இந்தியாவிலிருந்து நமது பாரம்பரியச் சின்னங்கள் மற்றும் விலைமதிப்புள்ள சாமி சிலைகள் கடத்தப்பட்ட வழக்குகளில் துப்புத் துலக்குவதில் உதவியாக செயல்பட்டு வருபவர் சென்னையைச் சேர்ந்த விஜயகுமார். சிலைகள் உள்ளிட்ட நமது நாட்டின் புராதனச் சின்னங்களை உலகெங்கும் உள்ள வெளிநாட்டு அருங்காட்சியகங்களில் இருந்து மீட்டு வருவதற்கும் இவரது "தி இந்தியா ப்ரைடு புராஜெக்ட்' அமைப்பினர் உதவிபுரிந்து வருகிறார்கள். இவர்கள் தந்த தகவல்களின் அடிப்படையில் தமிழகத்துக்குச் சொந்தமான சாமி சிலைகள் வெளிநாடுகளில் இருந்து மீட்கப்பட்டன. எப்படி இது போன்ற விஷயங்கள் சாத்தியமானது அவரிடம் நேரில் சந்தித்து கேட்டோம்:
சென்னை தான் என்னுடைய பூர்வீகம். 2006-ஆம் ஆண்டு சிங்கப்பூரில் உள்ள ஷிப்பிங் நிறுவனத்தில் வேலைக்கு சென்றேன். சிறுவயதில் கல்கி எழுதிய "பொன்னியின் செல்வன்' நாவலைப் படித்த பிறகு சோழர்கள் பற்றியும் சிற்பக்கலை பற்றியும் தெரிந்து கொள்வதில் அதிக ஆர்வம் உண்டானது. பல கோயில்களுக்கு சென்று அங்கிருக்கும் சிற்பங்கள் பற்றி தெரிந்து கொண்டேன். நான் தெரிந்து கொண்ட விஷயங்களை, பிளாக் ஒன்றை தொடங்கி எழுத ஆரம்பித்தேன். எனது கட்டுரைகளை படித்த பல பேர் என்னுடைய நண்பர்கள் ஆனார்கள். என்னுடன் பயணிக்க விரும்பினார்கன். தொடர்ந்து இந்தோனேசியா, மலேசியா, வியட்நாம், தாய்லாந்து, கம்போடியா போன்ற இடங்கள் மற்றும் இந்தியா முழுவதும் எங்கள் குழுவுடன் பயணித்தோம். நாங்கள் ஒரு கோயிலுக்கு செல்லும் முன் அந்த கோயிலில் உள்ள சிலைகளின் பாரம்பரியம் பற்றி முழுமையாக தெரிந்து கொண்டு தான் செல்வோம்.
ஆனால் நாங்கள் அங்கே சென்று பார்த்த போது பல சிலைகள் காணாமல் போயிருந்தன. இது தொடர்பாக கோயில் நிர்வாகிகளிடம் கேட்டால், குடோனில் உள்ளது. ஷெட்டில் வைத்துள்ளோம் என்று சொல்லி சமாளித்து விடுவார்கள். ஆனால் இந்த சிலை விவகாரத்தில் தவறு நடக்கிறது என்பது மட்டும் தெளிவாகத் தெரிந்தது.
ஒரு பக்கம் நாங்கள் தேடிய சிலைகள் யாவும் உலகம் முழுவதும் உள்ள பல இடங்களில் பகிரங்கமாகவே ஏலத்திற்கு வந்தன. 1950-ஆம் ஆண்டிலிருந்து இந்தியாவிலிருந்து உலகம் முழுவதும் சிலைகள் கடத்தப்பட்டுள்ளன என்பது தெரிய வருகிறது. இன்று வரை அது தொடர்கிறது. உண்மையான சிலைகளை கடத்திவிட்டு இங்கே போலியான சிலைகளைத் தயாரித்து வைத்துவிடுகிறார்கள். பல கோயில்களில் இது நடக்கின்றன.
இதனால் 1970-ஆம் ஆண்டில் சிலை கடத்தலை தடுப்பதற்காக யுனைடெட் நேஷன் கன்வென்ஷன் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பின் மூலம் 1970 முதல் 2012-ஆம் ஆண்டு வரை 19 சிலைகள் மீட்கப்பட்டன. 42 ஆண்டுகளில் வெறும் 19 சிலைகளை மட்டுமே கண்டறிந்து மீட்க முடிந்தது. இதற்கு காரணம் என்னவென்று நாங்கள் ஆராய்ந்த போது தான் பல விஷயங்கள் தெரிய வந்தது. சிலைக் கடத்தலைத் தடுக்க சட்டங்கள் வலுவாக இல்லை. இதில் ஈடுபடுபவர்களை கைது செய்தாலும் சட்டத்தின் பிடியிலிருந்து எளிதில் தப்பி விடுகிறார்கள். அவர்களை தண்டிக்க போதுமான ஆதாரங்கள் கிடைப்பதில்லை. சிலை கடத்தியவர்களை பிடித்தாலும் அவர்கள் இதற்கு முன் என்ன குற்றம் செய்தார்கள் அவர்கள் பின்னணி என்ன என்பதை பற்றி ஆராய்வதில்லை. காரணம் அவர்கள் கோடிகளில் புரள்பவர்களாக இருக்கிறார்கள்.
லண்டனில் 1985-ஆம் ஆண்டு 240 சிலைகளை கண்டுபிடித்தார்கள். ஆனால் அவற்றை மீட்க எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. 1980-ஆம் ஆண்டு ஆயிரம் பேர் கொண்ட சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஆரம்பிக்கப்பட்டது.
தமிழ்நாட்டை பொருத்தவரை சிலைக் கடத்தல் வழக்கு விசாரணையின்போது தமிழக இந்து அறநிலையத் துறை தாக்கல் செய்த பதில் மனுவில் 1992 முதல் 2012 வரை தமிழகக் கோயில்களில் இருந்து சுமார் 1,300 சிலைகள் காணாமல் போயிருப்பதாகச் சொல்லி இருக்கிறார்கள். இதில் 830 சிலைகள் கற்சிலைகள்; மற்றவை ஐம்பொன் சிலைகள். இது 20 வருடத்துக்கான பட்டியல்தான். அதற்கு முந்தைய காலத்தில் காணாமல் போன கோயில் சிலைகள் குறித்த தரவுகள் எதுவும் இந்து அறநிலையத் துறையிடம் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால், அனைத்துக் காவல் நிலையங்களிலும் பதிவான சிலைத் திருட்டு வழக்கு விவகாரங்களை மறு ஆய்வுக்கு உட்படுத்தினால் ஓரளவுக்குத் தகவல் திரட்ட முடியும்.
சிலைக் கடத்தல் வழக்குகளில் கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் படிப்படியாக ஜாமீனில் வெளியில் வந்துவிட்டார்கள். ஜெர்மனியில் கைது செய்யப்பட்டு அழைத்து வரப்பட்ட சிலைக் கடத்தல் மன்னன் சுபாஷ் சந்திர கபூர் மட்டும்தான் இன்னும் சிறையில் இருக்கிறார். இருப்பினும் கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை வைக்கப்பட்டுள்ள அவரிடமிருந்து பெரிய அளவில் எதையும் நம்மால் கைப்பற்ற முடியவில்லை.
இந்த விஷயத்தில் என்ன செய்யலாம் என்று நினைத்த போது, "தி இந்தியா ப்ரைடு புராஜெக்ட்' சார்பாக பேஸ்புக், யூடியூப் என சமூக வலை தளங்களில் தனிப் பக்கத்தை ஆரம்பித்தோம். இந்தியாவிலிருந்து உலக நாடுகள் முழுவதும் பணியாற்றுபவர்கள் எங்களது பணிகளை பார்த்துவிட்டு நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டார்கள். நீங்கள் உலகில் எந்த அருங்காட்சியகத்துக்குச் சென்றாலும், அங்குள்ள சிற்பங்களின் புகைப்படங்களை எங்களுக்கு எடுத்து அனுப்புங்கள். மேலும் ஏலத்திற்கு வரும் சிலைகள் அவற்றை ஏலம் விடும் நிறுவனங்கள் கேட்லாக்கில் உள்ள விவரங்களையும் அனுப்பும்படி கேட்டோம். பல ஆண்டுகளுக்கு முன் ஏலத்திற்கு வந்த சிலைகள் பற்றிய விவரமும் தெரிய வந்தது.
எங்களிடம் இருக்கும் தகவல்களை பற்றி தெரிந்து கொண்ட உலகிலுள்ள சிலை கடத்தல் தடுப்பு அமைப்புகள் எங்களை தொடர்பு கொண்டன. அவர்களுக்கு தேவையான ஆவணங்களையும், தகவல்களையும் வழங்கினோம். இதனால் 2012 முதல் இப்போது வரை 313 சிலைகள் மீட்கப்பட்டன. இதில் 90 சதவிகிதம் சிலைகள் நாங்கள் கொடுத்த தகவலால் கண்டறியப்பட்டவை .
இந்த சிலை பற்றி 15 ஆண்டுகள் ஆராய்ச்சி செய்த விஷயங்களையே "சிலை திருடன்' என்ற பெயரில் புத்தமாக ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ளேன். தமிழ், ஹிந்தி போன்ற மொழிகளிலும் மொழி பெயர்ப்பு செய்து வெளியிட்டு இருக்கிறோம்.
எங்களுடைய நோக்கம் சிலைகளை கண்டுபிடிப்பது அல்ல. காணாமல் போன சிலைகள், அவற்றின் விவரங்கள் ,அடங்கியது மட்டுமல்ல. அவை எங்கிருந்து எடுக்கப்பட்டன என்ற விவரத்தையும் கொடுத்துள்ளோம். எத்தனை ஆண்டுகள் ஆகியுள்ளது என்ற அனைத்து உண்மையான விவரங்களையும் வெளிப்படுத்தியுள்ளோம். இதன் விவரங்களை இந்திய ஹை கமிஷனிடம் தெரிவிப்போம். நாம் வழங்கிய ஆவணங்கனை வைத்து அவர்கள் யுனைடெட் நேஷன் கன்வென்ஷன் அமைப்பிற்கு தெரிவிப்பார்கள். அவர்கள் சம்பந்தப்பட்ட நாட்டிலுள்ள தூதரகத்திற்கு தெரிவித்து 30 நாட்களுக்குள் அங்குள்ள காவல்துறையினர் மூலம் விசாரித்து சிலையை மீட்பதற்கான நடவடிக்கை எடுப்பார்கள். இதற்காக நாங்கள் யாரிடமும் எந்த உதவியும் பெறுவதில்லை. விளம்பரம் பெற வேண்டும் என்ற நோக்கமும் கிடையாது. நல்ல நோக்கத்தில் எங்களுடைய குழு இதனை 15 ஆண்டுகளாக செய்து வருகிறது. சிலை கடத்தலைத் தடுப்பவர்களுக்கு எதிராக வழக்கும் போடுப் போது அந்த வழக்குகள் ஜெயிக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். அதற்கு நாங்கள் திரட்டிய ஆவணங்கள் பெரிதும் உதவியாக இருக்கும்.
இது அரசாங்கம் செய்ய வேண்டிய பணி. அவர்கள் செய்யவில்லை என்பதால் நாங்கள் இதனை கையில் எடுத்து கொண்டு அவர்களுக்கு உதவி வருகிறோம். சிலை கடத்தல் மூலம் கோடிகளில் சம்பாதிக்கும் நபர்கள் சட்டத்தின் படி கிடுக்கிப்பிடி போட்டு தடுக்கும் பணிகளை இது வரை மேற்கொள்ளப்படவில்லை. இனியாவது நேஷனல் லெவல் ஆர்ட்ஸ் ஸ்குவாட் அமைக்க வேண்டும். அவ்வாறு அமைக்கப்பட்டால் அவர்களிடம் நாங்கள் திரட்டிய தகவல்களை கொடுத்துவிடுவோம்'' என்றார் விஜயகுமார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.