முகப்பு
இந்தியா

பாரதத்தின் வளா்ச்சிப் பயணம்!

சுதந்திரத்துக்குப் பிறகு பாரதத்தில் கடந்த பத்து ஆண்டுகளில் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றம் உலகையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.

Updated On : 26 மே 2026, 3:09 am IST
குடியரசு துணைத்தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் - கோப்புப் படம்
பகிர்:

குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன்

சுதந்திரத்துக்குப் பிறகு பாரதத்தில் கடந்த பத்து ஆண்டுகளில் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றம் உலகையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. சுமார் 25 கோடி மக்கள் வறுமையிலிருந்து வெளியேறி கௌரவமான வாழ்க்கையை அடைந்துள்ளனர். இதுவரை, வீடற்ற ஏழைகளுக்காக 4 கோடி நிரந்தர வீடுகள் கட்டப்பட்டுள்ளன. ஒவ்வொரு குடும்பமும் வங்கிச் சேவைகளைப் பெற்றுள்ளனர். அதன்மூலம் அனைத்துத் தரப்பு மக்களின் தொழில் மேம்பாடும் உறுதிப்பட்டு வருகிறது.

திறந்தவெளி கழிப்பறை இல்லாத நாடாக பாரதம் சுகாதாரத்தில் முன்னேற வேண்டுமென விரும்பினோம். 60 மாதங்களுக்குள் 60 கோடி மக்களுக்கு அதை தேசம் சாத்தியமாக்கியிருக்கிறது.

Advertisement

Advertisement

கிராமத்தில் மருத்துவ வசதி கிடைக்காமல் அவதிப்பட்டவர்களை இளம்வயதில் பார்த்திருக்கிறேன். அவர்களது குடும்பத்தின் வேதனையைக் கண்டு வருந்தியிருக்கிறேன். தற்போது மருத்துவ வசதிகள் அனைவருக்கும் கிடைப்பதற்கான உறுதியோடு "ஆயுஷ்மான் பாரத்' திட்டம் செயல்படுகிறது. நாடு முழுவதும் 44 கோடி மக்கள் ரூ.5 லட்சம் மதிப்புள்ள மருத்துவக் காப்பீடு பெற்றுள்ளனர். கடந்த ஆண்டில் 2.5 கோடி மக்கள் இலவச மருத்துவ சிகிச்சை பெற்றுள்ளனர்.

நடுத்தரக் குடும்பங்களில் முதியவர்களுக்கான மருத்துவச் செலவு கடினமானதாக இருந்த சூழல் மாறிக் கொண்டு வருகிறது. 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் "வயோபந்தனா' திட்டத்தில் இலவச மருத்துவ வசதி பெற்றுள்ளனர். மூத்த குடிமக்களுக்கான சிறப்பு மருத்துவமனைகளும் இயங்குகின்றன. சென்னை கிண்டியில் மூத்த குடிமக்களுக்கான சிறப்பு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.

கல்வி கற்கும் மாணவர்களுக்கு பிரதமரின் வித்யாலட்சுமி திட்டம் மூலம் கடனுதவியும், தெருவோரம் வியாபாரம் செய்வோருக்கு பிரதமரின் ஸ்வநிதி திட்டம் மூலம் கடனுதவியும் என அனைத்துத் தரப்பு மக்களுக்குமான கடனுதவி ஆதரவு அளிக்கப்படுகிறது.

மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு அரசு இத்தகைய வாய்ப்புகளை வழங்கியுள்ளது என்றால், விவசாயிகள் தங்கள் உழைப்பால் 350 மில்லியன் டன் தானிய உற்பத்தி செய்து பாரதத்தை உலகின் 2-ஆவது பெரிய உணவு உற்பத்தி நாடாக உயர்த்தியிருக்கிறார்கள். அரிசி உற்பத்தியில் பாரதம் இரண்டாவது பெரிய நாடாக வளர்ந்து ஏற்றுமதியால் உலகையே அரவணைக்கிறது. அரசும் ஆண்டுதோறும் ரூ. 6,000 விவசாயிகளுக்கு வழங்குகிறது. இதுவரை ரூ. 4 லட்சம் கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் சேர்க்கப்பட்டிருக்கிறது.

ஒரு காலத்தில் பட்டினி மரணங்கள் நிகழ்ந்துவந்த நிலையில் தற்போது பிரதமரின் "கரீப் கல்யாண்' திட்டத்தில் ஒவ்வோர் ஆண்டும் ரூ. 2.3 லட்சம் கோடி செலவில் 80 கோடி மக்களுக்கு 5 கிலோ உணவு தானியம் விலையின்றி வழங்கப்படுகிறது. இவையெல்லாம் தனிமனிதர்களின் வாழ்க்கையில் நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது.

தேசத்தின் வளர்ச்சியில் பெண்களின் பங்களிப்பை உறுதி செய்ய வாய்ப்புகள் திரளாக அதிகரித்துள்ளன. அவர்களின் அன்றாட வாழ்வை எளிதாக்கவும், அவர்களின் ஆரோக்கியத்தை மனதில்கொண்டும் ஏறத்தாழ 10 கோடி மக்களுக்கு இலவச எரிவாயு இணைப்புகள் நாடு முழுவதும் வழங்கப்பட்டிருக்கின்றன. "ஜல் ஜீவன் மிஷன்' மூலம் ஐந்து ஆண்டுகளில், 12.5 கோடி புதிய குடும்பங்களுக்கு குழாய் மூலம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுகிறது.

இதுவரை அரசின் கடனுதவியால் மூன்று கோடிக்கும் அதிகமான லட்சாதிபதி சகோதரிகள் உருவாகியிருக்கிறார்கள். விவசாயம், கல்வி, மருத்துவம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், விண்வெளித் தொழில்நுட்பம் என அனைத்துத் துறைகளிலும் பெண்கள் முன்னேறி வருகின்றனர். ஆயுதப்படைகளிலும் போர்ப்படையிலும் நிரந்தர உயர் பதவிகளில் அதிக அளவில் பங்கேற்கின்றனர். "நாரி சக்தி வந்தன் சட்டம்' நாடாளுமன்றத்திலும் மாநில சட்டப்பேரவைகளிலும் அவர்களின் பங்கேற்பை மேலும் வலுப்படுத்தும்.

இளைய தலைமுறைக்காக கடந்த பத்து ஆண்டுகளில் மட்டும் 13 புதிய ஐஐடி-க்கள் தொடங்கப்பட்டு, நாடு முழுவதும் இன்றைக்கு மொத்தம் 23 ஐஐடி நிறுவனங்கள் இயங்குகின்றன. ஐஐஎம் 13-லிருந்து 21-ஆக அதிகரித்துள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனைகள் 7-லிலிருந்து 23-ஆக மூன்று மடங்கும், மருத்துவக் கல்லூரிகள் 387-லிருந்து 823-ஆக இரு மடங்கும் அதிகரித்துள்ளன. மருத்துவ மாணவர்களுக்கான இடங்கள் 51,348-ஆக இருந்த நிலையிலிருந்து 1,29,603 என்ற அளவில் உயர்ந்துள்ளது பெருமைக்குரியது. பாரதத்தின் வளமான வலிமையான எதிர்காலத்துக்கு இத்தகைய சிறந்த கல்வி நிறுவனங்களின் செயல்பாடே அடித்தளமாக அமைகிறது.

பட்டியல் வகுப்பினர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு பிரதமரின் "ஏகலைவா' திட்டத்தின் மூலம் கல்வி உதவித்தொகையும், பழங்குடியின மாணவர்களுக்கு உறைவிடப் பள்ளிகளும் மாணவர்களின் முன்னேற்றத்தை உறுதிப்படுத்துகின்றன.

செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) துறையில் உலகளாவிய நிறுவனங்கள் பாரதத்தைத் தங்களின் மையமாகத் தேர்வு செய்வதால் முதலீடுகள் பன்மடங்கு அதிகரித்துள்ளன. செமிகண்டக்டர் உற்பத்தியில் பாரதம் தற்போது உலகுக்கே முன்மாதிரியாகத் திகழ்கிறது. அறிதிறன்பேசிகள் இறக்குமதி செய்து கொண்டிருந்த நாம், தற்போது 3,000 கோடி அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான அறிதிறன்பேசிகளை ஏற்றுமதி செய்யும் நாடாக மாறி இருக்கிறோம். இவையெல்லாம் அடுத்த தலைமுறையின் வளமான வாழ்வுக்கான அடித்தளம்.

உள்கட்டமைப்பு வசதிகளில் நாம் உலகத் தரத்துக்கு முன்னேறி வருகிறோம். ரயில்வே துறை ஏறத்தாழ 99% மின்மயமாக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 164 வந்தே பாரத் ரயில்கள் புதிய சகாப்தத்தை ஏற்படுத்தியுள்ளன. விமான நிலையங்களின் எண்ணிக்கையும் 74-லிருந்து 163-ஆக அதிகரித்துள்ளன.

தமிழகத்தின் ஆன்மிகச் சுற்றுலா, பொருளாதார மேம்பாட்டுக்கு வாய்ப்பாக ராமேசுவரம்- பாம்பன் இடையே புதிய பாம்பன் பாலம் பாரதத்தின் முதல் செங்குத்துத் தூக்கு பாலமாகக் கட்டப்பட்டுள்ளது தமிழர்களுக்குப் பெருமை. தமிழகத்துக்கான ரயில்வே நிதி ஒதுக்கீடு பத்து ஆண்டுகளுக்கு முன்பு ரூ. 880 கோடியாக இருந்தது. ஆனால், 2026-27-இல் ரூ. 7,600 கோடியாக உயர்ந்துள்ளது.

நாடு முழுவதும் உலகத்தரத்தில் நான்குவழிச் சாலைகளும், எட்டுவழிச் சாலைகளுமாக குக்கிராமங்கள் வரை சாலை இணைப்பு பாரதத்தின் வளர்ச்சிக்காக வலிமையுடன் கட்டமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் கடந்த 10 ஆண்டுகளில் 4,000 கி.மீட்டருக்கும் அதிகமாக தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

வடகிழக்கு மாநிலங்கள் நலத் திட்டங்களைப் பெரிய அளவில் பெறாத நிலையில் அவை பயங்கரவாதிகளின் கூடமாக இருந்தன. தற்போது, அந்த நிலை மாறி அங்குள்ள மக்களும் பாரதத்தின் முன்னேற்றத்துக்குத் தங்களின் பங்களிப்பை மகிழ்ச்சியுடன் நிறைவாக அளிக்கின்றனர்.

வளர்ச்சி என்பது அனைத்துப் பிராந்தியங்களையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்று நான் முழுமையாக நம்புகிறேன். ஒருகாலத்தில் இந்தியாவின் கடைசி கிராமங்களாகக் கருதப்பட்ட எல்லைப்புற கிராமங்கள், தற்போது முதல் கிராமங்களாக துடிப்பு மிக்க கிராமங்கள் திட்டத்தால் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் வளர்ச்சி பெற்று வருகின்றன.

அண்மையில் நாகாலாந்து, மிúஸôரம், திரிபுரா, சிக்கிம் மாநிலங்களுக்குச் சென்றிருந்தபோது அங்கு போக்குவரத்து வசதிகளுடன் அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளும் மேம்பட்டு வருவதைக் கண்டு மகிழ்ச்சியுற்றேன். வடகிழக்கு மாநிலங்களில் மட்டும் சுமார் 7,200 கி.மீ. அளவுக்கு 10 ஆண்டுகளில் தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

ரயில்வே இணைப்பும் தற்போது வெகு விரைவாக நடைபெற்று வருகிறது. அருணாசல பிரதேசம், அஸ்ஸôம், திரிபுரா, மிúஸôரம், நாகாலாந்து ஆகியவை நாட்டின் பிற பகுதிகளுடன் ரயில் இணைப்பைப் பெற்றுவிட்டன. விரைவில், சிக்கிம், மணிப்பூர், மேகாலயம் ஆகிய மாநிலங்களும் இணைப்பைப் பெறுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

இவை அனைத்தும் "பிரகதி' திட்டத்தின் மூலம் பிரதமரின் நேரடிக் கண்காணிப்பில் செயல்படுத்தப்பட்டுள்ளன. வடகிழக்கு மாநிலங்கள் தேசத்தின் அஷ்டலட்சுமிகள் என்று பிரதமர் குறிப்பிட்டதை மகிழ்ச்சியோடு நினைவு கூர்கிறேன்.

2047-ஆம் ஆண்டு பாரதத்தின் நூற்றாண்டு சுதந்திர தினத்தைக் கொண்டாடும்போது, உலகுக்கு வழிகாட்டும் தேசமாக உலகின் மாபெரும் சக்தியாக வளர்ந்த தேசமாக உன்னத நிலையை எட்ட வேண்டும் என பாரத பிரதமர் இலக்கு நிர்ணயித்துக் கொண்டு அதற்கான அடித்தளத்தை உருவாக்கி வருகிறார். சரியான கொள்கை முடிவுகளாலும், சட்டத்தை நிலைநிறுத்துவதாலும் தேசத்தில் அமைதி நிலவுகிறது; வளர்ச்சிக்கான பாதைகள் திறந்துள்ளன.

தேசத்து இளைஞர்களே, ஒரு சுதந்திரப் போராட்ட வீரரின் மனதில் சுதந்திரம் மட்டுமே குறிக்கோளாக இருந்ததைப் போல இன்றைக்கு நமது தேசத்தின் வளர்ச்சி பற்றிய சிந்தனையே இளைஞர்கள் மனதில் குறிக்கோளாக வளர வேண்டும். கொடிகாத்த திருப்பூர் குமரனைப் போல லட்சிய வீரர்களாக நாடு முன்னேற வேண்டும் என்கிற சிந்தனையும் உழைப்பும் நாட்டுப்பற்றுடன் இளைஞர்களிடம் வெளிப்படுமேயானால் 2047-ஆம் ஆண்டில் வளர்ந்த உன்னத பாரதம் என்ற கனவு நனவாகும்.