நசுக்கப்படும் நகை மதிப்பீட்டாளர்கள்!
இன்று பெரும்பாலான வங்கிகள் நகைக்கடன் வழங்க, நகை மதிப்பீட்டாளர்களை (அப்ரெய்சர்ஸ்) நம்பித்தான் இயங்கிவருகின்றன. அவர்கள்தான் வாடிக்கையாளர்கள் கொண்டுவரும் தங்க நகைகளை உரசிப் பார்த்து, எடைபோட்டு, எவ்வளவு கடன் தரலாம் என்று பரிந்துரை செய்கிறார்கள்.
இன்று பெரும்பாலான வங்கிகள் நகைக்கடன் வழங்க, நகை மதிப்பீட்டாளர்களை (அப்ரெய்சர்ஸ்) நம்பித்தான் இயங்கிவருகின்றன. அவர்கள்தான் வாடிக்கையாளர்கள் கொண்டுவரும் தங்க நகைகளை உரசிப் பார்த்து, எடைபோட்டு, எவ்வளவு கடன் தரலாம் என்று பரிந்துரை செய்கிறார்கள்.
இப்படிப்பட்ட நகை மதிப்பீட்டாளர்களை "சில' கூட்டுறவு வங்கி நிர்வாகங்கள் நடத்தும்விதம்தான் மோசமாகவும் பரிதாபமாகவும் உள்ளது.
நகை மதிப்பீட்டாளர்கள் நிரந்தர ஊழியர்கள் இல்லை. கமிஷன் அடிப்படையில்தான் சம்பளம். இந்தக் கமிஷனும் முழுமையாகக் கிடைப்பதில்லை.
Advertisement
Advertisement
ஒரு லட்ச ரூபாய் நகைக்கடன்பெறும் வாடிக்கையாளர், நகை மதிப்பீட்டாளர் கட்டணமாக வங்கிக்கு ரூ.250 செலுத்துகிறார். ஆனால் இதில் மதிப்பீட்டாளருக்குக் கிடைப்பது வெறும் 70 ரூபாய் மட்டுமே. (வாடிக்கையாளர்களோ தாங்கள் மதிப்பீட்டாளருக்காகத் தரும் தொகையை முழுக்க அவரே பெற்றுக்கொள்கிறார் என்று நினைக்கின்றனர்.)
மாதம் சுமார் 10,000 ரூபாய் வரை சம்பளம் என்றாலும் அதில் ரூ.3,000 சில கிளைகளில் மேலாளரால் வாங்கிக்கொள்ளப்படும். "இது அப்ரென்டிஸ் பெறும் பெண்களுக்காக' என்று சொல்லப்படும். அப்ரென்டிஸ் பெண்களுக்கு போர்டிலிருந்து சம்பளம் வந்துவிடும். அப்படியானால் இந்தத் தொகை?
சில கிளைகளில், வங்கி மேலாளர் வெளியூரிலிருந்து வந்தால் அவரை அழைத்துக் கொண்டுவருவதும் கொண்டுபோய் விடுவதும் மதிப்பீட்டாளருடைய வேலைதான்! தீபாவளி, பொங்கலுக்குக் கணிசமான தொகையை அவர்களுக்குக் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் மதிப்பீட்டாளர் வேலையில் நீடிக்க முடியாது.
இதுபோக வங்கிக்கு வரும் உள் தணிக்கையாளர்கள், கூட்டுறவு தணிக்கையாளர்கள் ஆகியோருக்கு சாப்பாட்டுச் செலவு முதல் ரயில் டிக்கெட் செலவு வரை மதிப்பீட்டாளர் தலையிலேயே சுமத்திவிடுவார்கள். (இதற்கெல்லாம் மறவாமல் அரசு கணக்கிலிருந்தும் பணத்தை எடுத்து வைத்துக்கொள்வார்கள்.)
ஒவ்வொரு மதிப்பீட்டாளரும் கண்டிப்பாக 2 லட்சம் ரூபாய் டெபாசிட் கட்ட வேண்டும். சில வங்கிகளில் வருமானத்தில் 30 சதவீதத்தைப் பிடித்துக்கொண்டு அதை செக்யூரிட்டி டெபாசிட்டில் வைத்து ஓராண்டு கழித்துத்தான் அந்தத் தொகையைத் தருவார்கள். அதைத் திருப்பிப்பெறுவதற்கும் கிளை மேலாளரைக் கவனிக்க வேண்டும்.
பல வங்கிகளில் நகை மதிப்பீட்டாளர்களை ஒரு பியூன் போல நடத்துகிறார்கள். சில வங்கிகளில் வங்கி மேலாளரும் வங்கி ஊழியர்களும் செய்யும் தவறுகளுக்கு நகை மதிப்பீட்டாளர் பலிகடாவாக்கப்படுவதும் உண்டு.
முன்பெல்லாம் பரம்பரையாக நகைத் தொழில்செய்துவந்த விஸ்வகர்மாக்களை (ஆசாரியார்) மட்டுமே நகை மதிப்பீட்டாளர்களாக நியமித்தார்கள். இப்போது பல நிறுவனங்கள் 15 நாள்கள் பயிற்சி கொடுத்து நகையைப் பற்றித் தெரியாதவர்களையும் மதிப்பீட்டாளர்களாக்கிவிடுகின்றன.
விளைவு, கவரிங் நகைகள் கூட தங்க நகைகளாக மதிப்பிடப்பட்டு அடைமானத்துக்கு வந்துவிடுகின்றன. மாநில அரசுக்குச் சொந்தமான கூட்டுறவு வங்கிகளில்தான் அதிக அளவில் இந்தத் தவறுகள் நடக்கின்றன. (அரசுடைமை வங்கிகளிலும் இது எப்போதாவது நடக்கிறது).
இந்தக் குறைகள் எல்லாம் நீங்க, நகை மதிப்பீட்டாளர்களை தமிழக அரசு நிரந்தர ஊழியர்களாக அறிவிக்க வேண்டும். அரசு ஊழியர்களைப் போல அவர்களுக்கும் நிரந்தர ஊதியம், ஓய்வூதியம் வழங்க வேண்டும். வங்கி மேலாளர்கள், ஊழியர்களின் அச்சுறுத்தல் இல்லாமல் நேர்மையாக அவர்கள் பணிபுரியும் சூழலை உருவாக்க வேண்டும். நகை மதிப்பீட்டாளர்கள் நசுக்கப்படுவதை அரசு தடுக்க வேண்டும்.