முகப்பு
தினமணி கதிர்

அனிமேஷன் படத்தில் அற்புதம்

முப்பரிமாண அனிமேஷன் திரைப்படம் என்பது மிகவும் அரிதான ஒன்று. 3டி என்று நாம் ஆங்கிலத்தில் சொல்வது போன்ற திரைப்படங்கள் பல வெளிவந்துள்ளன. அதில் அனிமேஷன் என்ற வகை படங்கள் வெகுசிலதான்.

Updated On : 23 ஜூலை 2018, 11:28 am IST
பகிர்:


முப்பரிமாண அனிமேஷன் திரைப்படம் என்பது மிகவும் அரிதான ஒன்று. 3டி என்று நாம் ஆங்கிலத்தில் சொல்வது போன்ற திரைப்படங்கள் பல வெளிவந்துள்ளன. அதில் அனிமேஷன் என்ற வகை படங்கள் வெகுசிலதான். அந்த வகையில் இந்த படம் ஒரு குறிஞ்சிப் பூதான். இந்த படத்தை இயக்கியவர் மருத்துவதுறையில் பட்டம் பெற்றவர். பல காலம் வெளிநாட்டில் வாழ்ந்து பின்னர் இந்தியா வந்த ஒரு தமிழர். அவர்தான் டாக்டர் எழில் வேந்தன். தன்னை பற்றியும் தனது அனிமேஷன் படமான  "ஹனுமனும் மயில்ராவணனும்' என்ற படத்தை பற்றியும் கூறுகிறார்: 
இந்த படம் முதல் முறையாக இந்தியாவில் தயாராகும் இதிகாச கதையம்சம் உள்ள 3டி அனிமேஷன் முழுநீள திரைப்படம். நான் ஒரு பல் மருத்துவராக இருந்தாலும் எனக்கு இந்த அனிமேஷன்துறையில் ஆர்வம் அதிகம்.  அதன் விளைவே இந்த அனிமேஷன் துறையில் பயிற்சி பெறவேண்டும் என்று நான் முடிவு செய்து இங்கிலாந்து நாட்டிற்குச் சென்று அங்கிருந்த புகழ் பெற்ற வார்னர் பிரதர்ஸ் படக் குழுவில் பணியாற்றி பல்வேறு அனிமேஷன் தொழில் நுட்பங்களைக் கற்று வந்தேன். இன்னும் சொல்லப் போனால் வார்னர் பிரதர்ஸ் போன்ற பல்வேறு புகழ் பெற்ற அனிமேஷன் நிறுவனத்தில் தொழில் நுட்பங்களைக் கற்றதினால்தான் இந்த மாதிரி ஒரு படம் எடுக்கவேண்டும் என்ற ஓர் எண்ணமே எனக்கு ஏற்பட்டது என்றும்  கூறலாம். 
நமது இதிகாசங்களில் காணப்படும் பல்வேறு விஷயங்களை உள்ளடக்கியதுதான் இன்று ஆங்கிலப்படங்களில் நாம் காணும் பல விஷயங்கள். குறிப்பாக ‘star wars’, ‘Lord of rings’, போன்ற படங்களை இதற்கு உதாரணமாகக்  கூறலாம். இந்த படங்களைப் பார்க்கும் போது நமது இதிகாசக் கதைகள் கண்டிப்பாக நாம் மனத்திரையில் ஓடும். ஏனென்றால் அங்கும் பிரம்மாண்ட மாட மாளிகைகள், வானுலகம், மண்ணுலகம், பாதாள உலகம் போன்றவற்றை நாம் மிகச்சிறப்பாக காட்டலாம். 
அனிமேஷன் இல்லை என்றால் பல்வேறு விஷங்களில் நம் கைகள் கட்டப்பட்டிருக்கும். அனிமேஷன் என்பதால் நமது கற்பனைக்கு எல்லையே இல்லை. எங்கள் படம் பாதிக்கு மேல் சென்னையில்தான் உருவாக்கப்பட்டது. ஆனால் மீதி உள் நாட்டு மற்றும் வெளிநாட்டு கணினி ஓவியர்களை குழுக்களாக வைத்து வேலை வாங்கினோம். 
ஹனுமன் தான் இப்படத்தின் கதாநாயகர் என்றாலும் அவரை எதிர்த்து பல வில்லன்கள் உண்டு. அந்த வில்லன்கள் எல்லாரும் வெவ்வேறுவிதமாக இருக்கவேண்டும். ஒவ்வொரு வில்லனும் பயங்கரமாக  இருக்கவேண்டும். உதாரணமாக பாம்பு மனிதன், ஆளை விழுங்கும் ராட்சச புழுக்கள் என விசித்திரமான எதிரிகளை ஹனுமன் சண்டையிட்டுக் கொல்வது போன்ற காட்சிகள் உள்ளதால், இவற்றை ஜப்பானில் உள்ள அனிமேஷன் கலைஞர்களைக் கொண்டு அமைத்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்து அவர்களை வைத்து படமாக்கினோம்.
முதன் முறையாக பத்துதலை ராவணன் புதுமையான ஒரு வடிவத்தில் இந்தப் படத்தில் சித்திரிக்கப்படுகிறார். அதாவது அவரது பத்து தலைகளும் தனித் தனியாக செயல்படுகிறது. இதற்காகவே கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள அனிமேஷன் பல்கலைக் கழகத்தின் தலைமை பொறுப்பில் உள்ள ஆசிரியர் இந்த காட்சிகளை சரியாக அனிமேஷன் செய்து தந்துள்ளார். பிறகு "நான் பார்த்த  வில்லன் பத்திரங்களிலேயே ராவணன் தான் சிறந்த வில்லன்', என்றும் கூறி பாராட்டினர். 
அனிமேஷன் படம் எடுப்பது நடிக, நடிகையர்களை வைத்து எடுக்கும் படங்களின் செயல் முறையில் இருந்து மிகவும் வேறுபடுகிறது. இயற்கை சூழ்நிலையோ, செட்டுகளையோ நாம் படமெடுப்பதில்லை. ஆனால் இவை அனைத்தும் நமது கற்பனையில் உதித்து, அவை மூல ஓவியங்களாக (Concept Art), அழகான சித்திரங்களாக மாறுகின்றன. முன்பெல்லாம் கையால் வரைவார்கள். அப்படி செய்தால் ஒரு காட்சிக்கு ஆயிரக்கணக்கான ஓவியங்கள் தேவைப்படும். நேரமும் அதிகமாகும். இன்று எல்லாமே கணினி முறைதான் என்பதால் நேரம் அதிகமாவது தவிர்க்கப்படுகிறது. 
இவ்வாறு  நூற்றுக்கணக்கான கணினி ஓவியர்களின் கைத்திறனால் நாம் கண்களை நாமே நம்பும் விதமாக காட்சிகள் மாறுகின்றன. நமது கண்களே நம்மை பல விஷயங்களில் ஏமாற்றுகின்றன என்றும் கூறலாம். இது மட்டுமல்லாமல் ஒரு தேர்ந்த நடிகர் எப்படி ஒரு காட்சியில் நடிப்பாரோ அதே போன்று கற்பனை செய்து கணினி ஓவியர்கள் வரைய, அதுவே கதை பலகை (Story Board) என்று மாறுகிறது. இதில் கதாபாத்திரங்களின் முகபாவம், உடல், மொழி, கேமரா கோணம் போன்ற அனைத்தும் பதிவாகிவிடுகின்றன. 
இதுபோன்று பல்வேறு மூல ஓவியங்களை எனது ஐல்ஹக்  மூலம் வரைந்து நான் வைத்திருந்தேன். அதுவே இப்படத்தின் ஆணிவேர் என்றும் கூறலாம். அமெரிக்கா, ஜப்பான், மெக்ஸிகோ, சென்னை, கேரளா, இந்தோர் ஆகிய இடங்களில் உள்ள அனிமேஷன் கலைஞர்களை வைத்து இந்த படத்தினை நாங்கள் உருவாக்கி உள்ளோம். என்னைப் பொருத்தவரையில் இந்த கதை வால்மீகி ராமாயணத்தில் ஓரிருவரிகள்தான் வரும். அதைத்தான் நாங்கள் ஒன்றரை மணிநேர படமாக மாற்றி இருக்கிறோம். இதை பெரியவர்கள் மட்டும் அல்ல, குழந்தை
களும் பார்த்து ரசிக்கும் அளவிற்கு கண்களுக்கு விருந்தாக இந்த படம் கண்டிப்பாக இருக்கும் என்பது மட்டும் நிச்சயம்'' என்றார் படத்தின் இயக்குநர், மருத்துவர் எழில் வேந்தன்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments