முகப்பு
தினமணி கதிர்

கோலிவுட் ஸ்டூடியோ

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஹன்சிகா மோத்வானி.

Updated On : 26 ஏப்ரல், 2026 at 4:07 AM
பகிர்:

விவாகரத்து குறித்து மனம் திறந்த ஹன்சிகா!

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஹன்சிகா மோத்வானி. இவருக்கும் சோஹேல் கதுரியா என்பவருக்கும் 2022ஆம் ஆண்டு ஜெய்பூர் அரண்மனையில் கோலாகலமாகத் திருமணம் நடந்தது.

ஆனால், திருமணம் ஆன சில வருடங்களிலேயே ஹன்சிகாசோஹேல் திருமண வாழ்க்கையில் விரிசல் ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. அதைத் தொடர்ந்து இருவரும் மும்பை பாந்தாரா குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரியிருந்தனர். அதன் அடிப்படையில் கடந்த மாதம் 11ஆம் தேதி இருவருக்கும் விவாகரத்து வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து இருவர் தரப்பிலும் எந்தத் தகவலும் வெளியாகவில்லை.

Advertisement

இந்த நிலையில், சமீபத்தில் ஹன்சிகா தனியார் செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்திருந்தார். அதில், மக்கள் எப்போதும் பரபரப்பான செய்திகளை எதிர்பார்ப்பார்கள். அதுபோன்றதொரு செய்தி என் மூலம் அவர்களுக்கு தலைப்புச் செய்தியளவு கிடைத்தது. அதற்குப் பிறகு, அது குறித்து நான் என்ன கருத்துக் கூறுகிறேன் என எதிர்பார்ப்பார்கள்.

எனது திருமண வாழ்வில் என்ன தவறு நடந்தது என்பது குறித்து நான் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இனிமேலும் அதைப்பற்றிப் பேசப்போவதில்லை. ஏனெனில், அது எனக்கு ஒரு பொருட்டே அல்ல. எல்லாம் சரியாகத்தான் இருக்கிறது. எனக்கு எந்த வருத்தமும் இல்லை.

தவறான ரயிலில் ஏறிவிட்ட பிறகு, அதில் பயணித்துத் துன்பப்படுவதை விட, அந்த ரயிலிலிருந்து இறங்கிவிடுவதுதான் சிறந்தது. நான் இயல்பாகவே மிகவும் மகிழ்ச்சியான, கலகலப்பான சுபாவம் கொண்டவள். அப்படிப்பட்ட நான் மிகவும் இருண்ட மனநிலையில் இருந்ததை என் அம்மாவும், சகோதரனும் நேரில் பார்த்திருக்கிறார்கள். இதில் உனக்கு மனநிறைவு அல்லது செளகரியம் இல்லை என்றால், அதில் தொடர்ந்து பயணிக்க வேண்டாம்' என எனக்கு உறுதுணையாக நின்றார்கள். எனவே, நீ என்ன முடிவு எடுத்தாலும், அதற்கு நாங்கள் துணை நிற்போம்' என்று கூறினார்கள்.

உண்மையாகச் சொல்லப்போனால், இன்றுவரை, எங்கள் இருவருக்கும் இடையில் என்ன நடந்தது என்பது யாருக்கும் தெரியாது. அதுவே மிகச் சிறந்தது என நினைக்கிறேன். இரண்டு நபர்களுக்கு இடையில் நடக்கும் விஷயங்கள் அவர்களுக்கு மட்டுமே தெரிந்திருக்கும் என்று நான் எப்போதும் கூறுவதுண்டு.

அதைப் பற்றி வேறொருவர் கருத்து தெரிவிப்பதற்கு எதுவும் இல்லை. எனது குடும்பத்தாரிடமிருந்து எனக்கு அளவற்ற ஆதரவு கிடைக்கிறது. எனக்கு எந்தவிதமான வருத்தங்களும் இல்லை. நான் இப்போது இருக்கும் நிலையில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்' எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

படம் வெளியாகியிருப்பதே வெற்றிதான் விக்னேஷ் சிவன் !

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், கீர்த்தி ஷெட்டி, எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' திரைப்படம் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருகிறது. நன்றி தெரிவிக்கும் விழாவில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டு பேசினார்கள்.

இயக்குநர் விக்னேஷ் சிவன், இந்தப் படம் வெளியாகியிருப்பதே ஒரு பெரிய வெற்றிதான். கனவு பெரிதாக இருந்தது என்றால், நிறைய சூழல்கள் காரணமாக எது சுலபமாக நடக்குமோ அந்த கம்ஃபோர்ட் ஜோனுக்குள் போய்விடுவோம். ஆனால், அதை உடைத்து, என் மீது நம்பிக்கை இல்லாத சமயத்திலும் என்னுடைய கம்

ஃபோர்ட் ஜோனில் இருந்து வெளியே வந்து இதைச் செய்தோம்.

படத்துக்கு நிறைய விமர்சனங்கள் வருகின்றன. படம் மெதுவாக நகர்கிறது என்று சொல்கிறார்கள். அனைத்தையும் ஆக்கபூர்வமான விமர்சனமாகப் பார்க்கிறேன். புதிதாக முயற்சி செய்த விஷயங்களுக்குக் கைதட்டல்கள் கிடைக்கிறது.

பிரதீப் ரங்கநாதன் இருந்ததனால்தான் இப்படம் நடந்திருக்கிறது. இல்லை என்றால் நடந்திருக்காது. இன்றைக்கு இயக்குநர்களின் சூழல் கவலைக்கிடமாகத்தான் இருக்கிறது. ஜனநாயகன்' லீக் ஆகியிருக்கிறது. என்னுடைய நண்பர் ஹெச்.வினோத்துக்கு ஆறுதல் சொல்கிறேன். இது மரணத்தைப் போன்ற வலியைக் கொடுக்கும்' என்றார்.

வரலாற்றுப் பின்னணியில் பகவான்!

அம்மன்யா மூவிஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் பகவான்'. வித்தியாசமான கதையம்சத்துடன் உருவாகும் இந்தப் படத்தில், ஆரி அர்ஜுனன் கதாநாயகனாக நடித்துள்ளார்.

அவருக்கு ஜோடியாக பூஜிதா பொன்னாடா கதாநாயகியாக நடித்துள்ளார். மற்றும் ஜேம்ஸ் பார்ரெட், சந்தோஷ் பிரதாப், ஆடுகளம் நரேன், டெல்லி கணேஷ், ஜெகன், ஆடுகளம் முருகதாஸ், யோக் ஜேபி, பிர்லா போஸ், லக்கி நாராயணன், அலெக்ஸ், அபிஷேக், சத்யா, மாஸ்டர் பாண்டி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இந்தப் படத்துக்கு முருகன் சரவணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். மகேந்திரன் கணேசன் எடிட்டிங் செய்திருக்கிறார். சம்பத் ஜியின் பாடல்வரிகளுக்கு ப்ரசன் பாலா இசையமைத்துள்ளார். பின்னணி இசையை யுவராஜ் அமைத்துள்ளார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் சு. காளிங்கன்.

படம் குறித்து இயக்குநர் பேசும்போது, இந்தப் பிரபஞ்சத்தில் நமக்கு புரியாத பல விஷயங்கள் இருக்கின்றன. அதில் எண்ணற்ற ரகசியங்கள் இருக்கின்றன. நாம் எல்லோரும் பகவானை வணங்குகிறோம். இந்த முழுப் பிரபஞ்சத்தை இயக்குபவர் பகவான் என்றால், அவர் யார்? அவர் வெறும் உருவமா? இல்லை வேறெதுவுமா? அப்படியெனில் இல்லுமினாட்டி யார்? இந்த கேள்வி

களுக்கான பதில் தான் இப்படத்தின் மையம்.

நாம் அறியாத புராண கால வரலாற்றின் பின்னணியில் மித்தாலஜிகல் திரில்லராக இப்படத்தை உருவாக்கியுள்ளோம். பகவான்' ஒரு சாதாரண கதையாக இல்லாமல், பார்வையாளர்களுக்கு புதிய அனுபவத்தை அளிக்கும் விதமாக உருவாகியுள்ளது. நாம் அறிந்த மகாபாரத கதையின் ஒரு பகுதியும் இதில் வரும்.

இப்படத்தில் ரசிகர்களுக்கு பல ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன. நாம் பொதுவாக கவனிக்காமல் இருக்கும் ஒரு சாதாரண உயிரினமான பல்லி இந்தப் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரமாக இடம்பெறுகிறது. இப்படிப் பல சிறப்புகள் இப்படத்தில் உள்ளன' என்றார்.

படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது நடந்து வரும் நிலையில் விரைவில் டிரெய்லர் மற்றும் வெளியீட்டு தேதி பற்றிய அறிவிப்புகள் அதிகாரபூர்வமாக வெளியாகும்.

டெல்டா அசோக்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.