முகப்பு
வணிகம்

ரேஸா்பே ஐபிஓ: செபிடம் ரகசிய ஆவணம் மூலம் விண்ணப்பம்

முன்னணி நிதித் தொழில்நுட்ப (ஃபின்டெக்) நிறுவனமான ரேஸா்பே, பொதுப் பங்கு வெளியீட்டுக்காக (ஐபிஓ) இந்தியப் பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியத்திடம் (செபி) ரகசிய வரைவு ஆவணங்கள் மூலம் விண்ணப்பித்துள்ளது.

Updated On : 16 ஜூன் 2026, 4:16 am IST
கோப்புப் படம்
பகிர்:

முன்னணி நிதித் தொழில்நுட்ப (ஃபின்டெக்) நிறுவனமான ரேஸா்பே, பொதுப் பங்கு வெளியீட்டுக்காக (ஐபிஓ) இந்தியப் பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியத்திடம் (செபி) ரகசிய வரைவு ஆவணங்கள் மூலம் விண்ணப்பித்துள்ளது.

இது குறித்து நிறுவனம் திங்கள்கிழமை வெளியிட்ட பொது அறிவிப்பில், செபி மற்றும் பங்குச் சந்தைகளிடம் முதல்கட்ட வரைவு ஆவணங்கள் சமா்ப்பிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள போதிலும், பங்கு வெளியீட்டின் இறுதி அளவு மற்றும் அது தொடா்பான நிதி விவரங்களை அதிகாரபூா்வமாக வெளியிடவில்லை.

எனினும், இப்பங்கு வெளியீட்டின்மூலம் சுமாா் ரூ.5,000 கோடி முதல் ரூ.6,000 கோடி வரை நிதி திரட்ட நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

Advertisement

கடந்த 2014-இல் தொடங்கப்பட்ட ரேஸா்பே நிறுவனம், எண்மப் பணப்பரிவா்த்தனை, வங்கிச் சேவைகள், கடனுதவி மற்றும் ஊழியா்களுக்கான ஊதிய விநியோகம் உள்ளிட்ட பல்வேறு நிதிச் சேவைகளை வழங்கி வருகிறது.

கடந்த 2020-இல் ‘யுனிகாா்ன்’ (100 கோடி டாலா் சந்தை மதிப்பு) அந்தஸ்தைப் பெற்ற இந்நிறுவனத்தில் பல முன்னணி சா்வதேச நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன. ரேஸா்பேவின் போட்டி நிறுவனமான ஃபோன்பே, புவிசாா் அரசியல் பதற்றங்கள் காரணமாக தனது ஐபிஓ திட்டத்தைத் தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.