முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

தமிழ்த் தாயை வரைந்த ஓவியர்!

உலகமெங்கும் வாழும் தமிழர்களின் மனதில் அமர்ந்த நிலையில் அமைந்த திருவள்ளுவர் திருவுருவத்தால்

Updated On : 24 நவம்பர் 2013, 8:41 am IST
பகிர்:

உலகமெங்கும் வாழும் தமிழர்களின் மனதில் அமர்ந்த நிலையில் அமைந்த திருவள்ளுவர் திருவுருவத்தால் பெரும்புகழ் கொண்ட ஓவியர் கே.ஆர்.வேணுகோபால் சர்மா பன்மொழிப் புலமை பெற்றவர். மகாத்மா காந்தியிடம் நேரடி ஆசி பெற்றவர். ஓவியம், சிற்பம், நாட்டியம், தமிழ் என நான்கிலும் ஆழ்ந்த ஆய்வுகளை மேற்கொண்டவர். இதற்கு நேரடி சாட்சிகளாக இன்றும் பல புகழ்பெற்ற வல்லுனர்கள் இருக்கின்றனர்.
மத்திய, மாநில அரசாங்கங்கள் திருவள்ளுவர் ஓவியத்தை அங்கீகரிக்க.....1964 இல் தமிழக சட்டசபையில், ஜனாதிபதி ஜாகீர் உசேனால் திறந்து வைக்கப்பட்டு,கெüரவிக்கப்பட்டார். பிறகு... அண்ணாவின் பெருமுயற்சியால் தமிழக அரசாங்கத்தின் ஓர் அடையாளமாகவே திருவள்ளுவர் திருவுருவம் மாறியது. அதனைத் தொடர்ந்து ஓவியம், சிற்பம், நாட்டியம், தமிழ் மரபு உள்ளிட்ட நீண்ட ஆராய்ச்சிகளுக்கு பிறகு 1982 இல் தமிழ்த்தாய்
திருவுருவத்தையும் கண்டடைந்தார்.
தமிழ்த்தாய் திருவுருவ விளக்கமாக பத்தொன்பது குறிப்புகளையும் சர்மா எழுதி வைத்துள்ளார். அவற்றில் சில குறிப்புகள் இங்கே:

 "இந்தப் பாருள் எந்நாளுமோர் கன்னிகை என்னப் பயின்றிடுவாள் எங்கள் தாய்' என்கிறார் பாரதியார். தமிழ்த்தாய் வாழ்த்தினை நமக்கு யாத்துத் தந்த மனோன்மணியம் பெ. சுந்தரனார் தமிழ்த் தாயின் சீரிளமைத் திறத்தினை வியந்து வணங்குகிறார். ஆகவே தமிழ்த் தாய்க்கு கன்னிகை தோற்றம் அமையப் பெற்றதாம்.
 தாய், ஆதியில் தோன்றியவள் என்பதை குறிக்க - உச்சிச் சிகையலங்காரத்தில் சூரியனும் -சந்திரனும் அமையப் பெற்றதாம்.
 "உடுத்தும் தொடுத்தும் பூண்டு செறீஇயும் தழையணி பொலிந்த ஆயம்' என்பது குறுந்தொகையில் கூறப்படும் மலர்ச் சூடுதல் பற்றிய செய்தியாகும். ஆகவே தாயின் சிகையலங்காரத்தில் இருபுறமும் மலர் சூட்டப்பட்டதாம்.
 "பிறை நுதல்' என்பது செல்வச் செழிப்பைக் குறிக்கும் என்கிறது சில்ப ரத்தினம். ஆகவே தாய்க்கு அவ்வாறே அமைக்கப் பெற்றதாம்.
 தமிழ்த்தாய்க்கு அமைந்த தாடைக் குழி அவளது செüந்தர்யத்தைப் பறைசாற்றுவதாம்.
 உயர்வகைப் பெண்களுக்கே உரிய சங்குக் கழுத்து தாய்க்கு அமையப்பெற்றதாம்.
 தமிழ்த் தாயின் இரு கரத்திலும் தோளாபரணமும் , முழங்கையின் மேற்புறத்தில் கேயூரம் எனப்படும் எட்டுக்கால் தாமரைப்பூ ஆபரணமும், கை வளைகள் சிற்ப சாஸ்திரத்தின் படி இரட்டையாக அடுக்கப்பட்டதாம்.
 என்றும் தமிழ் ஆட்சி செலுத்தும் என்பதை குறிக்கவும், நல்லறம் நாடிய மன்னரை வாழ்த்தி நயம்புரிவதும்,அல்லவராயின் அவரை விழுங்கிப்பின் ஆனந்தக் கூத்திடுவதும் தாயின் இயல்பு என்பதால் வலது திருக்கரத்தில் செங்கோல் அமையப் பெற்றுள்ளது.
 மற்றொரு கை தாயின் பெருமைக்குரிய பெண்மையை குறிக்கும் வகையில் டோலம் என்பதாக அமையப்பெற்று கொழுத்த மீன்களைப் போல ஆரோக்கியமான செல்வ வளத்தைக் குறிக்கும் படியாக விரல்களும் அமையப் பெற்றுள்ளன.
 சில்ப ரத்தினம் அத்தி: 16 26 ன் படி, தாய்க்கு, நடுவிரல் தவிர மற்றவிரல்கள் யாவிலும் மோதிரங்கள் அணிவிக்கப்பட்டுள்ளது.,
 தமிழர்தம் நாகரீகத்தை பின்பற்றி பிறப்பை குறிக்கும் தொப்பூழ் ஆங்கனம், தாய்க்கு மறைக்கப்பட்டதாம்.
 தமிழர் பாணியில் தாய்க்கு சேலை அணிவிக்கப்பட்டுள்ளது.
 கனைக்காலுக்குக் கீழே ஜாலகம் என்னும் பட்டை சாரம் மற்றும் கால்களில் தண்டையும், சிலம்பும் அமையப்பெற்றுள்ளது.
 முதல் நிலைப் பீடமான பத்ம பீடம் தாய்க்கு மேடையாக அமையப்பெற்றுள்ளது



 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments