நூறு போில் ஒருவர்! மந்தனாவுக்குக் கிடைத்த மணிமகுடம்!
பிரபல 'டைம்' பத்திரிகையின் ஜூன் 22-ஆம் தேதியிட்ட இதழில், 'விளையாட்டுத் துறையில் மிகவும் செல்வாக்கு மிக்க நூறு பேர்' என்ற பட்டியல் 'டைம்100 ஸ்போர்ட்ஸ்' என்ற தலைப்பில் வெளியாகியுள்ளது.
பிரபல 'டைம்' பத்திரிகையின் ஜூன் 22-ஆம் தேதியிட்ட இதழில், 'விளையாட்டுத் துறையில் மிகவும் செல்வாக்கு மிக்க நூறு பேர்' என்ற பட்டியல் 'டைம் 100 ஸ்போர்ட்ஸ்' என்ற தலைப்பில் வெளியாகியுள்ளது. இதில் இடம்பெற்றுள்ள ஒரே இந்திய விளையாட்டு வீரர் ஸ்மிருதி மந்தனா.
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் மந்தனா, உலகின் மிகப் பெரிய விளையாட்டு நட்சத்திரங்களுடன் இணைந்துள்ளது இந்தியாவுக்கே பெருமை சேர்க்கிறது. மேலும், இந்திய மகளிர் கிரிக்கெட்டை உலக அரங்கில் உயர்த்துவதில் அவருடைய பங்களிப்பை அங்கீகரிக்கிறது.
'தங்கள் துறைகளில் சிறந்து விளங்குவதோடு மட்டுமல்லாமல், கலாசாரத்தை வடிவமைத்து, வாய்ப்புகளை விரிவுபடுத்தி, போட்டிக்கு அப்பாற்பட்டு உலகைப் பெரிதும் பாதிக்கும் தனிநபர்களை இந்தப் பட்டியல் அங்கீகரிக்கிறது' என்று டைம் பத்திரிகையின் தலைமைச் செயல் அதிகாரி ஜெசிகா சிப்லி கூறியுள்ளார்.
Advertisement
Advertisement
டைம் பத்திரிகை தனது முதல் 'டைம்100 விளையாட்டு விழா'வை நியூயார்க்கில் ஜூலை 16-இல் நடத்தவுள்ளது.
முக்கிய பிரபலங்கள் யார், யார்?
உலகளாவிய விளையாட்டுத் துறையில் உள்ள தடகள வீரர்கள், பயிற்சியாளர்கள், நிர்வாகிகள், மாற்றத்தை உருவாக்குபவர்களை உள்ளடக்கியதே இந்தப் பட்டியலாகும்.
கால்பந்து, கூடைப்பந்து நட்சத்திர ஆட்டக்காரர்களுடன், கடந்த ஆண்டு இந்தியாவில் தனது அணிக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க டெஸ்ட் தொடர் வெற்றியையும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தையும் பெற்றுத் தந்த தென்னாப்பிரிக்க கிரிக்கெட் கேப்டன் டெம்பா பவுமா, ஃபிபா தலைவர் கியானி இன்ஃபான்டினோ, கோல்ஃப் வீரர் ரோரி மெக்ல்ராய் மற்றும் பனிச்சறுக்கு வீராங்கனை எய்லீன் கு ஆகியோரும் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
லெப்ரான் ஜேம்ஸ், லியோனல் மெஸ்ஸி, கிறிஸ்டியானோ ரொனால்டோ, கார்லோஸ் அல்கராஸ், ஷோஹெய் ஓஹ்தானி, கெய்ட்லின் கிளார்க் மற்றும் ரோரி மெக்லிராய் உள்ளிட்டோர் பட்டியலில் உள்ள முக்கிய விளையாட்டு வீரர்களாவர்.
பெண்களுக்கும் முக்கியத்துவம்:
அலெக்ஸ் மோர்கன், லிண்ட்சே வான், கெய்ட்லின் கிளார்க், ஆஜா வில்சன், டான் ஸ்டேலி, மிகேலா ஷிஃப்ரின் உள்ளிட்டோர் பெண் வீரர்கள் பட்டியலில் கணிசமான அளவில் இடம்பிடித்துள்ளனர்.
மந்தனாவின் அசாதாரண சாதனைகள்
'மும்பையில் பிறந்த இடது கை தொடக்க ஆட்டக்காரரான மந்தனா, உள்நாட்டு ஒருநாள் போட்டியில் இரட்டைச் சதம் அடித்த முதல் இந்தியப் பெண்மணியாவார். சர்வதேச கிரிக்கெட்டின் மூன்று வடிவங்களிலும் (டெஸ்ட், ஒருநாள், டி20) சதம் அடித்த முதல் வீராங்கனை, மகளிர் கிரிக்கெட்டில் அதிக சர்வதேச சதங்கள் (17 சதங்கள்), ஓராண்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரன்களைக் குவித்த முதல் வீராங்கனை உள்ளிட்ட சாதனைகளைப் படைத்துள்ளார்.
தனிப்பட்ட சாதனைகள் இத்தனை இருந்தாலும், தனது சாதனைகளை விட, அணியின் வெற்றிகளிலேயே மந்தனா அதிகம் பெருமை கொள்கிறார்' என்று 'டைம்' இதழ் பாராட்டியுள்ளது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வழிநடத்தி 2024, 2026 ஆகிய ஆண்டுகளில் 'மகளிர் பிரீமியர் லீக்' பட்டங்களை வெல்ல மந்தனா வழிவகுத்துக் கொடுத்தார். கடந்த ஆண்டு நடைபெற்ற ஐசிசி மகளிர் உலகக் கோப்பையில் இந்திய அணி வெற்றி பெறத் துணை கேப்டனாகப் பங்காற்றியதோடு, தொடரில் அதிக ரன்கள் குவித்தவர்களில் இரண்டாவது இடத்தையும் மந்தனா பிடித்திருந்தார்.
2024-இல் அனைத்து ரக கிரிக்கெட் போட்டிகளில், ஒரு பெண் ஆட்டக்காரர் எடுத்த அதிக சர்வதேச ரன்களுக்கான சாதனையை மந்தனா படைத்திருந்தார். பின்னர், அடுத்த ஆண்டே தனது முந்தைய சாதனையை மீண்டும் மந்தனா முறியடித்தார். இந்தச் சாதனை, 2025-ஆம் ஆண்டின் 'பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை'யாக மந்தனா தேர்ந்தெடுக்கப்படுவதற்கு வழிவகுத்தது.
'டைம்' இதழால் வெளியிடப்பட்ட உலகளாவிய தரவரிசை முன்னோட்ட பட்டியலில் விளையாட்டு ஜாம்பவான்களான மெஸ்ஸி, ரொனால்டோ, லெப்ரான் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.