நம்பிக்'கை'
கவிஞர், எழுத்தாளர், சமூகச் சேவையாளர், நிகழ்ச்சித் தொகுப்பாளர், நாற்பதுக்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றவர் என்று பல சிறப்புகளை உடைய வீ.கோவிந்தசாமி, தனது வலது 'கை'யை இழந்தாலும், நம்பிக்கையை இழக்காமல் 16 நூல்களை எழுதியுள்ளார்.
பொ.ஜெயச்சந்திரன்
கவிஞர், எழுத்தாளர், சமூகச் சேவையாளர், நிகழ்ச்சித் தொகுப்பாளர், நாற்பதுக்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றவர் என்று பல சிறப்புகளை உடைய வீ.கோவிந்தசாமி, தனது வலது 'கை'யை இழந்தாலும், நம்பிக்கையை இழக்காமல் 16 நூல்களை எழுதியுள்ளார். அரசுப் பணியில் பணியாற்றி ஓய்வு பெற்றும் சமூகப் பணிகளில் ஈடுபட்டுவருகிறார்.
திருச்சி சுப்பிரமணியபுரம் பகுதியில் வசிக்கும் அவர் பேசியது:
'திருச்சி மாவட்டத்துக்கு உள்பட்ட ஏரகுடி கிராமத்தில் பிறந்தேன். 1955-ஆம் ஆண்டு முதலாம் வகுப்பு படித்தபோது, விளையாடும்போது, எதிர்பாராவிதமாக கீழே விழுந்தேன். முறையான சிகிச்சை இல்லாததால், வலது கையை இழந்தேன். அதற்காக சோர்ந்துவிடவில்லை. இடதுகையைப் பயன்படுத்தினேன். எழுதுவது உள்பட அனைத்து வேலைகளையும் இடதுகையால் செய்கிறேன்.
1965-66-ஆம் கல்வியாண்டில் அ.கோ.மு. உயர்நிலைப் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. முடித்து, 1966-67-இல் திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் புதுமுக வகுப்பு (பி.யு.சி.) சேர்ந்தேன். திருச்சி தேசியக் கல்லூரியில் பி.ஏ. பொருளாதாரம் படித்தேன்.
சொந்த கிராமத்தில் 'முத்தமிழ் மன்றம்' தொடங்கி, இலக்கியப் போட்டிகளை நடத்தினோம். 1973-இல் பொங்கல் விழாவாக 'இன்ப நாள்' நாடகத்தை அரங்கேற்றம் செய்தோம்.
1973, 74-இல் சென்னை உணவுப் பொருள் வழங்குதல் பிரிவில் உதவியாளராகவும், 1976- இல் மதுரை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சிறப்பு வேலைவாய்ப்பு அலுவலராகவும் பணியாற்றினேன். 1978 -ஆம் ஆண்டு பிப்ரவரி 10-இல் திருமணம் நடைபெற்றது.
1979-இல் மாநில அரசுப் பணியிலிருந்து விடுபட்டு, மத்திய அரசின் தூத்துக்குடி துறைமுகப் பணியில் மாறுதல் பெற்றேன். 1984-இல் துறைமுகப் பணிக் குழுத் தேர்தலில் வெற்றி பெற்றேன். 1989, 1996-ஆம் ஆண்டுகளில் தூத்துக்குடி துறைமுக ஊழியர் கூட்டுறவு பண்டகச் சாலையின் நிர்வாகப் பொறுப்புக்குத் தேர்வாகி, பணியாற்றினேன். தமிழ்நாடு அரசின் துறைமுகக் கிளை நூலக வாசகர் வட்டத் தலைவராக இருந்து, நூலகத்தை பல வகைகளிலும் மேம்படுத்தினேன்.
சேது சமுத்திரத் திட்டப் பணியை தூத்துக்குடி துறைமுகமே மேற்கொண்டதால், துறைமுகத் தலைவர் ந.க.ரகுபதியே திட்டத் தலைவராக இருந்தார். 2004-இல் திட்டப் பணிகள் தீவிரமடைந்தன. திட்டத்தின் கடலோர சமுதாய மேம்பாட்டுத் திட்ட ஒருங்கிணைப்பாளரானேன். அங்கு வாழ்வோரின் வாழ்வாதாரத்துக்கும், பொருளாதார மேம்பாட்டுக்கும் ரூ.60 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இதில், ராமேசுவரத்தில் உள்ள சிறிய துறைமுகம் அபிவிருத்தி, திட்டம் தொடர்புடைய நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் மீன்பிடித் துறைமுகங்கள் அமைக்கப்பட்டன.
2005-ஆம் ஆண்டு ஜூலை 2-இல் அன்றைய பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்ற விழாவில் தொகுப்புரையாற்றினேன். மகளிருக்கான வாழ்வாதாரப் பயிற்சி மூன்றுஆயிரம் பேருக்கு அளிக்கப்பட்டது. பல்நோக்குத் திட்டப் பணிகள் சார்ந்த கண்காட்சிகளை நடத்த உறுதுணையாக இருந்தேன். 16 நூல்களை எழுதியிருக்கிறேன்.' என்கிறார் வீ.கோவிந்தசாமி.