முகப்பு
தினமணி கதிர்

பெண்களை நிஜமாகக் கதையில் கொண்டு வந்தேன்!

சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தடவை கோவையிலிருந்து ஈரோடு வழியாக சேலம் வந்துகொண்டிருந்த போது,

Updated On : 24 ஜனவரி, 2024 at 5:44 PM
பகிர்:

சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தடவை கோவையிலிருந்து ஈரோடு வழியாக சேலம் வந்துகொண்டிருந்த போது, ஈரோடு பஸ் நிலையத்தில் இருந்த புத்தகக் கடையில் பாலகுமாரன் எழுதிய பல நூல்கள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. 

""எப்படிங்க போவுது, இந்தக் கதை புஸ்தகமெல்லாம்?'' என்று கேட்டேன்.

""நல்லா போகுதுங்க.  பாலகுமாரன் புஸ்தகம்னே கேட்டு வாங்கிட்டுப் போறாங்க, தெரியுமா?'' என்றார் கடைக்காரர்.

 பாலகுமாரனின் நூல்களில் எட்டு நாவல்கள், 10 முதல் 12 பதிப்புகள் கண்டிருக்கின்றன.  பத்து நூல்கள் 7, 8, 9 பதிப்புகள் கண்டிருக்கின்றன.  மீதி 250 நூல்கள் அதிக பட்சம் 5 பதிப்புகளும், குறைந்த பட்சம் 2 அல்லது 3 பதிப்புகளும் கண்டிருக்கின்றன.

 மாமன்னன் ராஜராஜன் பற்றிய புதினம் "உடையார்' மொத்தம் ஆறு பாகங்கள்.  பதினான்கு பதிப்புகள் கண்டுவிட்டது.  கங்கை கொண்ட சோழன் - நான்கு பாகங்கள் கொண்ட நாவல்.  இது ஏழு பதிப்புகள் கண்டுவிட்டது.

ஆன்மிகம் பாலகுமாரனின் இன்னொரு முகம்.  ஸ்ரீ ரமண மகரிஷியும், பகவான் யோகி ராம் சூரத் குமார் சரிதமும் இவருடைய ஆன்மிக எழுத்துக்குப் பெருமை சேர்ப்பவை. 

இப்படி எழுதிக் குவித்த இந்தத் தமிழ் எழுத்தாளர், சமீபத்தில் தம் 70ஆவது பிறந்த நாளைக் கொண்டாடினார்.

பாலகுமாரனுடன் அவர் இல்லத்தில் உரையாடினோம்.  பேட்டியிலிருந்து:

எப்போது எழுதத் தொடங்கினீர்கள் பாலகுமாரன்,  நினைவு இருக்கிறதா?

 முதலில் எழுதியது கவிதைதான். அது "கணையாழி'யில் வந்தது. டெலிஃபோன் துடைப்பவள் என்று தலைப்பு.  சிறுகதையாக எழுதியது வழிமயக்கம்.  இது "கசடதபற' இதழில் வெளிவந்தது. 

சாவியுடன் உங்கள் தொடர்பு குறிப்பிடத் தகுந்தது. அது எப்படி ஏற்பட்டது?

 "குங்குமம்' இதழில் அவர் ஆசிரியராக இருந்தபோது, நானும் சுப்ரமண்ய ராஜுவும் அவரைப் போய்ப் பார்த்தோம்.  அப்போது அவர் எங்களை ஓர் இதழ் தயாரிக்கச் சொன்னார்.  அப்போது நாங்கள் இருவருமே பாப்புலர் ஆகிவிட்ட சமயம்.  அப்புறம் அவர் தனியாகப் போய் "சாவி' துவக்கிய போது நிறைய வாய்ப்புகள் தந்தார்.  ஸ்ரீவேணுகோபாலனுடன் அவருக்கு ஏதோ மனத்தாங்கல் இருந்தது.  அதனால் என்னிடம் ""உங்களுக்கு ஒரு தொடர்கதை வாய்ப்பு தருகிறேன்.  ஐந்து வாரங்கள் எழுதுங்கள்.  புதிதாக இருக்க வேண்டும்'' என்றார்.  கடைசியில் அது 32 வாரங்கள் வந்தது. மணியம் செல்வன் தான் ஓவியம் வரைந்தார்.  நானே எடுத்துக்கொண்டு அவர் வீட்டுக்குப் போய்க் கொடுப்பேன்.  அவர் படங்கள் வரைந்து கொடுப்பார்.  சாவி எனக்கு நிறையச் சுதந்திரம் கொடுத்தார். சில இடங்களை மாற்ற நினைத்தால், சாவியிடம் சொல்லிவிட்டு கம்போஸிங்கில் மாற்றிவிடுவேன்.  கடைசியாக அச்சுக்குப் போகும் வரை கரெக்ட் பண்ணிக் கொண்டே இருப்பேன்.  உண்மையில் என்னுடைய முன்னேற்றத்துக்கு வேண்டிய பணிகளை எல்லாம் நானே செய்து கொண்டேன். இதற்குப் பிறகு எல்லா பத்திரிகை ஆசிரியர்களும் என்னைக் கவனிக்கத் தொடங்கினார்கள்.   கல்கி ராஜேந்திரன் என்னிடம் ஒரு தொடர்கதை கேட்டார்.  அதுதான் "இரும்பு குதிரை'.  அப்போது ஆண்டு மலரில் பத்தோடு பதினொன்றாக என் தொடர்கதைக்கும் விளம்பரம் செய்திருந்தார்.  ""என் தொடர்கதைக்குத் தனியா போஸ்டர் போடலியே?'' என்று கேட்டேன்.  அப்புறம் போட்டார். நிறைய போஸ்டர் போட்டார்.  முகத்தைப் பெரிசாப் போட்டு பெரிய போஸ்டரே போட்டார்.  ""ஆர்தர் ஹெய்லி எழுதற மாதிரி இருக்கு'' என்று பாராட்டினார்.   ஆனந்தவிகடனில் "தாயுமானவர்' தொடராக வந்த போது ஃப்ளெக்ஸ் போர்டே வைத்தார்கள், இரண்டு மூன்று இடங்களில்   அப்போதெல்லாம் பெரிய ராட்சதர்கள் எழுதிக் கொண்டிருந்தார்கள்.  நான் என்ன செய்தால் வாசகர்களைக் கவர முடியும் என்று நினைத்துக் கொண்டேயிருப்பேன். பத்திரிகை ஆசிரியர்கள் பெண்கள் விஷயத்தைப் புரிந்து கொள்ளவும் இல்லை; போற்றவும் இல்லை.  வாசகர்களைக் கவரும்படியான பெண்களைப் படைத்தேன்.  என் கதாநாயகி வீட்டுக்குத் தேவையானவற்றையும், அப்பாவுக்கு பீடியையும் வாங்கி வருவாள்.  இப்படி வேறு பெண்களை, நிதர்சனமாக, நிஜமாகக் கொண்டு வந்து கதையில் காண்பித்தபோது அது எல்லாருக்கும் பிடித்திருந்தது.

குமுதம் எஸ்.ஏ.பி. அவர்களுடன் மிக நெருங்கிப் பழகியவர் நீங்கள்! அவரிடம் என்ன கற்றுக்கொண்டீர்கள்?

ஒரு தடவை அவர் வீட்டுக்குப் போய் வாசலில் இருந்து வீட்டுக்கு வந்து விட்ட செய்தி அனுப்பினோம்.  தலையங்கம் எழுதிக் கொண்டிருப்பதாகவும் சற்று நேரம் ஆகும் என்றும் பதில் வந்தது.  நானும் சுப்ரமண்ய ராஜுவும் விடுவதாக இல்லை.  வந்துவிட்டோம் என்றோம்.  ""வீட்டுக்கு வந்துவிட்டவர்களை எப்படி திரும்பிப் போகச் சொல்வது'' என்று கேட்டுவிட்டு, உள்ளே அழைத்தார்.  இரண்டு மணி நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு, ""கதை கொண்டு வந்திருக்கிறீர்களா?  இல்லை என்றால் நாளைக்குக் கொடுங்கள்.  வாரப் பத்திரிகைக்கு எல்லாம் அப்படித்தான் கேட்போம்'' என்றார். நான் இரண்டு கதைகள் கொண்டு போயிருந்தேன்.  ராஜு ஒரு கதை கொடுத்தார்.  "கெட்டாலும் ஆண்மக்கள்' என்ற சிறுகதை குமுதத்தில் வெளியாயிற்று.  அதற்கு முன்னால் அங்கே நடந்த விவாதம் சுவாரசியமானது.  அந்தக் கதையை அவர் முதலில் ஏற்கவில்லை.  நான் உங்கள் பத்திரிகையில் வேறு ஒருவர் இப்படி எழுதுகிறாரே என்றேன்.  ""அவர் எழுத்து யாரையும் தைக்காது. நிஜமான அனுபவம் இல்லாமல் இதை  எழுதியிருக்க முடியாது.  பாலகுமாரன், நீங்கள் தப்பாக எழுதக் கூடாது.  தவறு செய்வது உத்தமம் என்று எல்லோரும் முடிவெடுத்துவிடுவார்கள்.  அது கெடுதல் தரும். தவறுகளை மேன்மைப்படுத்தக் கூடாது'' என்றார். மகா ஞானி அந்த மனிதர்.  அவர் இல்லை என்றால் எனக்கு இந்த பிரகாசம் வந்திருக்காது

டாஃபே நிறுவனத்தில் வேலையை விட்டது எப்போது?  எந்தத் தருணத்தில் அந்த முடிவு எடுத்தீர்கள்.  வீட்டில் சொன்னீர்களா?

டிராக்டர் கம்பெனியில் கலை உணர்வுக்கு இடம் இருக்கவில்லை.  மனைவியர் கமலா, சாந்தா இருவரிடமும் சொன்னேன்.  இருவரும் அரசாங்க உத்தியோகத்தில் இருந்தார்கள்.  மோர் சாதத்துக்கு வழி இருக்கிறது.  நீங்கள் வேலையை விட்டுவிடலாம் என்றார்கள்.  அது 1985 என்று நினைவு.  எனக்கு வீடு, கார் வேண்டும்.  இலக்கியத்தில் சாதிக்கலாம்.  சினிமாவில் சம்பாதிக்கலாம் என்று வேலையை விட்டுவிட்டேன். 

சரி, எப்போது ஆன்மிகப் பாதைக்குத் திரும்பினீர்கள்?
பிராமணக் குடும்பம்.  தேவாரம், திருவாசகம், நாலாயிர திவ்யபிரபந்தம், குறுந்தொகை, அகநானூறு, புறநானூறு எல்லாம் படித்திருந்தேன். அதில் நிறையப் பாடல்கள் மனப்பாடம்.  ரமணர் எனக்கு ரொம்பப் பிடித்திருந்தார்.  ஆன்மிகத்தை அவரிடமிருந்துதான் தெரிந்து கொண்டேன்.  உண்மையாக இருப்பதுதான் ஆன்மிகம்.  அதனால் அவரைத் திரும்பத் திரும்பப் படித்தேன்.  தினசரி அனுஷ்டானங்கள், அக்னிஹோத்ரம், மந்திர ஜபம் என்று என் நிலையை உயர்த்திக் கொண்டேன்.  ஆனால் இதற்கெல்லாம் அப்பாற்பட்டுத்தான் ஆன்மிகம் இருக்கிறது என்று புரிந்தது. 

அப்படியானால் யோகி ராம்சூரத் குமாரிடம் போனது எப்படி?
ஒரு முறை திருவண்ணாமலைக்குப் போனபோது, அவரைப் பார்க்கப் போனேன்.  ""நாட் நவ். லேட்டர்''- இப்போது அல்ல. பின்னர் - என்று என்னை அனுப்பிவிட்டார். இரண்டாவது முறை போனபோது நமஸ்காரம் பண்ணினதும் போகச் சொல்லிவிட்டார்.  மூன்றாவது தடவை போனபோது, ""எதுக்காக வந்தே  இங்கே காசு, பலம் எதுவும் இல்லே'' என்றார்.  கடவுள் தெரியாது.  இருக்காரா, இல்லையா?  கடவுளைக் காண்பித்தால் போதும் என்றேன்.

பதறிவிட்டார்.  முதுகில் கையால் தடவிக்கொண்டே, குண்டலினியைத் தொட்டார் என்பது தெரிந்தது.  உடம்புக்கு அப்புறம் மனம் போயிற்று. எல்லாவற்றிலும், நாய், பூனை, மாடு என்று பிராணிகள் உட்பட, எல்லாவற்றிலும் உடலைத் தாண்டிப் பார்க்க முடிந்தது.   பல முறைகள் இப்படி நேர்ந்திருக்கிறது.  அது மரண அனுபவம்.  உச்சிக்கு ஏற்றி வைத்த பரவச நிலை உண்டாயிற்று.  மயக்கக் கலக்கம் மாதிரி அந்த நிலை இருக்கும். நிறையத் தெளிவு வந்தது.  குமரகுருபரர், தாயுமானவர் எல்லாம் இப்போது புரிந்தது.  ஏசு சொன்னது புரிந்தது.   உயிரின் வழியாக இருண்ட பகுதியை மனிதன் பார்த்துவிடுவான். அதுதான் சாத்தான்.  மனதின் இருண்ட பகுதியை ஆன்மிகவாதி கண்டுவிடுவான். மனதின் வெளிச்சமான பகுதி - அதுதானே இயல்பான பகுதி  இந்த இடத்தை, இந்த வெளிச்சத்தை, அடைந்தவர், இயல்பு நிலையை எட்டியவர்.  நம்மவரில் பலர், முழு இருட்டிலும் முக்கால் இருட்டிலும், வந்து போகிற இருட்டிலும் வாழ்கிறோம்.  வெளிச்சமாக வாழ, தலையெழுத்து உள்ளவருக்கே தெரியும்.  ஏன் எனில், இது முயற்சியால் அடையப்படுவது அன்று.  இது விதிக்கப்படுவது.

முழு கட்டுரையைப் படிக்க →