முகப்பு
தினமணி கதிர்

எலிவளை தொழில் நுட்பத்தில் பசுமை வீடுகள்

புவி வெப்பமயமாதல் மிகப் பெரிய சவாலாக உருவெடுத்துள்ள நிலையில், வெப்பத்தை அதிகமாக ஈர்க்கக் கூடிய கான்கிரீட் வீடுகள், கட்டடங்களின் ஆதிக்கமே அதிகரித்துள்ளது.

Updated On : 21 மார்ச், 2026 at 1:43 PM
பகிர்:

புவி வெப்பமயமாதல் மிகப் பெரிய சவாலாக உருவெடுத்துள்ள நிலையில், வெப்பத்தை அதிகமாக ஈர்க்கக் கூடிய கான்கிரீட் வீடுகள், கட்டடங்களின் ஆதிக்கமே அதிகரித்துள்ளது. இதனால், பசுமை வீடுகள் கட்டுவதற்கான தேவை மேலோங்கி வந்தாலும், புரிதல் இல்லாததால் அவற்றைக் கட்டுவதற்கு மக்கள் தயங்குகின்றனர்.

இந்த நிலையில், தஞ்சாவூரைச் சேர்ந்த மூத்தக் கட்டடப் பொறியாளரும், திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகம் (என்.ஐ.டி.) உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களின் வருகைதரு பேராசிரியருமான எஸ். ராஜேந்திரன் நாற்பது ஆண்டுகளில் 250 பசுமை வீடுகளைக் கட்டிக் கொடுத்துள்ளார்.

அவரிடம் பேசியபோது:

'கான்கிரீட் வீடுகளுக்குப் பயன்படுத்தப்படும் சிமென்டை உற்பத்தி செய்வதற்கு நிறைய ஆற்றல் தேவைப்படுகிறது. ஒரு டன் சிமென்ட் உற்பத்தி செய்வதற்கு 4 டன் கார்பன் டை ஆக்சைடு வெளியாகிறது. ஆயிரம் சதுர அடியில் கட்டப்படும் வீட்டுக்கு 50 ஆயிரம் செங்கற்கள் தேவை. ஒரு லட்சம் டன் செங்கற்களை உற்பத்தி செய்வதற்கு 25 டன் மரங்களை (12 புளிய மரங்கள்) எரிக்க வேண்டும். இதற்குப் பதிலாக சுண்ணாம்புக்

கல்லிலிருந்து கிடைக்கும் சுண்ணாம்பை மணலில் சேர்த்து கட்டடத்துக்குப் பயன்படுத்தினால், வெப்பத் தாக்கம் குறைவாக இருக்கும். இதுபோல கட்டப்படும் வீடுகளை 'பசுமை இல்லம்' என்கிறோம்.

சோழர் காலத்தில் செங்கற்களுக்குப் பதிலாக மண்ணைப் பயன்படுத்திக் கட்டினர். இரு புறமும் பலகையைக் கட்டி, நடுவில் மண்ணைக் குழைத்து, அடுக்கிக் கொண்டே சென்று, அதை வைக்கோல் பிரிகளை வைத்துச் சுற்றி, இறுக்கமாகக் கட்டுவர். அது, காய்ந்த பிறகு சுவராக மாறிவிடும். இந்த மண் சுவர் வலிமையாக நீண்ட காலத்துக்கு உழைத்து வரும் விதமாக கருங்கற்களை இடையிடையே வைத்துக் கட்டுவர். மேலே மூங்கில், தென்னங்கீற்றுகள், பனைமரச் சக்கைகளைக் கொண்டு மேற்கூரை அமைத்தனர்.

மெட்ராஸ் ஒட்டு

பிற்காலத்தில் சுண்ணாம்பு சேர்த்து வீடு கட்டி, அதன் மீது நாட்டு ஓடுகள் வேயப்பட்டன. அடுத்தகட்டமாக, நாட்டு ஓடுகளிலிருந்து ஆங்கிலேயர் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட சீமை ஓடுகள் போடப்பட்டன. மாடி வீடு கட்டுவதற்கு பனை மரம், தென்னை மரச் சக்கைகளை வைத்து அதன் மீது மெல்லிய செங்கற்களை அடுக்கினர். இதை 'மெட்ராஸ் ஒட்டு' எனக் கூறுவர். மாமன்னன் ராஜராஜசோழன் காலத்திலேயே ஓடுகள் வேய்ந்த அறிவியல் இருந்தது. கல் உத்தரங்களில் பாவுக்கற்களை வைத்து, சுண்ணாம்பு, மணல் கலந்த காரை பயன்படுத்தி மேற்கூரை போட்டனர். இந்தப் பொருள்கள் கிடைப்பது அரிதானதால், இந்தக் கட்டுமான முறை மிகுந்த செலவுமிக்கதாக மாறியது.

கான்கீரிட் கட்டுமானம்

சிமென்ட் கண்டுபிடிக்கப்பட்டவுடன் 1917-இல் கம்பிகளைப் பயன்படுத்திக் கட்டப்படும் கான்கிரீட் கட்டுமானம் வந்தது. தொடக்கத்தில் பணக்காரர்கள்தான் கட்டினர். 1930-களில் அனைத்துத் தரப்பினரும் கட்டக்கூடிய தொழில்நுட்பமாக மாறிவிட்டது. இந்தக் கட்டுமானம் ஏறத்தாழ 80 ஆண்டுகளுக்கு மட்டுமே நீடித்திருக்கும். ஆனால், மண்ணைக் குழைத்து கட்டும் வீடு நீண்ட காலத்துக்கு உழைக்கும். நவீனமாகக் கட்ட வேண்டும் என்பதற்காக கான்கிரீட் கம்பிக் கட்டடத்தையே விரும்புகின்றனர்.

பசுமை வீடுகள்

பசுமை இல்லத்துக்காக, 'ஏரோகான்' என்கிற எடை குறைவான பெரிய வெள்ளைக் கற்களைப் பயன்படுத்தி வீடுகளைக் கட்டுகின்றனர். இந்தக் கற்களைப் பயன்படுத்தி கட்டப்படும் வீடுகளில் வெப்பம் தெரியாது. செங்கற்களைவிட 10 - 12 சதவீதம் கூடுதல் செலவாகும். குறைந்த செலவில் கட்டுவதற்கு, 'இந்தியக் கட்டடக்கலை சிற்பி' எனப் போற்றப்படும் லாரி பேக்கரின் எலிவளை தொழில்நுட்பம் சிறந்தது. செங்கற்களை உள்ளுக்குள் இடைவெளிவிட்டு, எலிவளை போன்று கட்டப்படுவதால், வெளியில் எவ்வளவு வெப்பம் இருந்தாலும், வீட்டுக்குள் அதன் தாக்கம் இருக்காது. இந்தத் தொழில்நுட்பத்தில் ஆயிரம் செங்கற்களுக்கு 250 கற்களைச் சேமிக்க முடியும். மொத்தத்தில் 27 சதவீத செலவு மிச்சப்படும். மூன்று வீடுகள் கட்டினால், ஒரு வீடு செலவில்லாமல் கட்டிவிடலாம்.

இந்தத் தொழில்நுட்பத்தில் சுவரின் உள்ளேயும், வெளியேயும் சிமென்ட் பூச்சு தேவைப்படாது. சிமென்ட் பூச்சு என்பது தேவைக்கு அதிகமான மேக்கப் போன்றது. இது, வெப்பத்தை உள்வாங்கி வீட்டுக்குள் விடும். எனவே, சிமென்ட் பூச்சு இல்லாமல், அதன் மீது பால்ம வண்ணப் பூச்சுடன் (எமல்சன் பெயின்ட்) பூசினால், வெப்பத்தை உள் வாங்காது. வெயில் காலத்தில் இதமாகவும், குளிர் காலத்தில் கதகதப்பாகவும் இருக்கும்.

தாய் சுவரில் தேவையான அளவுக்கு ஜன்னல்கள் வைக்கப்படுவதால், வீட்டுக்குள் காற்றோட்டமும், வெளிச்சமும் கிடைக்கிறது. இதனால் மின் விசிறி, மின் விளக்குப் பயன்பாடு குறைகிறது. கோடைகாலத்தில் கூட குளிர்சாதன இயந்திரத் தேவையும் ஏற்படாது. ஒரு தளத்துடன் கட்டப்படும் வீட்டுக்குள் மேல் விட்டத்தின் உயரம் 11 அடி முதல் 12 அடி உயரம் இருக்கலாம். இரு தளங்களுக்கு 23 அடி வரை கட்டலாம். 12 அடிக்கும் அதிகமான உயரம் இருந்தால் காற்றோட்டம் நன்றாக இருக்கும். மேல் விட்டத்தின் உச்ச நடுவில் முற்றம் போன்ற காற்றோட்ட வசதி ஏற்படுத்தப்படுவதால், வெப்பத்தைப் போக்கி வீட்டை இதமாக வைத்திருக்கும். இதனால், கான்கிரீட் வீடுகளை விட எலிவளை தொழில்நுட்பத்தில் கட்டப்படும் வீடுகளில் கோடைகாலத்தில் நிலவும் வெப்பத்தில் 4 டிகிரி குறைவாகவே இருக்கும்.

கேரளத்தில் இந்த எலிவளை தொழில்நுட்பம் குறித்த விழிப்புணர்வு அதிகம் என்பதால், நிறைய வீடுகளைக் காண முடியும். சிறு, சிறு மாற்றங்களுடன் வளர்ச்சியும் அடைந்திருக்கிறது. சிக்கனமாகக் கட்டக்கூடிய இந்தத் தொழில்நுட்பம் நடுத்தர மக்களுக்கு சிறந்த மாற்று வழி. இதில், 27 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை மிச்சப்படுத்த முடியும்' என்கிறார் ராஜேந்திரன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.