FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தினமணி கதிர்

திரையில் பேசிய பெண் மொழி

வேத காலத்துக்குப் பின்னர், 'குரு-சீடன் உறவு முறை நிகழ்காலத்தில் நடைமுறையில் இருக்கும் துறைகளில் திரைத்துறை குறிப்பிடத்தக்கது.

Updated On : 5 ஜூலை 2026, 4:00 am IST
பகிர்:

வேத காலத்துக்குப் பின்னர், 'குரு-சீடன் உறவு முறை நிகழ்காலத்தில்  நடைமுறையில் இருக்கும் துறைகளில் திரைத்துறை குறிப்பிடத்தக்கது. ஒருவர் திரைப்பட இயக்குநராக வேண்டும் எனில், ஏதேனும்  ஓர்  இயக்குநரிடம் உதவி இயக்குநராக, இணை இயக்குநராகப் பணியாற்றி, பின்னர் இயக்குநராக வரவேண்டும் என்பது தமிழ்த் திரைத் துறையின்  எழுதப்படாத விதி.

இதில், இயக்குநர் மணிரத்தினம் போன்ற விதிவிலக்கும் உண்டு. இந்த எழுதப்படாத விதிப்படி, 'இயக்குநர் இமயம்' பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக, இணை  இயக்குநராகப் பணியாற்றி, 1979-ஆம் ஆண்டு 'புதிய வார்ப்புகள்' திரைப்படத்தில் கதாநாயகனாகவும், அதே ஆண்டில் 'சுவர் இல்லாத சித்திரங்கள்' எனும் திரைப்படத்தில் இயக்குநராகவும் அறிமுகமானவர்தான் பன்முக ஆளுமையாளர் கே.பாக்யராஜ்.

'இந்தியத்  திரைப்படத் துறையின் மிகச் சிறந்த  திரைக்கதையாளர்'  என்ற மாபெரும் புகழ் மகுடத்துக்கு உரியவர் பாக்யராஜ். பாரதிராஜாவின் '16 வயதினிலே', 'கிழக்கே போகும் ரயில்', 'சிவப்பு ரோஜாக்கள்' உள்ளிட்ட படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றி, அந்தப் படங்களின் வெற்றிக்குக் காரணமாக வசனங்களை எழுதியவர் கே.பாக்யராஜ். திரைப்பட இயக்குநர் என்பது மட்டும் பாக்யராஜின் அடையாளமல்ல; கதையாசிரியர், திரைக்கதையாசிரியர், வசனகர்த்தா, நடிகர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர், இதழாசிரியர்.. என்று பன்முக ஆளுமையாகத் தமிழ்த் திரையுலகில் சாதனைகளைப் படைத்தவர் பாக்யராஜ்.

Advertisement

Advertisement

எழுபத்து மூன்று வயது நிரம்பிய இயக்குநர் கே.பாக்யராஜ் திரைத்துறையில் நிகழ்த்திய சாதனைகள் ஏராளம். தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் உள்பட பல மொழிகளில் எழுபதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்குத் திரைக்கதை எழுதிய பாக்யராஜ், 27 திரைப்படங்களை இயக்கியதுடன், 7 திரைப்படங்களைத் தயாரிக்கவும், 6 திரைப்படங்களுக்கு இசையமைக்கவும் செய்துள்ளார்.

பாக்யராஜின் திரைப்படங்களில் பல்வேறு புதிய உத்திகள் இடம்பெறுவதுண்டு. படத் தொடக்கத்தில் நடிகர், நடிகை உள்ளிட்டவர்களின் பெயர் குறிப்பிடும் இடங்களின் முடிவில் இயக்குநரின் பெயர் குறிப்பிடுவது இயல்பு. ஆனால், பாக்யராஜின் திரைப்படங்களில் அவ்வாறு தொடக்கத்தில் குறிப்பிடுவது இல்லை. மாறாக, கதையின் ஓட்டத்தில் ஒரு ரசிக்கத்தக்க காட்சி இடம்பெறும் இடத்தில், குறும்புத்தன்மை வாய்ந்த இடத்தில், 'கதை-திரைக்கதை-வசனம்-இயக்கம் உங்கள் கே.பாக்யராஜ்' எனக் குறிப்பிடும் போக்கை பாக்யராஜ் கைகொண்டிருந்தார்.

இவ்வாறே, பெண்களின் பண்புகளையும், அவர்களது உழைப்பு, தியாகம் போன்ற பண்புகளை உயர்த்திடப் பல்வேறு புதிய உத்திகளைத் தன்னுடைய திரைப்படங்களில் கையாண்டவர் இயக்குநர் பாக்யராஜ்.

காதலும், காமமும்..: பாரதிராஜாவின் படைப்புகளில் மண்மொழி இருந்தது என்றால், பாக்யராஜ் திரைப்படங்களில் பெண் மொழி இருந்தது எனலாம். பாக்யராஜின் திரைப்படங்களின் மீது பெண்களுக்குப் பெரும் ஈர்ப்பு ஏற்பட இரண்டு காரணங்கள். ஒன்று பெண்களின் பிரச்னைகளைப் பேசும் கதைக்கரு, மற்றொன்று பெண்கள் பேசத் தயங்கும் காதல்-காமத்தைச் சிருங்காரச் சுவையுடன் பேசும் பாக்யராஜ் வசனங்கள் . இந்த இரண்டின் கலவையாக அமைந்த அவருடைய திரைப்படங்கள் பெண்களைக் கூட்டம் கூட்டமாகத் திரையரங்குக்கு அழைத்து வந்தது.

ஒரு பெண் அதிகம் தூற்றப்படுவது அவளது நடத்தையைக் காரணமாக வைத்தே நடக்கும். இதில் சில உண்மைகள் இருப்பினும், 90 விழுக்காடு அவதூறாகவே இருக்கும். குறிப்பாக, கிராமத்துப் பெண்களின் மன உணர்வுகளும் குடும்பச் சூழல்களும் மன அழுத்தங்களும் பாலியல் ஆதிக்கமும் அதிகம் பேசப்படாத திரைத்துறையில் அவர்களின் அவலங்கள், எதிர்பார்ப்புகள், நியாயங்களைத் தம் திரைப்படங்களில் காட்சிப்படுத்துகையில் தனது திரைக்கதை வடிவமைக்கும் திறனால் அனைவரையும் தனது கருத்தை ஏற்கும் மனநிலைக்குக் கொண்டுவந்துவிடுவார்.

இதில் சிறு பிசகல் ஏற்பட்டாலும், அந்தக் காட்சி எதிர்மறையான பொருளையும் சமூக எதிர்ப்பையும் கொண்டு வந்து விடும் என்ற கவனத்துடன் அந்தக் காட்சிகளை வடிவமைக்கும் திறன் பாக்யராஜுக்கு உண்டு.

குறிப்பாக, 'விதி' திரைப்படத்தில், 'யாரேனும் ஒரு பத்தினியின் பெயரைச் சொல்லுங்கள்' எனக் கேட்டு, கண்ணகி, சீதை, நளாயினி என காப்பிய மாந்தர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு, 'ஏன் உங்களின் மனைவி, தங்கை, தாய், சகோதரி என தமது உறவு பெயர்களை ஏன் சொல்லவில்லை' என முடிச்சை அவிழ்த்து பெண்ணின் கற்புக்கு அணி செய்யும் வகையில் அமைக்கப்பட்ட காட்சியைப் போன்று பல காட்சிகளைக் குறிப்பிட முடியும்.

பெண்களின் தாலி, பிள்ளை, கர்ப்பம், கற்பு, மனைவி எனப் பல்வேறு உணர்வுபூர்வச் சிக்கல்களை எளிய காட்சிகளின் வழியாக வெளிப்படுத்தும் பாக்யராஜின் காதலையும், காமத்தையும் தனக்கே உரிய தனித்தன்மை வாய்ந்த சிருங்காரச் சுவையுடன் பேசும்போதும் அவற்றுக்குப் பெண்களிடம் பெரும் வரவேற்பு ஏற்படும்.

'விதி' திரைப்படத்தில் ராதா - ராஜா காதல் விவகாரம் பெரும் பேசுபொருளாகும் நிலையில், 'கொஞ்சம் செக்ஸியா இருக்கும் பரவாயில்லையா?' எனக் கேட்டு, ' ஆணும் பெண்ணும் பூட்டும் சாவியும் போல... தனித்தனியே பிரிந்திருக்கக் கூடாது, இணைந்திருக்க வேண்டும். அதுதான் குடும்பம், அதுதான் சமூகம்' எனப் பேசி முடிக்கையில், 'என்ன இவ்வளவு அழகான செய்தியை செக்ஸி எனச் சொல்கிறீர்களே?' எனக் கேட்க வைத்து, 'செக்ஸியும் அழகான ஒன்றே. அதனை நாம் இன்னும் புரிந்துகொள்ளவில்லை' என குணச்சித்திர பாத்திரத்தில் வரும் பாக்யராஜ் குறிப்பிடுவது ரசிகர்களால் இன்றும் மறக்க முடியாதவை.

'முந்தானை முடிச்சு' முருங்கைகாய், 'சின்ன வீடு', 'இது நம்ம ஆளு' போன்ற திரைப்படங்களில் இடம்பெறும் காதல்-காமம் குறித்த காட்சிகள் பெண்களிடம் அருவருப்பை ஏற்படுத்தாமல் விரசமின்றி அழகியலையும் ஈர்ப்பையும் உள்ளூர ரசிக்கும் பண்பையும் வெளிப்படுத்துவதாக அமைந்தது.

எம்.ஜி.ஆரின் கலைவாரிசு: மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர். மீது அளவு கடந்த பற்றை பாக்யராஜ் கொண்டிருந்தார். தன்னுடைய திரைப்படங்களில் எம்.ஜி.ஆரைப் புகழ்ந்தும், அவரது ஆட்சியின் திட்டங்களை வரவேற்றும் காட்சிகளை அமைத்தார். மேலும், தனது ஒவ்வொரு பிறந்த நாளின்போதும் எம்.ஜி.ஆரிடம் வாழ்த்து பெறுவார். அதுமட்டுமல்லாமல் எம்.ஜி.ஆரே, 'எனது கலையுலக வாரிசு' என்று பாக்யராஜை அறிவிப்பு செய்தார்.

எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு 1989-இல் 'எம்.ஜி.ஆர். மக்கள் முன்னேற்றக் கழகம்' என்ற கட்சியைத் தொடங்கித் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியுற்ற நிலையில் தனது கட்சியை அதிமுகவில் இணைத்து, பின்னர் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்து, பின்னர் அரசியலில் இருந்து விலகி பார்வையாளராக இருந்தாலும் அவருக்குள் அரசியல் புரிதலும் ஈர்ப்பும் இருந்தே வந்திருக்கிறது.

பாக்யராஜின் தனித்துவம்: தமிழில் 'பா' வரிசை இயக்குநர்கள் என்று பெரும் படை உண்டு. பாலசந்தர், பாரதிராஜா, பாக்யராஜ், பாலுமகேந்திரா. பாக்யராஜுக்கு பாண்டியராஜன், பார்த்திபன், வி.சேகர், லிவிங்ஸ்டன், ஜி.எம்.குமார் போன்ற சீடர் படை உண்டு.

'பாக்யா' வார இதழின் ஆசிரியராகவும் வெளியீட்டாளராகவும் இருந்து பல ஆண்டுகள் நடத்தியவர் பாக்யராஜ். இதில் கவிதைகளை எழுதத் தொடங்கி, பின்னர் பாடலாசிரியராக வளர்ந்தவர் பா.விஜய். தமிழ் இதழியல் உலகில் 'பாக்யா' வுக்கு வரவேற்பு இருந்ததற்குக் காரணம் அதன் 'கேள்வி-பதில் பகுதி'. இதில் இடம்பெறும் குட்டிக் கதைகள் வாசகர்களுக்குப் பல்வேறு தகவல்களை அள்ளித்தரும் கருவூலம்.

தமிழ்த் திரை உலகினைத் தாண்டி, இந்தியத் திரையுலகில் பாக்யராஜ் கவனம் பெற்ற பகுதி அவரது திரைக்கதை வடிவமைப்பு. தமிழில் 'மெளன கீதங்கள்' என்ற பெயரில் வெளிவந்த திரைப்படம் ஹிந்தியில் 'ஏக் ஹை பூல்' என்ற பெயரிலும், தமிழில் 'அந்த 7 நாட்கள்' , தெலுங்கில் 'ராதா கல்யாணம்' என்ற பெயரிலும், முந்தானை முடிச்சு தெலுங்கில் 'மூடு முள்ளு' என்றும், ஹிந்தியில் 'மாஸ்டர் ஜி' என்றும் வெளியானது. 'ஒரு கைதியின் டைரி', 'கன்னிப் பருவத்திலே' போன்றவை முறையே 'ஆக்ரி ராஸ்தா', 'சம்சாரத குட்டு' என்று ஹிந்தியிலும் வெளியானதற்கும் மறு ஆக்கம் செய்யப்பட்டதற்கும் பாக்யராஜின் திரைக்கதை வடிவமைப்புத் திறனே காரணமாக அமைந்தது.

சிறந்த திரைப்படம், சிறந்த திரைக்கதை, சிறந்த இயக்கம் உள்ளிட்டவைக்காக மத்திய-மாநில அரசுகளின் விருதுகளைப் பெற்ற பாக்யராஜுக்கு அவர்தம் மறைவுக்குத் தமிழ்நாடு அரசு முழு அரசு மரியாதை அறிவித்து சிறந்த அஞ்சலியை செலுத்தியுள்ளது. இந்திய அளவில் மிகப் பெரும் திரைக்கதை ஆசிரியர்களில் முதலிடத்தில் இருக்கும் பாக்யராஜுக்கு அவரது மறைவுக்குப் பின்னராவது 'பத்ம விருது' வழங்க வேண்டும் என்பது இந்தியத் திரைத்துறையினரின் வேண்டுகோள். மத்திய, மாநில அரசுகள் சிந்திக்கட்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments