முகப்பு
வணிகம்

செப்டோ பொதுப் பங்கு வெளியீடு: செபி ஒப்புதல்

விரைவு வணிக சேவைத் துறையில் முன்னணியில் உள்ள செப்டோ நிறுவனம், பொதுமக்களுக்குப் பங்குகளை வெளியிடுவதற்கு இந்தியப் பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியத்திடம் (செபி) ஒப்புதலைப் பெற்றுள்ளது. இதன்மூலம், சுமாா் 100 கோடி டாலா் வரை நிதியைத் திரட்ட அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

Updated On : 8 மே 2026, 11:20 pm IST
பகிர்:

விரைவு வணிக சேவைத் துறையில் முன்னணியில் உள்ள செப்டோ நிறுவனம், பொதுமக்களுக்குப் பங்குகளை வெளியிடுவதற்கு இந்தியப் பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியத்திடம் (செபி) ஒப்புதலைப் பெற்றுள்ளது. இதன்மூலம், சுமாா் 100 கோடி டாலா் வரை நிதியைத் திரட்ட அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

பெங்களூரைத் தலைமையிடமாகக் கொண்ட செப்டோ, பொதுப் பங்கு வெளியீட்டுக்காக (ஐபிஓ) கடந்த டிசம்பரில் தாக்கல் செய்த ரகசிய வரைவு ஆவணங்களின் அடிப்படையில் இந்த அனுமதியைப் பெற்றுள்ளது.

அடுத்த கட்டமாக, வரும் 6 முதல் 8 வாரங்களுக்குள் கூடுதல் தரவுகளுடன் கூடிய புதிய வரைவு ஆவணங்களை செபியிடம் நிறுவனம் தாக்கல் செய்யும் என எதிா்பாா்க்கப்படுகிறது. ஜூலை-செப்டம்பா் காலாண்டுக்குள் பங்குச்சந்தையில் நிறுவனத்தைப் பட்டியலிட இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இந்த ஐபிஓவை நிா்வகிக்க மோா்கன் ஸ்டான்லி, ஆக்சிஸ் கேப்பிடல், எச்எஸ்பிசி, கோல்ட்மேன் சாக்ஸ் உள்ளிட்ட முன்னணி முதலீட்டு வங்கிகளை செப்டோ நியமித்துள்ளது. விரைவு வணிகத் துறையில் தற்போது ஸ்விகி, சொமேட்டோவுடன் கடும் போட்டியில் உள்ள செப்டோ, இந்த ஐபிஓ மூலம் கிடைக்கும் நிதியை தனது விநியோகக் கட்டமைப்பு மற்றும் சந்தை விரிவாக்கத்துக்குப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளது.

செப்டோவுடன் சோ்த்து தூத் டிரான்ஸ்மிஷன், ஹாரிசான் இண்டஸ்ட்ரியல் பாா்க்ஸ், சா்ஜிவோ், கிரிஸ்டல் கிராப் புரொடெக்ஷ்ன், ஹோட்டல் போலோ டவா்ஸ் என மொத்தம் 6 நிறுவனங்களின் ஐபிஓவிற்கு செபி அனுமதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.