திரைக் கதிர்
கங்கனா ரனாவத்தும், ராம் விலாஸ் பாஸ்வானின் மகன் சிராக் பாஸ்வானும் இப்போது அடிக்கடி பொது நிகழ்ச்சிகளில் சேர்ந்து கலந்து கொள்கின்றனர்.
கங்கனா ரனாவத்தும், ராம் விலாஸ் பாஸ்வானின் மகன் சிராக் பாஸ்வானும் இப்போது அடிக்கடி பொது நிகழ்ச்சிகளில் சேர்ந்து கலந்து கொள்கின்றனர். அவர்களின் நட்பைப் பார்த்து இருவரும் காதலிப்பதாக செய்திகள் வைரலாகப் பரவி இருக்கின்றன. இது குறித்து கங்கனா ரனாவத் விளக்கம் அளித்துள்ளார்.
நான் அவரைக் காதலிக்கவில்லை. நான் அவரை ஒரு நண்பராகத்தான் பார்க்கிறேன்.அவர் 10 ஆண்டுகளுக்கு முன்பு எனது படத்தை எடுத்தார். அதன் மூலம்தான் எங்களுக்குள் ஒருவரையொருவர் அறிமுகம் ஏற்பட்டது. அவர் திரைத் துறையில் இருந்து வந்தவர். அதனால் நான் அவரை மிகவும் நன்றாக உணர்கிறேன்' என்று கங்கனா கூறினார்.
'3 இடியட்ஸ்' படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக அமீர்கான் தெரிவித்திருக்கிறார். 2009 -ஆம் ஆண்டு ராஜ்குமார் ஹிராணி இயக்கத்தில், அமீர்கான், மாதவன், ஷர்மான் ஜோஷி நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்த படம் '3 இடியட்ஸ்'. ஹிந்தியில் வெளியான இப்படத்தை இயக்குநர் ஷங்கர் தமிழில் 'நண்பன்' என்ற பெயரில் ரீமேக் செய்திருந்தார்.
Advertisement
விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் நடித்த இந்தப் படம் மாபெரும் வெற்றி பெற்றிருந்தது. '3 இடியட்ஸ்' படம் வெளியாகி 17 ஆண்டுகள் ஆன நிலையில், '3 இடியட்ஸ்' படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக அமீர்கான் தெரிவித்திருக்கிறார்.
ஒரு நேர்காணலில் அமீர்கான், ''ராஜ்குமார் ஹிராணி இப்போது '3 இடியட்ஸ் 2' படத்துக்கான கதையை எழுதி வருகிறார். அந்தக் கதை நன்றாக இருக்கிறது. முதல் பாகத்தைப் போலவே நகைச்சுவை பாணி இருந்தாலும், இதுவரை சொல்லப்படாத கதையாக இது இருக்கும். '' என்று தெரிவித்துள்ளார்.
சத்ரபதி சிவாஜி மகாராஜாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருக்கும் படம் 'ராஜா சிவாஜி'. ரித்தேஷ் தேஷ்முக் இப்படத்தை இயக்கியிருக்கிறார். 'ராஜா சிவாஜி' படத்தில் அபிஷேக் பச்சன் நடித்திருக்கிறார்.
மே 1- ஆம் தேதி வெளியாகியுள்ளது இப்படம். சத்ரபதி சிவாஜி மகாராஜாவின் கதையை வெள்ளித்திரைக்குக் கொண்டு வருவதில் எதிர்கொண்ட சவால்களை ஜெனிலியாவின் கணவரும் நடிகருமான ரித்தேஷ் தேஷ்முக் விவரித்திருக்கிறார். அதேசமயம் தனது கனவுக்கு தூணாக இருந்த ஜெனிலியாவுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார்.
மேடையில் ஜெனிலியா குறித்துப் பேசிய ரித்தேஷ் தேஷ்முக், ''கனவு காண்பது ஒன்றும் பெரிய விஷயமல்ல. ஆனால், அது நிறைவேற யாராவது ஒருவர் உங்களுக்கு ஆதரவாகவும், உங்கள் மீது நம்பிக்கையும் வைத்திருக்க வேண்டும். அப்படி எனக்கு துணையாக நின்றவர் ஜெனிலியா'' என நெகிழ்ந்துள்ளார்.
'கேங்ஸ் ஆஃப் வசைப்பூர்' திரைப்படம் மூலம் பெரும் வரவேற்பைப் பெற்ற நடிகர் நவாசுதீன் சித்திக், பாலிவுட்டில் இன்று தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார்.
அண்மையில் அவர் ஒரு பேட்டியில், ''ஆரம்பக் காலத்தில் நமக்குள்ளே ஒரு பெரும் தன்னம்பிக்கையும், நடிப்பின் மீது ஒரு தீராத ஆர்வமும் இருக்கும். ஆனால், அடுத்தடுத்து எதிர்கொள்ளும் தோல்விகள், நம்முடைய தன்னம்பிக்கையை மெல்ல மெல்லச் சிதைக்கத் தொடங்கும். நம் மீது நமக்கே சந்தேகம் வரத் தொடங்கும். என்னையே சந்தேகித்து, 'நாம் இந்தத் துறைக்குச் சரிப்பட்டு வரமாட்டோமோ' என்று மனநிலை உண்டானது.
அந்த இக்கட்டான மனநிலையை நான் கடந்து வந்துள்ளேன். ஒவ்வொரு முறையும் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கும் போது, அது கடைசி நேரத்தில் கைநழுவிப் போகும். ஏறத்தாழ 10 ஆண்டுகளாக என்னை துரதிர்ஷ்டசாலியாகவே நான் கருதிக்கொண்டிருந்தேன். பெரிய வாய்ப்புகள் தேடி வரும்போது, அவை எதிர்பாராத விதமாகத் தடையாகிப் போகும்'' எனப் பேசியுள்ளார்.