முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

என்ன விலை அழகே...!

சென்னை ஆழ்வார்ப்பேட்டை சி.பி. கலை மையத்தில் அண்மையில் நடைபெற்ற இரு நாள் ஓவியக் கண்காட்சியில்,   60 ஓவியர்கள் வரைந்த சுமார் 120 ஓவியங்கள் இடம்பெற்றிருந்தன.

Updated On : 8 அக்டோபர் 2023, 12:00 am IST
பகிர்:


சென்னை ஆழ்வார்ப்பேட்டை சி.பி. கலை மையத்தில் அண்மையில் நடைபெற்ற இரு நாள் ஓவியக் கண்காட்சியில், 60 ஓவியர்கள் வரைந்த சுமார் 120 ஓவியங்கள் இடம்பெற்றிருந்தன. இருபத்து ஐந்து ஆண்டுகளாகத் தன்னிடம் ஓவியம் பயின்றவர்களின் ஓவியங்களைத் திரட்டி, கண்காட்சியை நடத்திய பிரியா நடராஜனுடன் ஓர் சந்திப்பு:

உங்களைப் பற்றி...?

எனது குடும்பம் ஓவிய, கலைப் பின்னணி கொண்டது அல்ல; இருப்பினும், எனக்கு சிறுவயது முதலே படம் வரைவதில் ஆர்வம் உண்டு. பள்ளி நாள்களில் ஓவிய ஆசிரியர் நான் வரையும் ஓவியங்களைத் திருத்தம் செய்துகொடுப்பார். அவர்தான் என் முதல் குரு. பள்ளிப்படிப்பை முடித்தபோது, ஓவியக் கல்லூரியில் சேரும் அளவுக்கு எனக்கு ஓவியத் திறமை இல்லை என்று நினைத்ததால் சேரவில்லை. கல்லூரிப் படிப்பு, திருமணம், குழந்தை என்று வழக்கமான பாதையில்தான் பயணித்தேன்.

Advertisement

Advertisement

ஓவிய ஆர்வம் அதீத ஆர்வம் ஏன்?

"மறுபடியும் படம் வரையலாமே?' என்ற எண்ணம் வந்தது. குடும்பத்தினர் பாராட்டிய உற்சாகத்தில் நிறைய வரையத் துவங்கினேன். கூடவே, லோககுரு என்ற ஓவியரிடம் வாட்டர் கலர், ஆயில் பெயின்டிங் நுட்பங்களைக் கற்றேன். ஆனாலும், சில்பியின் கோட்டுச் சித்திரங்களால் பெரிதும் கவரப்பட்டு, கறுப்பு வெள்ளை கோட்டுச்சித்திரங்கள் மீதே என் கவனம் சென்றது.

நான் வரைந்த தஞ்சை பெரிய கோயில் ஓவியத்துக்கு பாராட்டுகள் குவிந்தன. சென்னை அண்ணா சாலையில் உள்ள வி.ஐ.டி. கலைக்கூடத்தில், அந்த ஓவியத்தை வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவர் இரண்டாயிரம் ரூபாய்க்கு வாங்கினார்.

மற்றவர்களுக்கு ஓவியம் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தது எப்படி?

1998இல் ஓய்வு நேரத்தில், ஆர்வம் உள்ளோருக்கு ஓவியம் வரைய கற்றுக் கொடுக்கத் தொடங்கினேன். கரோனா காலத்தில் இணைய வழியில் கற்பித்தேன்.

ஓவியக் கண்காட்சி நடத்தும் எண்ணம் எப்படி வந்தது?

வழக்கமாக ஒருவர் ஓவியம் வரைந்தால், அவரது குடும்பத்தினர், நண்பர்கள், உடனிருப்போர் பாராட்டுவார்கள். பல்வேறு தரப்பினரும் பாராட்டினால்தானே திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். அதை மனதில் கொண்டுதான் என்னிடம் ஓவியம் பயிலும் மாணவர்கள் வரைந்த சிறந்த ஓவியங்களைத் திரட்டி, கண்காட்சியை நடத்தினேன்.

இது நான் நடத்தும் ஆறாவது கண்காட்சி. இந்த ஆண்டு என்னுடைய ஓவியப் பள்ளியின் இருபத்து ஐந்தாவது ஆண்டு என்பதால், கண்காட்சியை நடத்துவதில் கூடுதல் உற்சாகம்.

இந்தக் கண்காட்சியின் சிறப்பு என்ன?

இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை கண்காட்சியை நடத்துவேன். அந்தந்த காலகட்டத்தில் பயிலும் மாணவர்களின் ஓவியங்கள் மட்டுமே இடம்பெறும்.

கடந்த 25 ஆண்டுகளில் என்னிடம் ஓவியம் பயின்ற சிறந்த மாணவர்கள் சுமார் 60 பேரிடமிருந்து அதீத கற்பனையில் ஓவியங்களை வரையச் செய்து, "ஃபன்டாசியா' என்ற இந்தக் கண்காட்சியில் இடம்பெறச்செய்தேன்.

நாலரை வயது சிறுமி முதல் எழுபத்து இரண்டு வயது மூதாட்டி வரையில் ஓவியங்களை வரைந்தனர்.

அமெரிக்கா, துபை, அபுதாபி, நார்வே உள்ளிட்ட நாடுகளில் வசிக்கும் எனது மாணவர்களும் ஓவியங்களை வரைந்து அனுப்பி வைத்ததை பெரிய கெளரவமாகவே நினைக்கிறேன்.

பார்வையாளர்களிடம் எத்தகைய வரவேற்பு இருந்தது?

ஓவியர்களின் குடும்பத்தினர், நண்பர்கள், பொதுமக்கள் கண்காட்சிக்கு வந்தது எனக்கு பெரும் நிறைவைஅளித்தது. பலர் ஓவியங்களை விலை கொடுத்து வாங்க முயன்று விசாரித்தனர்.

"ஓவியப் பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கவும், அவர்களின் திறமையை வெளியுலகத்துக்கு அறிமுகப்படுத்தவும்தான் கண்காட்சியை நடத்துகிறேன். ஒருவரது ஓவியத்தை வாங்கிச் செல்லும்போது, அது அவருக்கு மகிழ்ச்சியை அளிக்கும். ஆனால், மற்றவர்களுக்கு ஒருவித தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்திவிடக் கூடும். கண்காட்சி முடிந்தபிறகு, நீங்கள் விரும்பும் ஓவியத்தை வரைந்த ஓவியரின் விவரங்களை அளிக்கிறேன்.

அவரிடம் பேசி வாங்கிக் கொள்ளுங்கள்' என்று கூறிவிட்டேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments