கருவூலம்: மொரிஷியஸ்
கடல்நீரில் விளையாடும் நீர் விளையாட்டுகள், ஆழமற்ற கடலினுள் நின்று பரந்த நீர்ப்பரப்பை ரசிப்பது - போன்றவற்றில்
கடல்நீரில் விளையாடும் நீர் விளையாட்டுகள், ஆழமற்ற கடலினுள் நின்று பரந்த நீர்ப்பரப்பை ரசிப்பது - போன்றவற்றில் ஆர்வம் உள்ளவர்கள் அவசியம் செல்லவேண்டிய அழகிய தீவு மொரிஷியஸ் குடியரசு நாடாகும்.
இருப்பிடம்
ஆப்பிரிக்கா கண்டத்தின் கிழக்கு கடற்கரைப் பகுதிக்கு அருகில் மடகாஸ்கர் என்னும் பெரிய தீவு உள்ளது. இத்தீவிற்கு கிழக்குப் பகுதியில் சுமார் 1000 கி.மீ.க்கு அப்பால் பல சிறு தீவுகள் உள்ளன. இத்தீவுக் கூட்டமானது "மசுகரின் தீவுகள்' (ஙஹள்ஸ்ரீஹழ்ங்ய்ங் ஐள்ப்ஹய்க்ள்) என்று அழைக்கப்படுகிறது.
உலக வரைபடத்தில் இந்திய பெருங்கடலின் மேற்கு பகுதியில் நன்கு உற்றுப் பார்த்தால் இத்தீவுக்கூட்டத்தில் உள்ள சற்றுப் பெரிய தீவுகளான ரீயூனியன், மொரிஷியஸ் இரண்டும் சிறு புள்ளிபோல் அமைந்திருக்கும்.
Advertisement
Advertisement
தோன்றிய விதம்
இத்தீவுக் கூட்டத்தில் உள்ள தீவுகள் அனைத்தும் சுமார் எட்டு மில்லியன் ஆண்டுகளுக்கு முன், ஆழ்கடல் பகுதியில் உள்ள கடலடி நிலத்தில் தொடர்ந்து ஏற்பட்ட பல எரிமலை வெடிப்புகளினால் தோன்றிய கடலடி மலைத் தொடரின் மேற்பகுதிகளேயாகும். இப்பொழுது இத்தீவுகள் கடல் மட்டத்திலிருந்து 300முதல் 800மீட்டர் வரை உயரம் உள்ளது.
மொரிஷியஸ் குடியரசு நாடு
இத்தீவுக்கூட்டத்தில் உள்ள மொரிஷியஸ், "ரொட்ரிகசு' மற்றும் "அகலேகா' தீவுகள் சேர்ந்தது "மொரிசியஸ்' என்னும் குடியரசு நாடாகும்.
மொரிஷியஸ் தீவு
65 கி.மீ. நீளமும், 45 கி.மீ. அகலமும், 2050 சதுர.கி.மீ பரப்பளவும் கொண்டது. (பரப்பளவில் சுமார் 10 ச.கி.மீ. ஆழமற்ற கடல் பகுதியாக கடல் நீருக்கு அடியில் உள்ளது. 2040 ச.கி.மீ. மட்டும் நிலப்பகுதியாக உள்ளது). சுற்றிலும் 150 கி.மீ. நீளமுள்ள அழகான வெண்மணல் பரப்பு கடற்கரை உள்ளது. மேலும், இத்தீவினைச் சுற்றிலும் கடலுக்குள் பவளப்பாறைகள் சூழ்ந்துள்ளது. உலகின் மூன்றாவது பெரிய பவளப்பாறை அமைப்பு இதுதான்.
ரொட்ரிகசு தீவு
இந்தத் தீவு மொரிஷியஸýக்கு வடகிழக்கு பகுதியில் 570 கி.மீ. தூரத்தில் உள்ளது. இதன் பரப்பளவு 110 ச.கி.மீ.
அகலேகா தீவுகள்
இந்நாட்டின் மூன்றாவது பெரிய தீவு அகலேகா எனப்படும் இரட்டைத் தீவுகள். இவை மொரிஷியஸýக்கு வடக்கே 1000 கி.மீ. தூரத்தில் உள்ளது. 2600 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட இத்தீவுகள் பெரிய மணல் மேடுகளாகவும், நீரில் மூழ்கியிருக்கும் ஆழமற்ற மணல் திட்டுகளாகவும் அமைந்துள்ளது.
இவற்றைத் தவிர மொரிஷியûஸ சுற்றிலும் யாரும் வசிக்காத 49 மிக குட்டி குட்டி தீவுகள் உள்ளன. இவையனைத்தும் இணைந்ததுதான் மொரிஷியஸ் குடியரசு நாடாகும்.
வரலாறு
இத்தீவுகளில் 16ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் யாரும் வசித்ததற்கான சான்றுகள் இல்லை. அடர்ந்த வனமாக இருந்துள்ளது. கி.பி. 1500க்குப் பின்னர் அரேபிய கடலோடிகள் (கடற்பயணிகள்) தான் இத்தீவுகளுக்கு வந்து சென்றுள்ளனர்.
மக்கள் குடியேற்றம் என்பது 1507 இல் போர்ச்சுகீசியர்கள் இத்தீவைக் கைப்பற்றியதில் தொடங்கியது.
தொடர்ந்து டச்சுப் படையினர் வசமும், பின் பிரான்ஸ் நாட்டுக் கட்டுப்பாட்டிலும் இருந்தது. பின்னர் 1810இல் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் வந்தது.
அவர்களிடம் இருந்து 1968இல் சுதந்திரம் பெற்று 1992இல் குடியரசு நாடானது. இப்பொழுது குடியரசுத் தலைவர், நல்ல நிர்வாக அமைப்புடன் உலகின் மிகவும் வளம் பெற்ற நாடுகளில் ஒன்றாக சிறப்புடன் திகழ்கிறது.
மக்கள் தொகை
இங்கு பூர்வகுடி மக்கள் என்று யாரும் கிடையாது. பலநாடுகளில் இருந்து குடியேறிய மக்களே உள்ளனர். இந்நாட்டில் 12,61,208 பேர் வசிப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. மொரிஷியஸ் தீவில் மட்டும் 12,19,265 பேர் உள்ளதாகக் கணக்கிட்டுள்ளனர். ரொட்ரிகஸ் தீவில் 41,669 பேர் உள்ளதாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு கூறுகிறது. அகலேகா தீவில் 274 பேர் வசிக்கின்றனர். இவை அனைக்கும் 2014ஆம் ஆண்டில் எடுத்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் தகவல்களாகும். உலகில் மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள பகுதிகளில் மொரிஷியஸ் தீவும் ஒன்று.
இந்திய வம்சாவளியினர்
இம் மக்கள்தொகையில் ஏறக்குறைய 70சதவீதம் மக்கள் இந்திய வம்சாவளியினரே. இவர்கள் பிரிட்டிஷார் ஆட்சி செய்தபோது இந்தியாவிலிருந்து தோட்டவேலை செய்வதற்காக அழைத்துச் செல்லப்பட்டவர்கள். இன்று முக்கிய பதவிகளில் இந்திய வம்சாவளியினரே உள்ளனர்.
தமிழர்கள்
ஏறக்குறைய 75ஆயிரம் தமிழர்கள் இப்பொழுது உள்ளனர். அதனால் இங்கு சுப்பிரமணி, பொன்னுசாமி போன்ற தமிழ்ப்பெயர்களையும், பேச்சுகளையும் கேட்க முடியும்.
சில பள்ளிகளில் தமிழ் மொழி பாடமாக சொல்லித் தரப்படுகிறது. மொரிஷியஸ் அரசின் "ஒலிபரப்புக் கூட்டு ஸ்தாபனம்' வழங்கும் வானொலி மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் சேனல்-16 என்ற தமிழ் சேவை ஒளிபரப்பும் உள்ளது. தமிழ் திரைப்படங்கள், திரைப்பாடல்கள் போன்றவற்றை பகுதிநேர ஒலிபரப்பாக பிற வானொலி நிலையங்கள் வழங்குகின்றன. இந்திய அரசின் "பொதிகை' டி.வி.யும் பிற அரசு தொலைக்காட்சிகளையும் கூட இங்கு கண்டு ரசிக்கலாம்.
இந்நாட்டுப் பணம் "ரூபாய்' என்றே அழைக்கப்படுகிறது. இதில் தமிழ் எழுத்துகளும் இலக்கங்களும் பொறிக்கப்பட்டுள்ளது.
மொழி
"மொரிஷியஸ் கிரியோல்' என்ற மொழியே இந்நாட்டு மொழியாகும். இம்மொழி பலமொழிக் கலப்புள்ளது. இதில் பல தமிழ்ச் சொற்களும் கலந்துள்ளன. பொது மொழியாக ஆங்கிலம் உள்ளது.
இந்து கோயில்கள்
பெரும்பாலானவர்கள் இந்திய வம்சாவளியினர் என்பதால் இங்கு 120 இந்து கோயில்கள் உள்ளன. இவற்றில் 70 முருகன் கோயில்களும் 40அம்மன் கோயில்களும் அடக்கம்.
தைப்பூசத் திருநாள் தேசிய விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ்ப் பண்பாட்டுக் கழகம், தமிழர் வாழ்வின் இயக்கம் போன்ற அமைப்புகளை ஏற்படுத்தி, இந்து சமயப் பண்பாட்டையும், மொழியையும், கலாசாரத்தையும் பேணுகிறார்கள்.
போர்ட் லூயிஸ்
இந்நாட்டின் தலைநகரம் "போர்ட் லூயிஸ்.' 1735இல் பிரான்ஸ் கட்டுப்பாட்டில் இருந்தபோதுதான் இந்த நகரம் உருவானது. அப்பொழுதே இங்கு கப்பல் படை தளமும், கப்பல் கட்டும் இடமும் உருவானது. பிரான்ஸ் மன்னர் "லூயிஸ்' பெயரே இந்த நகருக்கு சூட்டப்பட்டுள்ளது. அக்காலகட்டத்தில் கட்டப்பட்ட பல கட்டடங்கள், கோட்டை, அரண் போன்றவை இன்றும் உள்ளது. இப்பொழுதும் இந்நகர் முழுவதும் பிரெஞ்சு கலாசாரமும் மற்றும் அவர்களது வாழ்க்கைமுறையின் தாக்கமும் காணப்படுகிறது.
இந்நகரின் ஒருபுறம் கடற்கரையும், மறுபுறம் அரைவட்ட வடிவில், "லீ பவுஸ்', "பீட்டர் போத்' மலைத் தொடரும் இருக்கிறது. இயற்கையின் இந்த அமைப்பினால் நகரத்தை சுற்றி வருவது இனிமையான அனுபவமாக இருக்கும்.
ப்ளாக் ரிவர் ஜார்ஜ் தேசிய பூங்கா
பல்லாயிரம் ஹெக்டேர் பரப்பளவில் பரந்து விரிந்த மலைத்தொடரை தேசிய பூங்காவாக மொரிஷியஸ் அரசாங்கம் பராமரித்து வருகிறது. இங்குள்ள ஒரு குன்றில் அமைந்துள்ள சிவன் கோவிலில் ஆண்டுதோறும் சிவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. மேலும் இப்பகுதியில் உள்ள "கோல் சாமரேல்' அருவியும், ஏழு வண்ணங்களில் காணப்படும் பாறைகளும் அவசியம் காண வேண்டிய அற்புதங்கள்!
கடற்கரைகள்
இந்த அழகிய தீவைச் சுற்றியுள்ள கடலில் பல இடங்களில் ஒரு கி.மீ. தூரம் கடலுக்குள் நடந்து சென்றாலும் இடுப்பளவு தண்ணீரில்தான் நிற்போம். இங்கு நின்று நம்மைச் சுற்றிலும் பரந்து விரிந்து இருக்கும் அழகிய நீர்ப்பரப்பை பார்த்து ரசிக்கலாம்.
தரையில் இருக்கும் சிறு பொருட்களும் தெளிவாகத் தெரியும் அளவுக்கு மிகவும் தெளிவான நீரும், சுத்தமாகப் பராமரிக்கப்படும் அழகான வெண்மணல் கடற்கரையும் உள்ளது. சுற்றுலா பயணிகள் இங்கு ஏராளமாய் வருகின்றனர்.
பலவகையான கடல் நீர் விளையாட்டுகள், விசைப்படகுப் பயணம், விமானத்திலிருந்து பாராசூட் அணிந்து கடல்நீரில் குதிப்பது என உற்சாகம் கொள்ளவைக்கும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைய உள்ளது.
சர் சிவுசாகர் ராமகூலம் பொட்டானிகல் கார்டன்
"சர் சிவுசாகர் ராமகூலம்' என்பவர் இந்நாட்டின் சுதந்திரத்திற்காகப் பாடுபட்டவர். முதல் பிரதம மந்திரி. மொரிஷியஸின் தந்தை என்றும் அழைக்கப் படுகிறார். அவர் நினைவாக அமைக்கப்பட்டுள்ள தாவரவியல் பூங்கா இது. சுற்றுலாவிற்கு ஏற்ற இடம். ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான மாதங்கள் இந்நாட்டிற்கு சுற்றுலா செல்ல உகந்த காலம். சுற்றுலா நாட்டின் முக்கிய வருவாய் என்பதால் பல சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அன்பான உபசரிப்பு, நல்ல பாதுகாப்பு என உல்லாச பயணிகளை கவர்கிறார்கள்.
மொரிஷியஸ் நாட்டில் தங்கத்திற்கு வரி விதிக்கப்படுவதில்லை என்பதால் தங்கத்தின் விலை குறைவு. மேலும் கம்பளி ஆடைகள், கைக்கடிகாரங்களும் வாங்க சிறந்த இடம்.
மேலும் சில தகவல்கள்
1980 மற்றும் 1990 களில் நல்ல வளர்ச்சியடைந்து உலகின் செழிப்பான நாடுகளில் ஒன்றாக வளர்ந்துள்ளது.
கண்ணுக்கெட்டிய தூரம் வரை பசுமையான கரும்பு தோட்டங்கள் நிறைய உள்ளது. சர்க்கரை உற்பத்தியில் உலகில் முக்கிய இடம் பெற்றுள்ளது.
காந்தியடிகள் 1901ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தென் ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு திரும்பி வரும்பொழுது இந்தத் தீவில் இரண்டு வார காலம் தங்கியிருந்துள்ளார்.
சமீபத்தில் நம் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இந்நாட்டிற்கு சென்றபோது போர்க்கப்பல் ஒன்றை அளித்துள்ளார்.
இங்குள்ள மொரிஷியஸ் பல்கலைக் கழகத்தில் தமிழில் இளங்கலைப் பட்டப் படிப்பு உள்ளது. இதுதான் இந்நாட்டின் பழமையான பல்கலைக் கழகம். 1965இல் ராணி இரண்டாம் எலிசபெத் உருவாக்கினார்.
இந்நாட்டு மக்கள் "இறைவன் இத்தீவை படைத்துவிட்டு இதன் சாயலில் சொர்க்கத்தைப் படைத்தான்' என்று பெருமையுடன் கூறுவார்கள். உண்மையிலேயே பூமியில் சொர்க்கமாகக் கருதப்படும் பல இடங்களில் இதுவும் ஒன்றுதான். தமிழர்களாகவும், இந்தியர்களாகவும் இருக்கும் நமக்கும் இத்தீவு பெருமைக்குரியதுதான்.
தொகுப்பு: கே. பார்வதி, திருநெல்வேலி டவுன்.