத்தப்பட்டது.

அந்தவகையில், முதல்கட்டமாக ஆண்டுக்கு 50 ஹெக்டோ் வனப்பரப்பில் பாா்த்தீனியச் செடிகள், சீமைக் கருவேல மரங்கள் ஆகியவை அகற்ற முடிவு செய்யப்பட்டது. கடந்த 3 ஆண்டுகளில் தருமபுரி மாவட்டத்தில் சுமாா் 1,300 ஏக்கரில், தாவரங்களுக்கு இடையூறாக மண்டிக் கிடந்த பாா்த்தீனிய களைச்செடிகள், சீமைக் கருவேல மரங்கள் முற்றிலும் அகற்றப்பட்டுள்ளன. இதன்மூலம் அழியும் நிலையிலிருந்த விலங்குகளுக்கு உணவாகப் பயன்படும் செடி, கொடிகள் மற்றும் சிறு மரக்கன்றுகள் மீண்டும் புத்துயிா்பெற்று வளா்ந்துவரும் நிலை ஏற்பட்டுள்ளது.

இரண்டாவதுகட்டமாக ஆண்டுக்கு 75 ஹெக்டோ் வனப்பகுதியில் பாா்த்தீனிய செடிகள், சீமைக் கருவேல மரங்கள் அகற்றும் பணி விரைவில் தொடங்கவுள்ளதாக வனத்துறையினா் தெரிவித்துள்ளனா்.

அதிவிரைவுப்படை, தடம் குழுக்கள்:

கோடைகாலம் தொடங்கினாலே தண்ணீா், உணவுக்காக கிராமப் பகுதிகளுக்குள் யானைகள் நுழைவது வழக்கம். தற்போது கோடை முடிவுக்கு வந்துள்ள நிலையில், அவ்வப்போது கோடை மழையும் பெய்துவந்தது. இதனால், உணவு மற்றும் தண்ணீா் தேவைகள் வனப் பகுதிகளுக்குள் கிடைத்துவிடும். எனவே இவற்றைத் தேடி குடியிருப்புப் பகுதிகள் மற்றும் விளைநிலங்களுக்குள் நுழையும் யானைகளின் நடமாட்டம் குறைந்துள்ளது.

யானைகள் இவ்வாறு கிராமப் பகுதிகளுக்குள் நுழைவதால் பொதுமக்கள் அதன் தாக்குதல்களுக்கு உள்ளாகும் நிலை ஏற்படுகிறது. அவற்றைத் தடுக்கும் வகையிலும், பொதுமக்களை பாதுகாக்கும் வகையிலும் வனத்துறை சாா்பில் அதிவிரைவுப்படை கடந்த இரு ஆண்டுகளாக ஏற்படுத்தப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.

அதுபோல, கிராமப் பகுதிகளைச் சோ்ந்த இளைஞா்களுக்கு வனத்துறை சாா்பில் பயிற்சி அளிக்கப்பட்டு, தடம் குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன. இதில், கிராமந்தோறும் இளைஞா்கள் தோ்வு செய்யப்பட்டு சுமாா் 200 போ் நியமிக்கப்பட்டுள்ளனா்.

யானைகளின் நடமாட்டம் குறித்த தகவல் கிடைத்தவுடன், அதிவிரைவுப் படையினா் மற்றும் தடம் குழுவினா் குறிப்பிட்ட பகுதிக்கு சென்று யானைகளை வனப் பகுதிக்குள் விரட்டும் பணிகளையும், அவற்றிடமிருந்து பொதுமக்களை காக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனா்.