ஒன் ஸ் மோர்
சங்கப் பாடல்களிலேயே மரம், செடி, கொடி, பூ, கனி பற்றிய பதிவுகள் இல்லாத பாடல்களே இல்லை. இயற்கையோடு கலந்து வாழ்ந்த நம் வாழ்வு ஏன் இன்று கானலாகிப் போனது?
சங்கப் பாடல்களிலேயே மரம், செடி, கொடி, பூ, கனி பற்றிய பதிவுகள் இல்லாத பாடல்களே இல்லை. இயற்கையோடு கலந்து வாழ்ந்த நம் வாழ்வு ஏன் இன்று கானலாகிப் போனது? குறிஞ்சியும் முல்லையும் மருதமுமும் நெய்தலுமான நம் நிலங்கள் ஏன் பாலையாகிக் கொண்டிருக்கிறது? இந்தக் கேள்விகளை எப்போதுதான் நாம் நம்மைக் கேட்டுக் கொள்ளப் போகிறோம்? மீண்டுமொரு பெருஞ்சோர்வு என்னைத் தொற்றிக் கொண்டது? மெல்ல எழுந்து கடற்கரையின் சாலைப் பகுதியில் போடப்பட்டிருந்த ஒரு கல் மேடையில் அமர்ந்தேன். காற்றில் அடித்துக் கொண்டு வந்த ஒரு பழைய தினமணி நாளிதழில் உத்தரப் பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களில் சில கிராமங்களில் இப்போதும்கூட ஒரு வீட்டில் பெண் குழந்தை பிறந்தவுடன் ஒரு மாமரம் நடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள் என்ற செய்தியைப் படித்தவுடன் ஒரு புத்துணர்ச்சி. அந்தத் தாளை எடுத்துப் பத்திரப்படுத்தினேன். இனி மாணவர்களை மரமண்டை, ஏன்டா மரம்போல நிக்குற என்றெல்லாம் திட்டக் கூடாது என்று மனதில் உறுதி செய்து கொண்டேன்.
"சமூகம் - வலைத்தளம் - பெண்' நூலில் தி.பரமேசுவரி.
"என்னுடையது' என்ற மமகாரம் வெறும் சொத்து சுகம் சொந்த பந்தம் பற்றியது மட்டுமல்ல. அது வித விதமாக வடிவெடுக்கும் மாயா மகன் சூரபத்மனைப் போன்றது. மிகவும் தூய்மையானதாகத் தோற்றம் காட்டிக்கொள்ளும் மமகாரம் உண்டு பாருங்கள். "என்னுடைய வீடு', "என்னுடைய உறவு' என்னும் இக்கொடிய தீ "என்னுடைய மதம்', "என்னுடைய கடவுள்', "என்னுடைய கோயில்' என்றும் கொழுந்துவிட்டு எரியத் தொடங்குகிறது.
Advertisement
Advertisement
மமகாரத்திலிருந்து விலகுவது அவ்வளவு சுலபமல்ல. சுவாமி ராம் தீர்த்தர், விவேகானந்தருக்கு முன்பே அமெரிக்கா போய் ப்ரம்மஞானம் பேசியவர். அவர் அமெரிக்காவுக்குச் சென்றபோது ஒரு சிறிய கைப்பையுடன் இறங்கினார். ""உங்கள் லக்கேஜ் எங்கே?'' என்று கேட்டபோது தம் சரீரத்தைக் காட்டி, ""இதுதான் என் லக்கேஜ் (சுமை)'' என்றார். இப்படி மமகார மறுப்பில் இருந்த மகான் ஒரு தடவை சறுக்கி விட்டார்.
இந்தியா திரும்பிய பின், தம் நண்பர் வீட்டில் சர்தார் பூர்ணசிங் என்பவருடன் தங்கியிருந்தார். திடீர் என்று ஜன்னல் வழியாகப் பார்த்தபோது அவரை நோக்கி வருகிற ஒரு பெண்மணியைக் கண்டார். துள்ளி எழுந்து வாசல் கதவைச் சாத்தித் தாழிட்டார். ""ஏன் கதவை அடைக்கிறீர்கள்? நீங்கள் எந்தப் பெண்ணுக்காகவும் இப்படிப் பதறியது இல்லையே?'' ன்று குடையத் தொடங்கினார் உடனிருந்தவர்.
""அவள் எனக்கு எந்த உறவும் இல்லை'' என்றார் ராம் தீர்த்தர். ""ஒரு உறவும் இல்லாத பல பெண்மணிகள் இங்கே வந்த போதெல்லாம் கதவை அடைத்துத் தவிர்க்காத நீங்கள் இவரைத் தவிர்ப்பது ஏன்?'' என்று விடாமல் கேட்டார் சர்தார். ""இவள் என் மனைவியாக இருந்தவள்... இப்போது ஒருவரும் என் மனைவி இல்லை'' என்று தடுமாறினார் தீர்த்தர். சர்தார் பூர்ணசிங் விடவில்லை. ""அவர் உங்கள் மனைவி இல்லையென்றால், மற்ற பெண்களிடம் எப்படி நடந்துகொள்வீர்களோ அப்படி இயல்பாக இருங்கள். முன்பு என் மனைவி என்று அவர் வருகைக்காக எழுந்து கதவு திறந்திருப்பீர்கள். இப்போது என் மனைவி இல்லை என்று அடைப்பதற்காக எழுந்து போனீர்கள். இது என்ன பிரம்ம ஞானம்? எல்லாப் பெண்களிலும் தெரிந்த ப்ரம்மம் இந்தப் பெண்ணிடம் உங்களுக்குத் தெரியவில்லையா? நான் போகிறேன்...'' என்று பெரிய கும்பிடு போட்டுவிட்டு எழுந்து கொண்டார் அவர். ராம் தீர்த்தருக்குச் "சுரீர்' என்று உண்மை புலப்பட்டது. உடனே போய் அந்தப் பெண்ணுக்குக் கதவைத் திறந்துவிட்டார். என்றாலும் மமகார நீக்கம் தம்மிடம் பூர்ணமாகவில்லை என்பதையுணர்ந்து அன்று முதல் காவி உடுத்துவதை நிறுத்திவிட்டார். ராம் தீர்த்தர் ஜல சமாதி அடைந்தபோது சன்யாசியாக காவி உடுத்தவில்லை, வெள்ளை உடுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.
ஏன்... விநாயகர் சதுர்த்தி விழாவில் பாருங்கள். பஜார் தெரு பிள்ளையார், ஹவுசிங் போர்டு பிள்ளையாரைத் தோற்கடிக்கிறார். பஜார் தெரு பிள்ளையார், சினிமா பாடகர்களின் கச்சேரி, ஹாலோஜன் விளக்கு, 16அடி உயரம் என்று திண்டு மாலையுடன் அமர்க்களப்படுகிறார். பாவம், ஹவுசிங் போர்டு பிள்ளையார் உள்ளூர் வயலின் கேட்டபடி அறுகம் புல் மாலைக்குள் உட்கார்ந்திருக்கிறார். ""உன்னுடைய பிள்ளையாரை விட என்னுடைய பிள்ளையார் "பாப்புலர்' ஆக்கும்'' என்று கடைவீதி கமிட்டி கர்வம் அடைகிறது. மமகாரம் எந்த வடிவத்தில் இருந்தால் என்ன? விஷத்தை வெள்ளி டம்ளரில் குடித்தாலும் விஷம் விஷம்தானே!
"யான் எனது என்னும் செருக்கறுப்பான்...' என்ற கட்டுரையில் சுகி.சிவம்.