அனல்மேல் மெழுகானோம்!
கோடையின் தாக்கம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கும் எனும்போது, நாமும் அதற்கேற்ப நடவடிக்கைகளை முன்னெடுக்காமல், இடைக்கால நிவாரணத்தில் திருப்தி அடைந்தால் எப்படி?
ஒட்டுமொத்த இந்தியாவும் செங்கல் சூளைக்குள் அகப்பட்டதுபோல, வெப்பத்தால் வியர்வையில் குளித்துக் கொண்டிருக்கிறது. உலகில் மிக அதிக வெப்பத்தை எதிர்கொள்ளும் 100 நகரங்கள் இந்தியாவில் இருக்கின்றன. அவற்றில் முதல் பத்து நகரங்கள் உத்தர பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களைச் சேர்ந்தவை. அவற்றில் முதல் நான்கு நகரங்களின் வெப்பம் 48 டிகிரி செல்சியûஸ கடந்தது என்றால், மீதமுள்ள நகரங்கள் 47 டிகிரி செல்சியûஸ தொட்டன.
மிக அதிக வெப்பத்தை எதிர்கொண்ட உத்தர பிரதேசத்தின் பாண்டா மாவட்டம் மே மாதத்தில் நான்கு முறை ஆசியாவிலேயே அதிக வெப்பத்தை எதிர்கொண்டது என்பது மட்டுமல்லாமல் இரண்டு முறை உலக வெப்பப் பட்டியலிலும் இடம்பெற்றது. சவூதி அரேபியாவின் ஜெட்டாவும் (48.6), அராஃபத்தும்(48.4) பாண்டாவைப் பின்னுக்குத் தள்ளின.
இதுவரையில் கணக்கெடுக்கப்பட்ட ஆண்டுகளில் 2019 ஜூன் 10-ஆம் தேதி 49.2 டிகிரி செல்சியஸ் என்ற உச்சபட்ச வெப்பத்தை உலகம் எதிர்கொண்டது. விஞ்ஞானிகளையும், வானிலை ஆய்வாளர்களையும் 47 டிகிரி, 48 டிகிரி செல்சியஸ் என்பது அதிர்ச்சி அடைய வைக்கவில்லை என்றாலும் அச்சத்தை ஏற்படுத்துகிறது. இந்த அளவிலான வெப்பத்துக்கு கோடைப் பருவம் மட்டுமே காரணமல்ல. வறண்ட நதிகள், குறைந்துவரும் நிலத்தடி நீர்மட்டம், வரைமுறை இல்லாத மணல் அள்ளுதல், அதிகரித்து வரும் கான்கிரீட் கட்டடங்கள் உள்ளிட்டவையும் வெப்பத்தைத் தணிக்கவிடாமல் செய்கின்றன.
Advertisement
Advertisement
இந்த ஆண்டு வழக்கத்துக்கு முன்பே கோடை வெயில் தொடங்கி விட்டது. மத்திய இந்தியாவிலும், தென்னிந்தியாவிலும் ஏப்ரல் மாதம் முதலே 40 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகத் தொடங்கியது. இப்போதுதான் மத்திய, வடமேற்கு இந்தியப் பகுதிகள் கோடையின் கடுமையைச் சந்தித்து வருகின்றன. பெரும்பாலான வட மாநிலங்களில் வெப்ப அலை வீசிக் கொண்டிருக்கிறது.
இந்த நிலைமை வட மாநிலங்களில் மேலும் ஒரு வாரத்துக்கு நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களில் சிவப்பு எச்சரிக்கை அறிவிக்கப்பட்டிருக்கிறது என்றால், பஞ்சாப், ஹரியாணா, சண்டீகர், தில்லி உள்ளிட்ட வடமேற்குப் பகுதிகளில் ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது.
இந்தியாவில் பெரும்பான்மையான பகுதிகளின் வெப்ப அளவு 40 முதல் 43 டிகிரி செல்சியûஸ தொட்டிருக்கிறது. தலைநகர் தில்லியில் மட்டும் வெப்ப அலையின் தாக்கத்தால் 20-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டனர் என்றால், தெலங்கானா, ஆந்திர மாநிலங்களில் 40-க்கும் அதிகமானோர் வெப்ப அலை தொடர்பான பாதிப்பால் உயிரிழந்திருக்கிறார்கள்; ஒடிஸôவில் மூன்று பேர் அண்மையில் வெப்பத்துக்குப் பலியாகி இருக்கிறார்கள்.
இதுபோன்ற பாதிப்புக்கு முக்கியமான காரணம் "ஹீட் டோம்' எனப்படும் "வெப்ப குவிமாடம்'. நகர்ப்புறங்களில் கான்கிரீட், ஆஸ்பெஸ்டாஸ் உள்ளிட்டவை உள்ளிழுத்துக் கொள்ளும் பகல்நேர வெப்பத்தை வெளியேற்றுவதில்லை. அந்த வெப்பம் மேலே ஆவியாகாமல் தங்கி விடுகிறது. போதாக்குறைக்கு, ஏ.சி., குளிர்பதனப் பெட்டி (ஃபிரிட்ஜ்) உள்ளிட்டவை வெளியேற்றும் வெப்பமும் சேர்ந்து கொள்ளும்போது, பூமி மட்டத்திலுள்ள வெப்பக் காற்றின் அழுத்தம் அதிகரிக்கிறது. இதைத்தான் வெப்பக் குவிமாட பாதிப்பு என்கிறார்கள்.
வெப்ப அலையால் கிராமங்களைவிட நகரங்கள்தான் அதிகமான பாதிப்புக்கு உள்ளாகின்றன. நீர்நிலைகள் இல்லாமை, பூந்தோட்டங்கள், குளங்கள் இல்லாமை, அடுக்குமாடிக் கான்கிரீட் கட்டடங்கள், அவற்றுக்கு இடையே காற்று போகாமல் போதிய இடைவெளி இல்லாமல் இருப்பது உள்ளிட்டவை முக்கியமான காரணிகள்.
இந்தியா அதிவேகமாக நகர்மயமாகிக் கொண்டிருக்கிறது. ஏ.சி., ஃபிரிட்ஜ் இல்லாத வீடுகளும், குறைந்தபட்சம் இருசக்கர வாகனம் இல்லாத குடும்பமே இல்லை என்கிற நிலைமையும் ஏற்பட்டிருக்கிறது. 2011-இல் 37.7 கோடியாக இருந்த நகர்ப்புற மக்கள்தொகை 2031-இல் 60 கோடியை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 2030-இல் இந்தியாவின் ஜிடிபியில் ஏறத்தாழ 75% நகர்ப்புறங்களின் பங்காக இருக்கும் என்பது எதிர்பார்ப்பு. அதிகரிக்கும் மக்கள்தொகைக்கு ஏற்ப நகர்ப்புறத் திட்டங்களும் வளர்ச்சியும் அமையாவிட்டால், அதன் விளைவு அபாயகரமானதாக இருக்கும்.
சர்வதேசத் தொழிலாளர் நிறுவனத்தின் (ஐ.எல்.ஓ.) அறிவிப்பின்படி 2024-இல் இந்தியா, வெப்பம் தொடர்பான உற்பத்தி பாதிப்பால் 100 பில்லியன் டாலரை இழந்திருக்கிறது. இந்தியாவில் நான்கில் மூன்று தொழிலாளர்கள் வெப்பத்தால் நேரடி பாதிப்புக்கு உள்ளாகும் பணிகளில் ஈடுபடுவதாகவும், உலகில் வெப்ப பாதிப்பால் வேலை இழக்க நேரிடுபவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் இந்தியர்கள் என்றும் உலக வங்கி 2022-இல் எச்சரித்திருக்கிறது.
மத்திய, மாநில அரசுகள் ஒவ்வொரு முறை கோடை வெப்பம் தாக்கும்போதும், அதை எதிர்கொள்ள பல இடைக்கால நிவாரணங்களை முன்மொழிகின்றன. இந்தியாவின் அவசரத் தேவை வேலை நேரத்தை மாற்றி அமைத்தல், நிழல் தரும் ஓய்வுப் பகுதிகள், தாகம் தீர்க்கும் வசதிகள், பாதுகாப்பான உடைகள், தொடர் சுகாதாரக் கண்காணிப்பு உள்ளிட்டவை. அதேபோல நகர்ப்புறங்கள் முறையாகத் திட்டமிடப்படவும், சீரமைக்கப்படவும் வேண்டும்.
கோடையின் தாக்கம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கும் எனும்போது, நாமும் அதற்கேற்ப நடவடிக்கைகளை முன்னெடுக்காமல், இடைக்கால நிவாரணத்தில் திருப்தி அடைந்தால் எப்படி?