முகப்பு
தினமணி கதிர்

பறவைகள் பலவிதம்...

'பறவைகள் பலவிதம்... அவை ஒவ்வொன்றும் ஒருவிதம்...' என்று திரைப்படப் பாடல் உண்டு.

Updated On : 3 மே, 2026 at 4:08 AM
பகிர்:

'பறவைகள் பலவிதம்... அவை ஒவ்வொன்றும் ஒருவிதம்...' என்று திரைப்படப் பாடல் உண்டு. இந்தப் பறவைகளின் சிறப்பே ஒலிகள்தான். அவற்றின் குரல் அதன் மூளையில் இருந்து வரும் சமிக்ஞைகளால் உருவாகிறது. இந்த ஒலியை உருவாக்க உதவும் சிறப்பு உறுப்பு 'சைரிங்ஸ்' என்று அழைக்கப்படுகிறது.

இது பறவைகளின் தொண்டைப் பகுதியில் குரல் வளை, காற்றுக் குழாய் பிரியும் இடத்தில் அமைந்துள்ளது. காற்றின் அழுத்தத்தைக் கட்டுப்படுத்தி வெளியேறும் மூச்சை குரலாக மாற்றும் வேலையை இதுவே செய்கிறது. இதனால்தான் மயிலின் அகவல், கோழியின் கூவல் போன்ற பல்வேறு குரல்களை நாம் கேட்கிறோம்.

சில பறவைகள் தனித்தனியாகவும், சில பறவைகள் கூட்டமாகவும் வாழ்கின்றன. தங்கள் கூட்டத்தில் உள்ள பறவைகளுடனும், குஞ்சுகளுடனும் தொடர்பு கொள்ள அவை தனித்துவமான ஒலியைப் பயன்படுத்துகின்றன.

Advertisement

பறவைகளுக்கு ஆபத்து ஏற்படும் சூழல் ஏற்பட்டால், குறிப்பாக கொன்றுண்ணிகள் அருகில் வந்தால், மற்ற பறவைகளை எச்சரிக்க, அவை குரல் எழுப்புகின்றன. குஞ்சுகள் ஆபத்தை உணரும்போது தங்கள் பெற்றோரை அழைக்க அபயக்குரலை எழுப்பும். இது அவர்களுக்குப் பாதுகாப்பளிக்க உதவுகிறது. குஞ்சுகளுக்கு பசி ஏற்படும்போது, பெற்றோர் அறியும் வகையில் அவை குரல் எழுப்பும்.

போலி கண் கழுகு

இமயமலை அடிவாரத்தில் இருந்து அதன் வெவ்வேறு உயரங்களில் தனித்துவமான பறவைகள் வாழ்கின்றன. இதில் அதிக உயரத்தில் பறந்து இரை தேடுவது 'கிரிபான் கழுகுகள்'.

உலகில் பழமையான பறவை இனங்களின் ஒன்றான இவை இமயமலை, திபெத்திய பீடபூமியை வாழ்விடமாகக் கொண்டு, மனிதர்கள் எளிதில் நெருங்க முடியாத உயரங்களில் கூடு கட்டும்.

இந்தக் கழுகுகளுக்கு கண்கள் இருந்தாலும், 'போலி கண்கள்' போன்ற கண்களும் இருக்கும். இதனால் இதன் தோற்றம் மிகவும் அச்சுறுத்துவதாக இருக்கும். எதிரிகளைப் பயமுறுத்தவும், உருவத்தை இயல்பைவிடப் பெரியதாக்கவும் இந்தக் கழுகுகள் போலியான தோற்றத்தை உருவாக்குகிறது. இதன் உடலில் இருக்கும் வழுவழுப்பான தோல், சுற்றியுள்ள இறகுகள் இணைந்து இதுபோன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது. உயிரினங்களை வேட்டையாடும்போது, தன்னை உருமாற்றிக் கொள்ள இதுபோன்ற உத்தியை இவை பயன்படுத்துகின்றன. இவை இறக்கைகளை விரிக்கும்போது, 7 அடி நீளம் வரை இருக்கும்.

இறந்த விலங்குகளின் உடல்களை இவை உண்பதால், இமயமலையைத் தூய்மையாக வைத்திருக்கவும், நோய்கள் பரவுவதைத் தடுக்கவும் முக்கியப் பங்காற்றுகின்றன.

அரிய வகை இனத்தைச் சேர்ந்த இந்தக் கழுகுகள் அழிவுநிலையில் உள்ள உயிரினமாக வகைப்படுத்தப்பட்டு, இந்திய வன உயிரினப் பாதுகாப்புச் சட்டத்தின்படி பாதுகாக்கப்படுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.