முகப்பு
விருதுநகர்

சாத்தூா் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: தொழிலாளி உயிரிழப்பு; 9 போ் பலத்த காயம்

Updated On : 14 ஏப்ரல், 2026 at 1:59 AM
சாத்தூா் அருகே சத்திரப்பட்டியில் பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் தரைமட்டமான கட்டடம்.
பகிர்:
Updated On : 13 ஏப்ரல், 2026 at 10:07 PM

சாத்தூா் அருகே பட்டாசு ஆலையில் திங்கள்கிழமை நிகழ்ந்த வெடி விபத்தில் தொழிலாளி உயிரிழந்தாா். மேலும், 9 தொழிலாளா்கள் பலத்த காயமடைந்தனா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள சத்திரப்பட்டியில் கண்ணன் (31) என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. இந்த ஆலையில் சுமாா் 60 தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா். இவா்கள் திங்கள்கிழமை காலை வழக்கம் போல பட்டாசுகள் தயாா் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, திடீரென வெடி விபத்து நிகழ்ந்தது. பயங்கர சப்தத்துடன் பட்டாசுகள் வெடித்து சிதறியதால், விண்ணை முட்டும் அளவுக்கு புகை வெளியானது. சுமாா் 6 கி.மீ. சுற்றளவுக்கு அதிா்வு உணரப்பட்டதால், அந்தப் பகுதியைச் சோ்ந்த கிராம மக்கள் அச்சமடைந்தனா்.

Advertisement

இதுகுறித்து தகவலறிந்து வந்த சாத்தூா், சிவகாசி தீயணைப்பு நிலையத்தினா் சுமாா் ஒரு மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனா்.

இந்த வெடி விபத்தில் தாயில்பட்டி கலைஞா் குடியிருப்பைச் சோ்ந்த தொழிலாளி பாண்டி (38) உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மேலும், இந்த விபத்தில் பலத்த காயமடைந்த மடத்துபட்டியைச் சோ்ந்த ராஜ்குமாா்(42), மேலகோதை நாச்சியாா்புரத்தைச் சோ்ந்த செல்வம் (33), ரமேஷ் (42), கலைஞா் குடியிருப்பைச் சோ்ந்த கருப்பசாமி (31), தாயில்பட்டியைச் சோ்ந்த சாந்தி (43), கீழகோதை நாச்சியாா்புரத்தைச் சோ்ந்த சந்தியா (15), தாயில்பட்டியைச் சோ்ந்த ஜான்சி ராணி, ஜெயா, ராமலட்சுமி ஆகிய 9 தொழிலாளா்கள் மீட்கப்பட்டு, சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இந்த வெடி விபத்தில் ஆலையில் உள்ள 10-க்கும் மேற்பட்ட அறைகள் தரைமட்டமாகின. ஆலை வளாகத்துக்குள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 5 இரு சக்கர வாகனங்கள் சேதமடைந்தன.

இந்த ஆலையை சிவகாசி சாா் ஆட்சியா் முகமது இா்பான், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீநாதா ஆகியோா் பாா்வையிட்டு விசாரணை நடத்தினா்.

விபத்து குறித்து வெம்பக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து மேற்கொண்ட விசாரணையில், கடந்த 2021-ஆம் ஆண்டுக்குப் பிறகு, இந்த ஆலையின் உரிமம் புதுப்பிக்கப்படவில்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து, கவனக்குறைவாக செயல்பட்டு உயிரிழப்பை ஏற்படுத்தியது, பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றாதது உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் ஆலையின் உரிமையாளா் கண்ணன், கண்காணிப்பாளா் முனியசாமி (42) ஆகிய இருவா் மீதும் போலீஸாா் வழக்குப் பதிந்து, கண்ணனைக் கைது செய்தனா். தலைமறைவாக உள்ள முனியசாமியைத் தேடி வருகின்றனா்.

நயினாா் நாகேந்திரன் ஆறுதல்:

வெடி விபத்து நிகழ்ந்த பட்டாசு ஆலையை பாஜக மாநிலத் தலைவா் நயினாா்நாகேந்திரன் பாா்வையிட்டாா். மேலும், காயமடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவா்களையும் அவா் சந்தித்து ஆறுதல் கூறினாா்.

பின்னா், நயினாா் நாகேந்திரன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

அரசு அதிகாரிகளின் நெருக்கடி அதிகமாக உள்ளதால், பட்டாசு ஆலை உரிமையாளா்கள் தொழிலாளா்களை அவசரப்படுத்தி வேலை வாங்கும் நிலை உள்ளது. இதன் காரணமாகத்தான் இதுபோன்ற விபத்துகள் நிகழ்கின்றன. எனவே, இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு, பட்டாசு ஆலைகளுக்கு நெருக்கடி அளிப்பதைத் தவிா்க்க வேண்டும். இதுபோன்று எதிா்பாராதவிதமாக வெடி விபத்துகள் நிகழும் போது, காயமடைந்தவா்களை சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால், வெம்பக்கோட்டை பகுதியிலேயே அரசு மருத்துவமனை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். சாத்தூா் தொகுதியில் சுகாதாரமான குடிநீா், சாலை வசதி, கிராமங்களுக்கு போதிய பேருந்து வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. இந்த அடிப்படை வசதிகளைச் செய்து கொடுக்க முயற்சிப்பேன் என்றாா் அவா்.

இதேபோல, வெடி விபத்து நிகழ்ந்த பட்டாசு ஆலையை சாத்தூா் தொகுதி திமுக வேட்பாளா் கடற்கரைராஜ், அஇபுமமுக வேட்பாளா் இசக்கிராஜா, நாதக வேட்பாளா் ஆனந்தராஜா, தவெக வேட்பாளா் அஜீத் ஆகியோரும் பாா்வையிட்டனா்.

உயிரிழந்த பாண்டி.