முகப்பு
கருத்துக் களம்

கல்லூரிப் படிப்பை தேர்வு செய்ய எளிய வழி

பிளஸ் டூ' தேர்வு முடிவுகள் வெளியாகிவிட்டன. அடுத்து என்ன படிக்கலாம், எங்கே படிக்கலாம் என்பதைத் தேர்வு செய்ய மாணவர்களும் பெற்றோர்களும் தீவிரமாக முடிவு செய்யும் நேரம் இது.

Updated On : 13 மே 2013, 4:45 am IST
பகிர்:

பிளஸ் டூ' தேர்வு முடிவுகள் வெளியாகிவிட்டன. அடுத்து என்ன படிக்கலாம், எங்கே படிக்கலாம் என்பதைத் தேர்வு செய்ய மாணவர்களும் பெற்றோர்களும் தீவிரமாக முடிவு செய்யும் நேரம் இது. மாணவர்களைக் கவர்ந்திழுக்க கல்வி நிறுவனங்கள் செய்தித்தாள்களிலும் காட்சி ஊடகங்களிலும் விளம்பரங்களைத் தொடங்கிவிட்டனர். இடைத் தரகர்களும் மாணவர்களைக் குறிவைத்து வலைவீசத் தொடங்கிவிட்டனர்.

ஏற்கெனவே ஓரளவுக்கு முடிவு செய்து வைத்திருந்தாலும் கடைசி நேரத்தில் மற்றவர்களின் தடாலடியான பேச்சுகளில் சற்றே மனம் கலங்கும் அர்ஜுனர்களும் உண்டு என்பதால் இந்த உபதேசம் செய்யப்படுகிறது.

பனிரெண்டாம் வகுப்பில் எந்த பாடப்பிரிவை தேர்வு செய்து படித்திருந்தாலும் அனைத்து பாடப் பிரிவினைச் சேர்ந்த மாணவர்களுக்கும் அந்தந்த பாடமுறைகளிலும், வெளியிலும் ஏராளமான வாய்ப்புகள் இருக்கின்றன.

Advertisement

Advertisement

தமிழகத்தில் எண்ணற்ற பல்கலைக் கழகங்கள், அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகள், சுயநிதிக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், வேளாண், கால்நடை பல்கலைக்கழகங்கள், மீன்வள, தோட்டக்கலை, பிளாஸ்டிக் தொழில்நுட்பக் கல்லூரிகள் இசை மற்றும் ஓவியக் கல்லூரிகள், அரசு, தனியார், சுயநிதிப் பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகள், பாலிடெக்னிக்குகள் என பல்கிப் பெருகி இருக்கின்றன.

அனைத்துத் துறைகளிலும் கல்வியாளர்கள், நிபுணர்கள், ஊழியர்களுக்கான தேவையும் இருக்கிறது. ஆனால் சமீபத்தில் கல்வி என்றாலே பொறியியல், மருத்துவம் போன்றவைதான் என்றும், ஏனைய கல்வியெல்லாம் பயனற்றது என்றும் ஒரு மாயை உருவாக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, தனது பிள்ளையின் கற்கும் திறன் மற்றும் ஆர்வத்தையெல்லாம் கணக்கில் கொள்ளாமல், "பார்டரில்' பாஸ் செய்த பிள்ளையைக் கூட எப்படியாவது, எல்லா சொத்தையும் விற்றாவது, எத்தனை லட்சம் வேண்டுமானாலும் செலவு செய்து பொறியாளர் அல்லது மருத்துவராக்கும் முயற்சியில் பெற்றோர் இறங்கி வருகின்றனர். இது தவறு. நோக்கம் உயர்வாக இருக்கலாம் அதற்கேற்ற உழைப்பும் ஊக்கமும் மாணவரிடம் இல்லாவிட்டால் முயற்சி வீணாகிவிடும்.

தமிழகத்தில் 575-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளும், 15-க்கும் மேற்பட்ட பொறியியல் சார்ந்த நிகர்நிலை பல்கலைக் கழகங்களும், ஆண்டுதோறும் பல லட்சம் பொறியியல் பட்டதாரிகளைத் தயாரித்து அனுப்புகின்றன. வெளியில் வரும் அவர்களில் 25 விழுக்காட்டினருக்குக் கூட வேலை கிடைப்பதில்லை, அந்த 25 விழுக்காட்டிலும் கணிசமானவர்கள் ஏதேனும் ஒரு ஐ.டி. நிறுவனத்தில் உத்தரவாதமற்ற வேலையையே பெறுகின்றனர். தரமான கல்லூரிகளில், தகுதியுள்ள மாணவர்கள் மட்டுமே வளாகத் தேர்வு மூலம் வேலைவாய்ப்பைப் பெறுகின்றனர்.

கடந்த ஆண்டு "பிளஸ் டூ'வில் கணிதத்தில் 200-க்கு 200 மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களில் பலர், பொறியியல் பல்கலைக்கழகங்களில் முதல் ஆண்டிலேயே கணிதம் உள்ளிட்ட பெரும்பாலான பாடங்களில் தேர்ச்சிபெறவில்லை. இது பாடங்களை நன்கு புரிந்துகொண்டு பயிலாததன் விளைவைக் காட்டுகிறது. எனவே குருவி தலையில் பனங்காயை வைக்காதீர்கள்.

அங்ஙனமே மருத்துவக் கல்லூரிகளிலும் தனியார் நிறுவனங்களில் மாணவர்களின் மதிப்பெண், கல்வித்திறன், ஆர்வம், ஈடுபாடு போன்றவற்றை கவனத்தில் கொள்ளாமல் அதிகப் பணம் கொடுப்பவர்களுக்கே இடம் என்றாக்கி மக்களின் உயிரோடு விளையாட வைக்கும் நிலை தொடர்கிறது.

பொதுவாக ஒரு தொழில் நிறுவனத்திற்கு ஒரு சில பொறியாளர்களும், பல்திறன்பெற்ற அதிகப்படியான ஊழியர்களும்தான் தேவைப்படுவார்களேயொழிய எல்லாப் பணிகளிலும் நிலைகளிலும் பொறியாளர் மட்டுமே சேர்க்கப்படுவதில்லை. அங்ஙனமே மருத்துவம் சார்ந்த துறைகளிலும் ஒரு டாக்டர் என்றால் அவருக்கு உதவியாக பல நிலைகளிலான ஊழியர்கள் தேவைப்படுகிறார்கள். எனவேதான் பொறியியல், மருத்துவம் போன்ற படிப்புகளுடன் அதுசார்ந்த தொழில்களிலுள்ள வேலைவாய்ப்பிற்கு உகந்த படிப்புகளைப் படிப்பதும் அவசியமானதாகும். அடிப்படை கலை, அறிவியல் பாடங்களான இயற்பியல், கணிதம், வேதியியல், உயிரியல், பொருளாதாரம், புவியியல், வரலாறு, மொழி, இலக்கியம் போன்ற பாடங்களை அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளிலோ, பல்கலைக்கழக இசைவுபெற்ற சுய நிதிக் கல்லூரிகளிலோ படித்து மூன்றாண்டுகளில் பட்டம் பெறலாம்; மேலும் ஆர்வமிருந்தால் முதுகலைப் பட்ட வகுப்பில் சேரலாம். உடனே வேலைவாய்ப்பினைப் பெற விரும்பினால் மத்திய, மாநில அரசு ஆட்சிப் பணிகள், வங்கித் தேர்வுகள் ஆகியவற்றை எழுதலாம். பட்ட வகுப்பில் படிக்கும்போதே இதற்கான தேர்வுகளுக்குத் தயார் செய்துகொள்ளலாம்.

தனிஆர்வமுள்ள மாணவர்கள், ஓவியம், இசை, மொழி, இதழியல் போன்ற படிப்பிற்கு அதற்குரிய கல்லூரிகளில் சேர்ந்து பயிலலாம்.

பொறியியல் கல்வியைப் பொருத்தவரை இயல்பான ஆர்வமும், கணிதம், இயற்பியல் போன்றவற்றில் திறனும் உயர்ந்தபட்ச மதிப்பெண்னும் பெற்றவர்கள், அண்ணா பல்கலையின் ஒற்றைச் சாளர முறையிலோ அல்லது தரமான தனியார் நிறுவனங்களிலோ படிக்கலாம். அடிப்படை பொறியியல் பாடங்களுக்கு எக்காலத்திலும் வாய்ப்புள்ளது என்றாலும் உடனடி வாய்ப்புகளுக்கான தோல் தொழில்நுட்பம், ஜவுளித் தொழில்நுட்பம், உணவுப் பதப்படுத்தும் தொழில் நுட்பம், போக்குவரத்தியல் என வேலை வாய்ப்பளிக்கும் படிப்புகளைத் தேர்வு செய்யலாம்.

மருத்துவத்தைப் பொருத்தவரை ஓய்வு ஒழிச்சலின்றி, இரக்க உணர்வோடு, சகிப்புத் தன்மையோடு, தியாக உணர்வோடு பணியாற்ற விரும்பினால் சேரலாம்; மருத்துவம் படித்தால் ஏதேனும் ஒரு துறையில் சிறப்பு மேற்படிப்பும் படிப்பது மிகவும் நல்லது.

வேளாண் பல்கலை, கால்நடை பல்கலை வழங்கும் படிப்புகள் என்றென்றும் பசுமையான வாய்ப்புடைய துறையாக விளங்குகின்றன. அவற்றிலும் வெவ்வேறு அறிவியல் தொழில்நுட்ப பாடப்பிரிவுகள் நல்ல வேலைவாய்ப்பையும் பொது அறிவையும் வழங்கி, அகில இந்திய போட்டித் தேர்வான சிவில் சர்வீஸ் தேர்வுகளிலும் வெற்றியை ஈட்டிட வாய்ப்பளிக்கிறது.

கல்லூரிகள், பல்கலைக்கழகங்களைத் தேர்வு செய்வதற்கு முன்பே அவற்றின் உள் கட்டமைப்பு, ஆய்வக, நூலக வசதி, ஆசிரியர்களின் திறன் மற்றும் அனுபவம், முன்னாள் மாணவர்களுக்குக் கிடைத்துள்ள வேலைவாய்ப்புகள், விடுதி வசதி போன்றவற்றையெல்லாம் நன்கு விசாரித்தறிந்து விண்ணப்பிக்க வேண்டும்.

பொருளாதார வசதி குறைந்தவர்கள் பிளஸ் 2 முடித்தவுடன் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்வதோடு, தமிழகத் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் மூன்றாம் பிரிவு தேர்வுகளுக்கும் விண்ணப்பித்து தேர்வு எழுதி வேலைவாய்ப்பைப் பெற்று, பின்னர் பணியிலிருந்து கொண்டே படிக்கும் முயற்சியிலும் ஈடுபடலாம்.

மாணவர்களின், ஆர்வம், ஈடுபாடு, திறன், பெற்றோரின் பொருளாதாரச் சூழல் முதலியவற்றைக் கணக்கில்கொண்டு குடும்ப வாழ்வில் இழப்புகளோ, குழப்பங்களோ, நெருக்கடிகளோ வராத அளவிற்கு படிப்புகள் தேர்வு செய்யப்பட வேண்டும். படித்தவுடன் வேலைவாய்ப்புக்குள்ள வாய்ப்பையும் கணித்து தேர்வு செய்வது மிகவும் நல்லது. முறையான திட்டமிடலுடன் விரலுக்கேற்ற வீக்கமாக கல்லூரிகளையும் படிப்புகளையும் தேர்வு செய்தால் வெற்றிகரமாகப் படித்து முடித்து வேலைவாய்ப்பும் பெறலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.