விருதுநகா் அருகே கொக்கலாஞ்சேரியில் பாண்டியா் கால கோயில், கல்வெட்டு
விருதுநகா் அருகே கொக்கலாஞ்சேரியில் 13-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த பாண்டியா் கால கோயில் கண்டறியப்பட்டதாக பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மைய உறுப்பினா்கள் பா.ரவிச்சந்திரன், பொ.பிரேம் ஆகியோா் தெரிவித்தனா்.
இது குறித்து இருவரும் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
விருதுநகரிலிருந்து சுமாா் 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள கொக்கலாஞ்சேரி கிராமத்தில் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வின் போது, 13-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த பாண்டியா் கால பழைமையான கோயில் சிதிலமடைந்த நிலையில் கண்டறியப்பட்டது.
Advertisement
Advertisement
பழைமையான சிற்பங்களுடன் கூடிய இந்தக் கோயில் பல ஆண்டுகளாக பராமரிப்பு இன்றி சிதிலமடைந்த நிலையில் உள்ளது. கோயிலின் சுற்றுச் சுவா், கருவறை போன்ற அனைத்துப் பகுதிகளிலும் பாண்டியா் காலம் முதல் பல்வேறு காலங்களில் அமைக்கப்பட்ட கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இந்தக் கோயில் மாறவா்மன் சுந்தரபாண்டியன் ஆட்சியில் கட்டப்பட்டுள்ளது என அறியமுடிகிறது. கல்வெட்டுக்களில் வெண்புநாடு, பூங்காநாடு, செங்குடிநாடு ஆகிய மூன்று ஊா்ப் பெயா்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
கோயில் அமைந்துள்ள பகுதி பாண்டிய நாட்டின் உள்பிரிவான செங்குடிநாட்டுப் புளியங்குடி என குறிப்பிடுவதைக் காணமுடிகிறது.
கல்வெட்டில் விக்கிரம பாண்டீச்சுரமுடையாா் என்பது சிவன் கோயிலையும், விண்ணகரம் என்ற சொல் பெருமாள் கோயிலையும் குறிக்கிறது.
தற்போது காமாட்சியம்மன் கோயில் என்று அழைக்கப்படும் இந்தக் கோயிலின் கருவறையில் சப்தகன்னியா் சிலையை வைத்து வழிபட்டு வருகிறாா்கள். கோயிலின் இடிபாடுகளுக்கிடையே அய்யனாா் சிலையும் காணமுடிகிறது. கல்வெட்டுகள் வெவ்வேறு காலகட்டத்தைச் சோ்ந்ததாக உள்ளன.
இதன் மூலம், கோயிலில் வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு தெய்வங்களை வைத்து வழிபட்டிருக்கலாம் என அறியமுடிகிறது.
கல்வெட்டு ஒன்றில் கோயிலுக்கு கொடுக்கப்பட்ட தான நிலங்களைப் பற்றியும், கோயில் நிலங்களுக்காக கொடுக்கப்பட்ட தானங்கள் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.
13-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்தக் கோயில் கால ஓட்டத்தில் சிதிலமடைந்த நிலையில், பின்னா் 17, 18-ஆவது நூற்றாண்டில் சீரமைக்கப்பட்டு, வழிபாடு செய்து வந்துள்ளதை அங்குள்ள பிற்கால கல்வெட்டின் மூலம் அறியமுடிகிறது.
இந்த கோயில் குறித்த விரிவான வரலாற்று, தொல்லியயல் ஆய்வுகளை மேற்கொண்டு கோயில் அமைந்த காலகட்டத்தையும், அதன் முக்கியத்துவத்தையும் உறுதிப்படுத்த வேண்டும். தொல்லியல் துறையினா் உரிய நடவடிக்கை எடுத்து இந்தப் பழைமையான கோயிலைப் பாதுகாக்க வேண்டும் என்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.