முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

ஆவணப் படத்துக்கும் அங்கீகாரம் தேவை...

'திரைப்படங்களுக்கு ஒவ்வொரு பிரிவுக்கும் விருதுகளை தமிழ்நாடு அரசு அளிக்கிறது.

Updated On : 19 ஏப்ரல், 2026 at 4:11 AM
பகிர்:
Updated On : 18 ஏப்ரல், 2026 at 11:12 PM

அபூர்வன்

'திரைப்படங்களுக்கு ஒவ்வொரு பிரிவுக்கும் விருதுகளை தமிழ்நாடு அரசு அளிக்கிறது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு தணிக்கைச் சான்றிதழ்கள் இல்லாமலேயே விருதுகள் அளிக்கப்படுகின்றன. இதேபோல், தணிக்கைச் சான்றிதழ் இல்லாமல் ஆவணப் படங்களுக்கும் விருதுகள் வழங்க வேண்டும்'' என்கிறார் சென்னையைச் சேர்ந்த ஆவணப்பட இயக்குநர் அம்ஷன்குமார்.

திரைப்படம், ஆவணப் படங்கள், திரை ரசனை, எழுத்து என்று இயங்கி வருபவர் அம்ஷன்குமார். சுமார் முப்பது ஆவணப் படங்களை இயக்கிய இவர், 'தட்சிணாமூர்த்தி எல்லைக்கு அப்பாற்பட்ட இசை' என்ற ஆவணப்படத்துக்காக, 'இந்திய தேசிய திரைப்பட விருது' உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வென்றவர். மா.அரங்கநாதன் விருதை அண்மையில் பெற்றுள்ள அம்ஷன்குமாருடன் பேசியபோது:

Advertisement

'வாழ்க்கை வரலாற்றுப் படங்கள், எழுத்தாளர்கள், இசை, நாடகக் கலைஞர்கள், ஓவிய மரபுகள், சுற்றுப்புறச் சூழல், விவசாயம், கிராமத்தின் வளர்ச்சிப் பணி, கல்வி என்று பல வகையில் ஆவணப் படங்களை எடுத்திருக்கிறேன். 1995-இல் வெளிவந்த எனது முதல் ஆவணப் படமான 'மூன்றாம் அரங்கு' , வங்க நாடக இயக்குநர் பாதல் சர்க்காரின் நாடக இயக்கம் குறித்ததாகும்.

பின்னர், மகாகவி பாரதியார் குறித்து மூன்று ஆவணப் படங்களை எடுத்திருக்கிறேன். உலகெங்கும் திருக்குறளை எடுத்துச் செல்லும் முயற்சியாக, அண்மையில் எடுத்த 'வான்புகழ் வள்ளுவர்', இந்திய, ஐரோப்பிய மொழிகளில் தயாராகியுள்ளது. இதுதவிர 'ஒருத்தி', 'மனுசங்கடா' போன்ற திரைப்படங்களையும் இயக்கி உள்ளேன்.

ஆவணப் படம் தேர்வு

முதலில் ஓர் ஆவணப் படம் எப்படி எடுப்பது என்று தோன்றும். பிறகு அதற்கான தேடல்கள், ஆய்வுகளில் இறங்குவேன். சிலர் விடுக்கும் வேண்டுகோளுக்காக, எனக்கு விருப்பமும் ஒப்புதலும் இருந்தால் மட்டுமே ஆவணப் படங்களை இயக்குவேன்.

ஒவ்வொரு படத்துக்கும் நான் ஓர் ஆய்வையும் எடுத்துக் கொள்வேன். அவர்களே தரவுகள் கொடுத்தாலும் எனக்குத் திருப்தியான வகையில் நான் தனியாகக் களஆய்வு செய்வேன். ஆவணப் படங்களை எடுப்பது கடினமான வேலை. அந்த நேரத்தில் இரண்டு நாவல்களை எழுதிவிடலாம். ஆவணப்படம் எடுக்கும்போது தேடல்கள், உடல் உழைப்பு, பயணங்கள், சந்திப்புகள், நேர்காணல்கள், அலைச்சல்கள் என்று ஏராளம் நாம் சந்திக்க வேண்டும்.

தேடல் அனுபவங்கள்

பாரதியாரின் ஆவணப் படத்தின்போது அவருடன் பழகிய, 90 வயதுக்கு மேற்பட்ட கல்யாண சுந்தரம், ராமசாமி ஐயர் ஆகிய இருவரையும் நேர்காணல் செய்தோம். அவர்கள் சொன்ன கருத்துகள் பாரதியார் பற்றிய நல்லதொரு ஆவணப் பதிவாக, அவரை வளப்படுத்தக்கூடியதாக இருந்தது. தவில் இசைக் கலைஞர் யாழ்ப்பாணம் தட்சிணாமூர்த்தி படத்தை எடுத்தபோது, புதிய தகவல்கள் கிடைத்தன.

பொதுவாக திரைப்படத்தில் வரையறுக்கப்பட்ட அனுபவங்கள் கிடைக்கும். பெரும்பாலும் முன்னரே திட்டமிடப்படுபவை. ஆனால், ஆவணப்படங்களைப் பற்றிய தேடலில் எதிர்பாராத புதிய புதிய அனுபவங்கள் கிடைக்கும். ஆவணப் படங்களில் எதை நாம் செய்யப்போகிறோம் என்று தெரிந்தாலும்கூட, படம் வளரும் சமயத்தில் நாம் அதைப் பற்றித் தெரிந்து கொள்ளும் விஷயங்கள் நிறைய இருக்கும்.

விஞ்ஞானிகள், எழுத்தாளர்கள், பெரிய கலைஞர்கள் என முக்கிய பிரமுகர்களைச் சந்தித்த வாய்ப்புகள் மறக்க முடியாதவை. நகரத்துவாசியான எனக்கு இப்போதைய கிராமங்கள் எவ்வாறு உள்ளன என்பதையும் தெரிந்துகொள்ள முடிந்தது.

தொழில்நுட்பங்கள்

ஆவணப் படங்களில் தொழில்நுட்பங்களை எளிமையாகப் பயன்படுத்தலாம். அலங்காரப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. ஆவணப்படங்களும் கதைப் படங்களைப் போன்ற ஊடகம்தான். என் படங்களில் நல்ல தொழில்முறை கலைஞர்கள்தான் பணியாற்றி இருக்கின்றனர்.

பாராட்டு

என்னை மதித்து அளிக்கப்படும் அனைத்து விருதுகளையும் நான் மதிக்கிறேன். அவற்றை வேறுபடுத்திப் பார்ப்பதில்லை. அந்த வகையில் எனக்குக் கிடைத்த எல்லா விருதுகளையும் மதிக்கிறேன். பாராட்டு என்கிறபோது, ஒன்று நினைவுக்கு வருகிறது.

எழுத்தாளர் கி. ராஜநாராயணன் எழுதிய 'கிடை' என்கிற கதையை அடிப்படையாக வைத்து, சில மாற்றங்களைச் செய்து நான் 'ஒருத்தி' என்றொரு திரைப்படத்தை எடுத்தேன். பொதுவாக எழுத்தாளர்கள் தங்கள் கதைகளில் மாற்றம் செய்வதை விரும்புவதில்லை. அவர் என்ன சொல்வாரோ என்று தயங்கியபடி திரையிட்டபோது,

கி.ராஜநாராயணன், 'நான் ஒரு வீடு கட்டினேன். அம்ஷன்குமார் அதன் மேல் மாடி கட்டி இருக்கிறார்' என்று பாராட்டியதை என்னால் மறக்க முடியாது'' என்கிறார் அம்ஷன்குமார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.