முகப்பு
தினமணி கதிர்

தர்ப்பையின் தேவை...

வயல்வெளிகளில் சாதாரணமாக வளரும் தர்ப்பைப் புல்தான் இன்று உலகச் சந்தையில் 'வெல்னெஸ் ப்ராடக்ட்ஸ்' என உருமாறி விற்பனையாகி, இந்திய ஆன்மிகத் தயாரிப்பு என்கிற பெருமையுடன் உலா வருகிறது.

Updated On : 19 ஏப்ரல், 2026 at 4:09 AM
பகிர்:
Updated On : 18 ஏப்ரல், 2026 at 8:23 PM

சுஜாதா மாலி

வயல்வெளிகளில் சாதாரணமாக வளரும் தர்ப்பைப் புல்தான் இன்று உலகச் சந்தையில் 'வெல்னெஸ் ப்ராடக்ட்ஸ்' என உருமாறி விற்பனையாகி, இந்திய ஆன்மிகத் தயாரிப்பு என்கிற பெருமையுடன் உலா வருகிறது.

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பயணிப்போர் கும்பகோணத்தை நெருங்குவதற்கு சில கி.மீ. முன்னர் சாலையின் ஓரங்களில் பச்சை நிறப் பாய்களாகப் பரத்தி வைக்கப்பட்டிருக்கும் புற்களைக் காணலாம். 'ஏதோ தர்ப்பைப் புல்லைக் காய வைக்கின்றனர்' என்று நினைத்தபடி சில நிமிடங்களில் கடக்கக் கூடிய சாதாரண காட்சிதான். ஆனால், இதுதான் பல கிராமங்களை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. இதமான வெயிலில் குடும்பத்தோடு வேலையில் ஈடுபட்டிருந்த செந்தில், கண்ணன், வீரமணி, முருகன் உள்ளிட்டோரிடம் பேசியபோது:

Advertisement

'நாங்கள் திருவண்ணாமலையைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து வருகிறோம். எங்களுக்குத் தெரிஞ்ச தொழிலே இதுதான். அநேகமா வருஷத்துக்கு இரண்டு அல்லது மூன்று முறை இங்கு வருகிறோம். அறுப்புக்குத் தயாராகிற நேரத்துல நில உரிமையாளர்களே எங்களை அழைக்கின்றனர். தர்ப்பைப் புல்லை அறுத்து, வயலைச் சுத்தம் செய்து தரவேண்டியது தான் எங்கள் வேலை. அவங்களுக்கு அடுத்த பட்டம் உழவு வேலைக்கு வயல் தயாராயிடும். அதே நேரத்துல எங்களுக்குப் பிழைப்புக்கு வேலை கிடைக்கும்.

அவங்கவங்க கூட்டத்தோடு பாலங்களுக்கு அடியில் தங்கிவிடுவோம். எங்களுக்குள்ளேயே நாள்கூலியாக ஆள்களை அழைச்சுட்டு வருவதும் உண்டு.

காலையிலேயே வெயிலுக்கு முன்னதாக புல் அறுப்புக்குச் செல்வோம். தர்ப்பை அறுக்கறதுக்கு நல்ல அனுபவமும் பொறுமையும் வேண்டும். சில்லிப்புக்காக புதர்களில் பாம்புகள் இருக்கும். கவனமாகச் செய்ய வேண்டிய வேலை இது.

இப்படி வயலில் அறுத்த புற்களைக் கட்டுகளாக ஒன்றுசேர்த்து அனுப்பி விடுவோம். சிலர் சாலையோரத்தில் பிரித்து அடுக்கடுக்காகக் காய வைத்து அடுக்குவார்கள். தர்ப்பைக்குக் காயற வெயிலும் கூடாது. மழையோ ஈரமோ இருக்கக் கூடாது. எல்லாமே பதமாக இருக்க வேண்டும்.

மூன்று ரகங்கள்

அதிகமான வெயில் பட்டால் உடைஞ்சு போயிடும். ஈரம் பட்டால் பூஞ்சை வைத்துவிடும். உலர்வாகவும், பதமாகவும் காயவைக்கிறதுதான் முதல் தரம். நல்ல தரமான, பச்சையான புற்கள் நுனி உடையாமல் கூராக இருக்கும். ஆரம்பத்துல வெளிர்பச்சையாக இருக்கும். பக்குவமான பிறகு பொன்னிறத்துல இருக்கணும்.

தொட்டால் மிருதுவாக வளையணும். உடையக் கூடாது. நொறுங்கிடக்கூடாது. கருப்புப் புள்ளிகளோ, பூஞ்சைக்குறிகளோ இருக்கக் கூடாது. இப்படி இருக்கிற முதல் தரமான தர்ப்பைதான் சடங்குகளுக்கு ஏற்றது.

சற்று நுனி உடைஞ்சிருந்தாலோ அல்லது உயரம் குறைவாக இருந்தாலோ (அதாவது இரண்டடி வரையிலான உயரம்) அதுகளைத் தனியாகப் பிரிச்சு எடுத்திடுவோம். இதுபோன்றவை இரண்டாம் தரம்.

இதுக்குப் பிறகு மீதி இருக்கிறதை மூன்றாவது வகையாகப் பிரித்துவிடுவார்கள். சடங்குகளின் போது கூர்ச்சங்கள் செய்யறதுக்கு இதை உபயோகப்படுத்துகின்றனர்.

பாய், தடுக்கு, ஆசனம் போன்றவற்றைச் செய்வதற்கு இதுபோல் இருக்கிறதை வாங்கி வியாபாரிகள் பயன்படுத்துகின்றனர். தர்ப்பைக் கட்டுகள் சேரசேர ஒரு பக்கமாக குவிச்சு வெச்சுடுவோம். வேலை முடிஞ்சவுடன் பார்சல் ஏத்தி ஊருக்கு அனுப்பி விடுவோம். இரு சக்கர வாகனங்களில் இளைய தலைமுறையினர் எடுத்துச் செல்கின்றனர்.

வருடம் முழுவதும் தேவை

எங்களிடம் வாடிக்கையாக தர்ப்பை வாங்குகிறவர்கள் உண்டு. சென்னை, பெங்களூரு உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து வாகனங்களில் வருகை தந்து, மொத்தமாக வாங்கிச் செல்வோரும் உண்டு. கும்பகோணம், காஞ்சிபுரம், மதுரை, வாரணாசி, ஹரித்துவார் உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு ஆண்டு முழுவதும் விநியோகம் செய்கிறோம். வெளிநாடு வாழ் இந்தியர்கள் கலாசார சடங்குகளுக்காக இதை வாங்குவதால், அமெரிக்கா , சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

மதிப்பு கூட்டப்பட்ட தர்ப்பை

குழந்தைப் புண்ணியாசனம் தொடங்கி கோயில் கும்பாபிஷேகம் வரைக்கும் இந்த தர்ப்பைக்கு முக்கியத்துவம் உள்ளது. குறிப்பாக ஆடி , தை மாச அமாவாசைகள், கிரகண நேரங்கள், மகாளய பட்சம், மாசி மகம் போன்ற சமயங்களில் விற்பனை அதிகமாகும்.

சித்த வைத்தியத்தில் மருந்து தயாரிப்புக்காகவும் இதை வாங்குகின்றனர். துறவிகள் வபனம் செய்யும்போது தர்ப்பை ஆசனத்துல உட்காருவது விசேஷம். அதேபோல் தியானம் , யோகா பயிற்சி செய்கிறவர்கள் விரும்பி வாங்குகின்றனர். தர்ப்பை மாலைகளாக நிலைவாயில்களிலும் பூஜை ஸ்தானங்களிலும் அதிஷ்டம் தரும் அலங்காரப் பொருளாகப் பயன்படுத்துவதும் அதிகரித்து வருகிறது. காவிரிப் படுகைகளில் விளையும் தர்ப்பைக்கு உள்ள தனித்தன்மை காரணமாக வணிக அளவில் மதிப்பும் கூடுதலாக இருக்கிறது.

தர்ப்பை சீசன் இல்லாத காலங்களில் ஆல், புரசு, மா, அத்தி முதலான மரங்களில் இருந்து உலர்ந்து விழும் சுள்ளிகளைச் சேகரித்து சமித்துகளாக மாற்றி வியாபாரம் செய்கிறோம்' என்றார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.