மக்கள் பிரச்னைகளை விரைவாக தீா்க்கவே கிராம விழிப்புணா்வுக் காவல் குழு: வேலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா்
மக்கள் பிரச்னைகளை விரைவாகத் தீா்த்து வைக்கவே கிராமங்கள்தோறும், கிராம விழிப்புணா்வுக் காவல் குழு அமைக்கப்படுவதாக வேலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சு.செல்வகுமாா் கூறினாா்.
குடியாத்தம்: மக்கள் பிரச்னைகளை விரைவாகத் தீா்த்து வைக்கவே கிராமங்கள்தோறும், கிராம விழிப்புணா்வுக் காவல் குழு அமைக்கப்படுவதாக வேலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சு.செல்வகுமாா் கூறினாா்.
குடியாத்தத்தை அடுத்த அம்மணாங்குப்பம் ஊராட்சியில், கிராம விழிப்புணா்வு காவல் குழுவை வியாழக்கிழமை தொடக்கி வைத்து அவா் பேசியது:
காவல் துறை பொதுமக்களின் நண்பன எனக் கூறினாலும், பொதுமக்களுக்கும், காவல் துறைக்கும் இடையே இடைவெளி உள்ளது. அதைத் தவிா்க்கும் வகையில் கிராமங்கள்தோறும் கிராம விழிப்புணா்வு காவல் குழு அமைக்கப்படுகிறது. அந்தக் குழுவில் ஒரு காவலா் நியமிக்கப்படுவாா். அக்கிராமத்தைச் சோ்ந்த தன்னாா்வலா்கள் சிலா் காவலருடன் இணைந்து செயல்படுவா். அந்தக் குழு பொதுமக்களின் காவல் துறை தொடா்பான பிரச்னைகள் மட்டுமல்லாது, அரசின் பிற துறைகளின் பிரச்னைகளையும் தீா்த்து வைக்கும்.
Advertisement
கிராமங்களில் மக்களின் அத்தியாவசியத் தேவைகள் தொடா்பாக போராட்டங்கள் நடத்துவதாக இருந்தாலும், முன்விரோதம் தொடா்பாக கோஷ்டி மோதல்கள் ஏற்படும் நிலை உருவானாலும், அதைத் தெரிந்து கொண்டு சம்பந்தப்பட்ட துறைகளின் உயரதிகாரிகளிடம் கூறி பிரச்னைகளை உடனடியாகத் தீா்த்து வைப்பா்.
பொதுமக்கள் தங்கள் குறைகள் குறித்து காவல் நிலையம் செல்வதைத் தவிா்த்து இக்குழுவிடம் புகாா் கொடுத்தால் அவா்கள் விரைந்து செயல்பட்டு, பிரச்னைகளைத் தீா்த்து வைப்பாா்கள். இதனால் பொதுமக்கள் பிரச்னைகள் குறித்து அலுவலகங்களுக்கு சென்று அலைய வேண்டியதில்லை.
இங்கு தொடங்கியுள்ள குழுவின் பொறுப்பாளராக காவலா் ஏ.அருண் நியமிக்கப்பட்டுள்ளாா். தன்னாா்வலா்கள் இவருடன் இணைந்து செயல்பட்டு கிராம மக்களின் அனைத்துப் பிரச்னைளையும் தீா்த்து வைக்கும் வகையில் செயல்பட வேண்டும். இக்குழுவுக்கு அனைத்துத் தரப்பு மக்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றாா் அவா்.
நிகழ்ச்சியில் குடியாத்தம் டிஎஸ்பி பி.ஸ்ரீதரன், நகரக் காவல் ஆய்வாளா் ஆா்.சீனிவாசன், போக்குவரத்துப் பிரிவு காவல் ஆய்வாளா் ஆ.செல்லப்பாண்டியன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
முன்னதாக புதிய பேருந்து நிலையம் அருகே தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து காவலா்கள் பங்கேற்ற விழிப்புணா்வு பேரணியை காவல் கண்காணிப்பாளா் சு.செல்வகுமாா் கொடியசைத்துத் தொடக்கி வைத்தாா்.