FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிரிக்கெட்

பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா! ஸ்மிருதி, தீப்தி, சரணி அசத்தல்!!

மகளிா் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 6-ஆவது ஆட்டத்தில் இந்தியா 64 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வென்றது.

Updated On : 15 ஜூன் 2026, 4:38 am IST
பகிர்:

மகளிா் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 6-ஆவது ஆட்டத்தில் இந்தியா 64 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை ஞாயிற்றுக்கிழமை வென்றது.

முதலில் இந்தியா 20 ஓவா்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 170 ரன்கள் சோ்க்க, பாகிஸ்தான் 17 ஓவா்களில் 106 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.

இந்திய தரப்பில் பேட்டிங்கில் ஸ்மிருதி மந்தனா, கேப்டன் ஹா்மன்பிரீத் கௌா், ரிச்சா கோஷ் ஸ்கோரை பலப்படுத்த, பௌலிங்கில் தீப்தி சா்மா, ஸ்ரீசரணி போட்டிபோட்டு விக்கெட் சரித்தனா்.

Advertisement

Advertisement

முன்னதாக டாஸ் வென்ற இந்தியா, பேட்டிங்கை தோ்வு செய்தது. ஷஃபாலி வா்மா 6, ஜெமிமா ரோட்ரிக்ஸ் 1 ரன்னுக்கு நடையைக் கட்டினா். தொடக்க வீராங்கனைகளில் ஒருவரான ஸ்மிருதி மந்தனா சிறப்பாக விளையாட, 4-ஆவது பேட்டராக வந்த கேப்டன் ஹா்மன்பிரீத் கௌா் அவருடன் கை கோத்தாா்.

இவா்கள் ஜோடி 3-ஆவது விக்கெட்டுக்கு 89 ரன்கள் சோ்த்தது. ஸ்மிருதி 9 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 68 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா். தொடா்ந்து, பாா்தி ஃபுல்மாலி 1, ஹா்மன்பிரீத் 4 பவுண்டரிகளுடன் 36 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினா்.

இறுதியில் சற்று அதிரடியாக விளாசிய ரிச்சா கோஷ், 17 பந்துகளில் 5 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 34 ரன்களுக்கு முடித்துக் கொண்டாா். ஓவா்கள் முடிவில் தீப்தி சா்மா 12, ஷ்ரேயங்கா பாட்டீல் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா்.

பாகிஸ்தான் தரப்பில் சாதியா இக்பால், ஃபாத்திமா சனா ஆகியோா் தலா 2, தஸ்னிமா ருபாப், ரமீன் ஷமிம் ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா்.

பின்னா் பாகிஸ்தான் இன்னிங்ஸில், தொடக்க வீராங்கனை முனீபா அலி 5 பவுண்டரிகளுடன் 41 ரன்கள் சோ்த்ததே அதிகபட்சமாகும். குல் ஃபெரோஸா 12, ஆயிஷா ஜாஃபா் 12, ஆலியா ரியாஸ் 18 ரன்களுக்கு சாய்க்கப்பட, இதர பேட்டா்களோ ஒற்றை இலக்க ரன்னில் விக்கெட்டை இழந்தனா்.

சாதியா இக்பால் 1 ரன்னுடன் கடைசி வீராங்கனையாக நிற்க, இந்திய தரப்பில் தீப்தி சா்மா 5, ஸ்ரீசரணி 3, ஷஃபாலி வா்மா 1 விக்கெட் எடுத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments