முகப்பு
தினமணி கதிர்

மானம்

நடுப்பகல். தலைக்கு நேர் உச்சியில் சூரியன்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 10:17 AM
பகிர்:

நடுப்பகல். தலைக்கு நேர் உச்சியில் சூரியன்.

மேலிருந்து தலையை பார்ப்பதற்கு கவிழ்த்து வைத்த பானை போல இருக்கிறதோ என்னவோ வெயில், அடுப்பாக எரித்துக் கொண்டிருந்தது

எவ்வளவு தான் தண்ணீர் குடித்தாலும், அக்னி நட்சத்திர வெயிலுக்கு அனைத்தும் ஆவியாகிக் கொண்டிருந்தது.

நிழல் கூட வெயிலுக்கு பயந்து கால்களுக்கு கீழே பம்மிக் கிடந்தது.

அந்த கட்டிடத்தின், மேற்கூரை கான்கிரீட்டுக்கு போடப்பட்ட முட்டுக் கட்டைகளுக்கு நடுவே தானும் ஒரு கட்டையாக, உடல் சாய்த்து சோர்வாக, தளர்ந்து அமர்ந்து கொண்டாள், சித்தாள் வடிவு.

கெண்டைக்கால் இரண்டும் விண்..விண்.. என்று வலித்தது. கட்டையால் ஓங்கி, அடித்தது போல, இடுப்பை சுற்றி வலி பிசைந்தது.

தலை கிறுகிறுத்து மயக்கம் வருவது போல, சுற்றிக் கொண்டு வந்தது. தலையை தாங்கிக் கொள்ளலாம் என்றால் கையை தூக்க முடியவில்லை. கையை தரையில் ஊன்றிக் கொண்டாள்.

கொஞ்சம் படுத்துக் கொண்டால், தேவலாம் போல இருந்தது.

ஆனால் காண்ட்ராக்டர் பாலன் பார்த்தால் திட்டுவான். ஒரே மூச்சில் முடிக்க வேண்டிய வேலை. இன்னும் பாதி நாள் வேலை இருக்கிறது .

மேஸ்திரியிடம் சொல்லி விட்டு மெல்ல ஒதுங்கி வந்திருக்கிறாள். ஒரு பத்து நிமிடம் தான் ஓய்வு மீண்டும் வேலைக்குள் சென்றுவிட வேண்டும். படுத்தால் எழ முடியாது.

உடலை விட மனம் அதிகம் வலித்தது.

"சே.. என்ன பொழப்பு இது நாளெல்லாம் கல்லு தூக்கி, கலவை போட்டு, தட்டு எறிஞ்சி என்ன புண்ணியம்? நாள் கூலியா கிடைக்குற நூத்துக்கும், இருநூத்துக்கும் நாளெல்லாம் நாறாப் போனது தான் மிச்சம். அதுவும் ஒழுங்காகவா தர்றாக.. ஆம்பளைக்கு தர்றதுல பாதி கூட கெடைக்காது'.

நினைக்க நினைக்க எரிச்சலாக வந்தது வடிவுக்கு.

"அப்படி என்ன குறைச்சலா வேலை செஞ்சுட்டேன்? ஆம்பளைங்க செய்யுற அதே வேலையத்தானே நானுஞ் செய்யுறேன். எனக்கு மட்டும் என்ன பாதி வயிரா இருக்கு.. இல்லன்னா அரிசி பருப்பு தான் பாதி வெலக்கி கெடைக்குதா.. இதென்ன நியாயம்?'

நெஞ்செல்லாம் அடைத்துக் கொண்டு வந்தது வடிவுக்கு. குழந்தைகளை நினைத்துக் கொண்டாள்.

இருக்கிற கஷ்ட காலத்துல, ஆரம்பமும் தெரியாம, நிறுத்தவும் தெரியாம, மூணு குழந்தைங்க இதுல ரெண்டு பொண்ணுக. நினைத்தாலே "பகீர்' என்றது.

ஒரு பிள்ளையையாவது, நல்லா படிக்க வைச்சு, இது போல ஒரு வீடு கட்டணும்னு ஆசைதான். ஆனா எங்க.. வர்ற பணத்தில ஒரு நாள் சோத்துக்கே கஷ்டமா இருக்கு.. இதுல படிப்புக்கு எங்க போறது?

நினைக்கவே அவளுக்கு கஷ்டமாக இருந்தது.

அட கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை என்று எவ்வளவு தான் உழைத்தாலும் காசும் கையில் தங்குவதில்லை. உள்ளது போதாது என்று, அவள் கணவன் வேறு. மாலை வந்து விட்டாலே, அவனுக்கு மயக்கம் தான். அவன் நடத்தும் "குடி'த்தனத்திற்கே அவள் உழைப்பின் பெரும் பகுதி வீணாகப் போய் விடும்.

அவனை ஒதுக்கியும் வைக்க முடியவில்லை. இந்த கேவல சமுதாயத்தில் ஆண் துணை இல்லையென்றால் என்ன ஆகும் என்பது அவளுக்கு நன்றாகவே தெரியும்.

தனக்கு ஒன்று என்றாலும் கூட பரவாயில்லை ஒன்றுக்கு இரண்டாக உள்ளதே பெண் குழந்தைகள்.. அவர்கள் எதிர்காலம், பாதுகாப்பு என்னாவது? கல்லானாலும் கணவன் என்பது போல, வடிவுக்கு வாழ்வு என்பது குடியானாலும் குடித்தனம் என்றாகி விட்டது.

""நாளெல்லாம் கழுதயா மூட்டை தூக்கி போட்டு, உடம்பெல்லாம் வலிக்குதுடி ஒரு நூறு ஊத்துனாத் தான், வலி எல்லாம் போகுது..'' என்று நொண்டிச் சாக்கு வேறு.

""நா.. மட்டுமென்ன.. பஞ்சு மெத்தையில படுத்தா, பணம் வாங்கியாறேன். ஆம்பளை, உன் உடம்புக்கே நூறு தேவப்பட்டா.. பொம்பளை நான், சாராயத்துலேயே குளிக்கணும்யா..''

நினைத்துக் கொள்வாள். ஆனால் சொல்ல முடியாது..

சொன்னால் அதுக்கும் சேர்த்து அடிப்பான். அடித்தால் கூட தாங்கிக் கொள்ளலாம்.. சட்டென்று நாக்கு கூசாமல் பேசி விடுவான்.

அது தான் அவளால் தாங்க முடியாது. நல்லது கெட்டதுக்கு கூடவே இருந்து குடும்பம் நடத்துபவளை, எப்படித்தான் இப்படி பேச மனசு வருமோ..

எதெல்லாம் நடக்க கூடாதென்று நினைத்து இவ்வளவு கஷ்டப்படுகிறாளோ.. அதெல்லாம் நடந்தது போலவே பேசி விடுவான்.

குழந்தைகள், கணவன், பசி, உடல்வலி என்று சகல வருத்தங்களும் ஒன்று சேர்ந்து, அழுகையாக பொத்துக் கொண்டு வந்தது.

அழுகையை அடக்க முயல, அது இயலாமையாக வெடித்து, கோபம் தலைக்கேறியது.

வேகமாக எழுந்தாள். சேலையைச் சரி செய்தாள். ஒரு முடிவுக்கு வந்தவள் போல கிளம்பினாள்.

"ஆம்பளயோடு ஆம்பளயா நாள் முழுதும் வேல பாத்து, சோர்ந்து போய் வந்தாக்க, ஆம்பள கூலில பாதி தான் தர்றீங்க.. நாங்க என்ன அவ்வளவு கேவலமாவா போயிட்டோம்.. பொம்பளனா என்ன.. இளக்காரமா..'

இரண்டில் ஒன்று கேட்டு விட வேண்டுமென்று ஆத்திரத்துடன் வேகமாக சென்றவள், காண்ட்ராக்டர் பாலனை பார்த்த உடன் தயங்கி நின்றாள்.

கால்கள் வலுவிழந்து தளர்ந்தன. கண்கள் இருட்டிக் கொள்ள வறண்டு போன தொண்டையில் எச்சில் விழுங்கினாள்.

ஒன்றும் பேச முடியாமல் திரும்பி நடக்க, ""என்ன வடிவு.. என்ன விஷயம்?'' என்று கேட்டான் காண்ட்ராக்டர் பாலன்.

""ஒண்ணுமில்லீங்க..'' என்றாள் அடிக்குரலில்.

பின்னே கேட்டு விட்டால், நாளைக்கு வேலை இல்லை என்று சொல்லி விடுவான். சோத்துக்கு எங்கே போவது? பேசாமல் திரும்பி நடந்தாள்.

பரவாயில்லை சொல்லு என்றான் பாலன். தயங்கி தயங்கி நின்றாள். மெல்ல ஆரம்பித்தாள்.

கொஞ்சம் பணக்கஷ்டம். புள்ளைங்களுக்கு பள்ளிக் கூடம் ஆரம்பிச் சிருச்சு. காசு பணம் தேவப்படுது கொஞ்சம் சம்பளம் சேர்த்து கொடுத்தா நல்லாயிருக்கும்.

சத்தம் வராமல் மெல்ல அடித் தொண்டையில் கேட்டாள்.

சத்தம் கேட்காதது போல சற்று நிதானித்த பாலனின் பார்வையில் இப்போது ஒரு மாற்றம் தெரிந்தது.

இதுவரை கண்களை பார்த்து பேசியவனின் பார்வை இப்போது அவள் உடலை மேயத் தொடங்கியது.

புல்லுக்கு ஏங்கிய புள்ளி மான் புலியிடம் புகலிடம் கேட்டு வந்தது போல ஒரு பார்வை. அவன் பார்வையின் வருடல் அவளுக்கு கூச்சத்தையும், அருவருப்பையும் தந்தது. விரல்கள் தானாகவே முந்தானையை சரி செய்து இழுத்து விட்டுக் கொண்டன.

தனது எண்ணத்தை வடிவு புரிந்து கொண்டாள் என பாலனுக்கு தெரிந்து விட்டது. அது அவனுக்கு கை வந்த கலை.

முயல் பிடிக்குற நாயை அதன் மூஞ்சியிலேயே தெரிந்து கொண்டாள் வடிவு. அது பெண்மையின் தற்காப்பு கலை.

""பரவாயில்லையே வடிவு. பார்வையிலேயே புரிஞ்சுக்கிட்டியே உன்னை மாதிரி சுறு சுறுன்னு இருந்தா தான் எதுவும் ருசிக்கும்'' வார்த்தையில் அசிங்கம் ஆரம்பித்தது

""என்னய்யா சொல்றீங்க? நான் பணம் தான் கேட்டேன். நீங்க பேசறது எனக்கு புரியலை''

""நீ புரிலைன்னு சொல்லும் போதே தெரியுதே வடிவு. உனக்கு புரிஞ்சிருச்சுன்னு யாருக்கும் பணம் சும்மா கிடைச்சிறாது''

தூண்டில் புழுவாக பணத்தை மாட்டினான்.

""சம்பளத்தையும் மொத்தமா சேர்த்து, கடனா கொடுங்க வட்டியோட தந்திடுறேன். முடியலைன்னா, எந் தலையை அடகு வைச்சாவது தந்திடுறேன்'' தலையை குனிந்து கொண்டு சொன்னாள்.

""ஏன் வடிவு தலையை மட்டும் அடகு வைக்குற? முழுசா அடகு வை. சத்தம் போடாம காதோட காதா இருக்கட்டும். கையோட கையா வாங்கிட்டுப் போயிரு. வட்டியாவது தலையாவது. மொத்தமும் எடுத்துக்கோ''

கண்களில் தெரிந்த காமம், பாலனின் வாய் வழியே வார்த்தையாக வழிந்தது. பாலனை நிமிர்ந்து பார்த்தாள் வடிவு.

பாலனுக்கு இப்போது வடிவு புது வடிவில் அழகாக தெரிந்தாள்.

மெல்ல அருகில் வந்தான். அவள் கரங்களை பற்றினான்.

வடிவுக்கு நினைவில் குழந்தைகள் வந்து போயினர். தள்ளாடியபடி கணவன் வந்து போனான்.

வீட்டுச்செலவு, பள்ளிச்செலவு, குழந்தைகளின் எதிர்காலம் என எல்லாம், கண்களுக்குள் வரிசை கட்டி வந்தன.

தன் உழைப்பின் பலனை நினைத்து பார்த்தாள். அவன் கையை விலக்கி விட்டவள், தனது விரல்களை விரித்து பார்த்தாள்.

காலத்தின் கடுமை, அவள் விரல்களில் கன்னிப் போயிருந்தது.

ஒரே சமயத்தில் ஒன்பது செங்கலை தூக்கி தலையில் அடுக்கி வைக்கும் கை. தட்டு நிறைய சிமெண்ட் கலவை வைத்துக் தூக்கும் கை. இடுப்பிலும் தலையிலும் நாலு பானைகளில் தண்ணீர் கொண்டு வந்து ஊற்றும் கை.

கோடாலி பிடித்து பிளந்தால், ஒரே வெட்டில் விறகை துண்டாக்கும் கை.

காம்பில் தூங்கும் மெல்லிய மலர் போலல்லாமல், செடியைத் தாங்கும் வேர் என முறுக்கிய கை. உழைப்பை தவிர, ஆறுதலாக புருசன் பிடி கூட கிடைக்காத கை. அவள் கை மெல்ல உயர்ந்தது.

நிமிர்ந்து பாலனைப் பார்த்தாள். தன் வறுமையை, அவன் தனக்கு வருமானமாக்க நினைப்பதை நினைத்து புழுவாக துடித்தாள்.

பசியால் தளர்ந்திருந்த கைகளுக்குள் அப்படி ஒரு பலம் எங்கிருந்ததோ, அவளுக்கு தெரியவில்லை.

அப்படியே மேலே தூக்கி, தன்னை பாதுகாக்கும் மானைப் போல பதுங்கி, ஆவேசமான ஒரு வேங்கை போல, அவன் கன்னத்தில் இறக்கினாள் ஓர் அறை.

அப்படியே அதிர்ந்து நின்றான் பாலன். பிரமாண்ட பருந்து ஒன்று தன் கால்களால் அறைந்து விட்டு போனது போல இருந்தது அவனுக்கு. சில நொடிகளுக்குக் கண்களுக்குள் நட்சத்திரங்கள் பறந்தன.

சற்றும் எதிர்பாராத தாக்குதலால், தலை கிறு கிறுத்து அப்படியே கீழே உட்கார்ந்தான். அவனால் வடிவை, தலையைத் தூக்கிக் கூட பார்க்க முடியவில்லை. கழுத்து வலித்தது.

""திருட்டு நாயே உனக்கு புள்ள குட்டிங்க இல்லை. அவங்க பசிக்கு உன்னோட பொண்டாட்டியை அவுசாரித்தனம் பண்ணச் சொல்வியா? காசில்லைன்னா மானமும் இருக்காதுன்னு நினைச்சியா?''

""படுத்து பிழைச்சிருந்தா இந்த பங்களாவுல இருந்திப்பேன்டா. எங்களுக்கு மானம் தான் உசுரு. உழைச்சால்தான்டா சாப்பாடு. ஈனப்பயலே என்னோட உழைப்புக்கு கால் தூசிக்கு வருமா உன்னோட காசு? இனிமேலும் எவகிட்டயாவது வாயைக் காட்டு பல்லை உடைக்கிறேன்''

அக்னி பிரவாகமாக ஆவேசமாக கிளம்பினாள் வடிவு.

அந்த அறையின் கனத்தையும், அவமானத்தையும் தாங்க முடியாமல், கன்னத்தின் ஒரு பக்க தாடையை பிடித்துக் கொண்டு கத்தினான்.

""போடி போ பத்தினி வேஷம் போடுறியா? பசி தின்னே சாவடி''

அடி வாங்கிய அவமானத்திலும், அவள் பலத்திற்கு முன்னால், தன்னால் எதுவும் செய்ய முடியாது என்ற இயலாமையிலும், அவளை கேவலமாக திட்டினான் பாலன்.

சட்டென திரும்பியவள், அவனை உக்கிர பார்வை பார்த்து, ""இந்த உடம்பை, உன்னை மாதிரி வெறி பிடிச்ச நாய் திங்கிறதுக்கு, பசி திங்கிறது எவ்வளவோ மேல் தூ..''

காறித் துப்பி விட்டு, இரும்பு போல நடந்து சென்றவளின் மன உறுதியை பார்த்து விக்கித்து நின்றான் பாலன்.

முழு கட்டுரையைப் படிக்க →