முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

திரைக் கதிர்

இப்போது 75 வயதில் 'ஜெயிலர் -2', அடுத்து ஏப்ரல் மாதத்தில் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் நடிக்கப் போகிறார் ரஜினி.

Updated On : 21 மார்ச், 2026 at 10:46 PM
- Silverscreen Inc.
பகிர்:

இப்போது 75 வயதில் 'ஜெயிலர் -2', அடுத்து ஏப்ரல் மாதத்தில் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் நடிக்கப் போகிறார் ரஜினி. இதற்கிடையில் நெல்சன் இயக்கத்தில் ரஜினி - கமல் நடிக்கும் படத்தின் ப்ரமோ வெளியீடு என்று காலில் சக்கரம் கட்டிக் கொண்டு பம்பரமாய் சுழன்று நடிக்கிறார் ரஜினி.

இந்தியாவிலேயே விதவிதமான கார்களை நசுக்கி, உடைக்கும் பெரிய மிஷன்கள் கொண்ட பிரம்மாண்ட தொழிற்சாலை சண்டிகரில் இருக்கிறது. அங்கேதான் 'ஜெயிலர் 2' படத்துக்காக ரஜினி - ஷாருக்கான் கலந்து கொள்ளும் பிரமிப்பான காட்சிகளைப் படம் பிடிக்கிறார் நெல்சன்.

முதன் முதலாக ரஜினி - ஷாருக்கான் இணைந்து நடிக்கும் காட்சிகள் 'ஜெயிலர் 2' படத்தில் பெரிதாகப் பேசப்படும் அளவுக்குச் சிறப்பாகச் செதுக்கி வருகிறார் டைரக்டர் என்று சிலாகித்துச் சொல்கிறார்கள்.

ஹிந்தி, தமிழ் உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மொழிகளில் தன் இன்னிசைக் குரலால் ரசிகர்களைக் கட்டிப்போட்டவர் பின்னணிப் பாடகி ஸ்ரேயா கோஷல். இவர் அண்மையில் தனியார் செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்திருந்தார். அதில் தன் பயணம் குறித்து வெளிப்படையாகப் பேசியிருக்கிறார்.

'எனக்குப் பின்னணிப் பாடகராக இருப்பதை விட மேடையில் பாடுவதே மிகவும் பிடிக்கும். நேரடி மேடை நிகழ்ச்சியில் அதன் இயல்புதன்மை மாறாமல் இருப்பது முக்கியம். அப்போதுதான் அந்தக் கலைஞர் அந்த மேடையில் மையமாகத் திகழ்வார்.

மேடையில் பாடும்போது, ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட பாடலுக்கு ஏற்ப உதடுகளை மட்டும் அசைக்கும் 'லிப்-சிங்கிங்' முறையை, நான் ஒருபோதும் சார்ந்திருக்க விரும்பமாட்டேன். அப்படிச் செய்வது எனக்கு மிகுந்த சங்கடத்தை ஏற்படுத்துகிறது. ஒருவேளை நான் அப்படிச் செய்ய வேண்டிய சூழல் வந்தால், அன்றே நான் பாடுவதை நிறுத்திவிடுவேன்.' எனப் பேசியிருக்கிறார்.

சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் ராதிகா சரத்குமார், பால சரவணன், சிங்கம்புலி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியிருந்த படம் 'தாய் கிழவி'. இந்தப் படத்தை சிவகார்த்திகேயன் தயாரிக்க, நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்திருந்தார். கடந்த மாதம் வெளியான இந்தத் திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.

இதன் ப்ரமோவில் பேசிய சிவகார்த்திகேயன், 'நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு' படத்தைத் தயாரித்திருந்தேன். பிரஸ் ஷோவில் படம் முடியும்போது கார்த்திக் வேணுகோபாலின் பெயர் வந்தது. எல்லோரும் அதைப் பார்த்து கைதட்டினார்கள். அந்தச் சமயத்தில் கார்த்திக் வேணுகோபாலின் தந்தை எமோஷனலாகி அவரைக் கட்டிப்பிடித்துக்கொண்டார். அதே மாதிரியான ஒரு தருணம் மீண்டும் நடந்தது.

'தாய் கிழவி' படத்தைப் பார்த்த பிறகு சிவகுமார் முருகேசனின் அப்பா எங்கள் இருவரையும் கட்டி அணைத்துக்கொண்டார். அந்த செகண்ட் என்அப்பா இன்னும் சாகவில்லை என்பதை உணர்ந்தேன்' என்று சிவகார்த்திகேயன் கண் கலங்கியிருக்கிறார்.

சல்மான்கான் நடித்து வரும் படமான 'பேட்டில் ஆஃப் கல்வான்' படம், ஜம்மு காஷ்மீரில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா மற்றும் சீனா இடையே நடந்த மோதலை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வருகிறது.

இரு நாடுகளிடையே நடந்த இந்த மோதல் சம்பவத்துக்குப் பிறகு இரு நாடுகளிடையே வர்த்தக மற்றும் போக்குவரத்து உறவுகள் முற்றிலும் முடங்கிப்போனது. நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்போதுதான் இந்தியா மற்றும் சீனா இடையேயான உறவில் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது.

இந்தியாவில் சீனாவின் முதலீட்டை மத்திய அரசு அண்மையில் அனுமதித்தது. இந்நிலையில் 'பேட்டில் ஆஃப் கல்வான்' படத்தின் பெயரை திடீரென மாற்றி இருக்கின்றனர். புதிய படத்துக்கு 'மாத்ருபூமி' என்று பெயர் வைத்து இருக்கிறார்கள். புதிய தலைப்பை அறிவித்து வெளியிட்டு இருக்கும் போஸ்டரில் 'போர் அமைதியில் ஓய்வெடுக்கட்டும்' என்ற செய்தியைக் கொண்டதாக இருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.