முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

பறவை நேசன்

பறவைகளின் இனம் கண்டறியும் காவலரின் அசாத்திய திறன்

Updated On : 18 பிப்ரவரி 2024, 12:00 am IST
பகிர்:

பறவைகளின் ஒசைகளைக் கொண்டு அவைகளின் இனம், பாலினத்தை கண்டறியும் திறன் கொண்டவராகத் திகழ்கிறார் வால்பாறை மானாம்பள்ளி வனச் சரகத்தின் வேட்டைத்தடுப்பு காவலர் அரவிந்த்.

மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள புகழ் பெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்றான வால்பாறையில் ஏராளமான பறவையினங்கள் உள்ளன. உள்ளூரைத் தாயகமாகக் கொண்ட பறவைகளுடன் வெளிநாட்டுப் பறவைகளும் உள்ளன.

ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் துவங்கி, நான்கு மாதங்களுக்கு பறவைகளின் வரவு அதிகரித்து காணப்படும். இதேபோல், வால்பாறையில் சில எஸ்டேட் பகுதிகளில் அரிய வகை இருவாச்சி பறவைகள் அதிக அளவில் உள்ளன. அவற்றைக் காண நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பறவையிலாளர்கள், பல மணி நேரம் தவம்கிடந்து அவற்றைப் பார்த்தும், புகைப்படங்களில் பதிவு செய்து கொள்வதும் வழக்கமாக உள்ளது.

Advertisement

Advertisement

வால்பாறை சுற்றுப் பகுதிகளில் காணப்படும் பறவைகளை அவற்றின் ஓசையைக் கொண்டே அவற்றின் பாலினத்தை சரியாகச் சொல்லும் திறன் படைத்தவராக இருக்கிறார் மானாம்பள்ளி வனச்சரகத்தில் வேட்டைத்தடுப்புக் காவலராகப் பணியாற்றும் முப்பது வயதான அரவிந்த்.

அவரிடம் பேசியபோது:

""நான் வால்பாறை பகுதியில் உள்ள குரங்குமுடி எஸ்டேட்டில் பிறந்து வளர்ந்தேன். தனது தந்தை ஆறுமுகம் எனக்கு இரண்டு வயதாக இருக்கும்போதே இறந்துவிட்டார். தாய் மார்த்தாண்டமேரி தோட்டத் தொழிலாளியாகப் பணியாற்றி என்னை பத்தாம் வகுப்பு வரை படிக்க வைத்தார்.

படிப்புக்கு பிறகு சத்தியமங்கம் சென்று ஒரு பேப்பர் மில்லில் தாயுடன் சேர்ந்து பணியாற்றி வந்தேன். வனங்களைச் சார்ந்த பகுதியில் வசித்து வந்ததால் எனக்கு வனவிலங்குகள், பறவைகள் மீது அளவு கடந்த ஆர்வம் உள்ளது.

வனத் துறையில் பணியாற்ற வாய்ப்பு கிடைக்கும் என்ற ஏக்கத்தில் சத்தியமங்கலம் வனச்சரகத்தில், அப்போது பணியாற்றிய வனச் சரக அலுவலரிடம் வேலை கேட்டேன். அப்போது அவர் வால்பாறை பகுதியில் உள்ள வனச்சரகங்களில் பணியாற்ற ஆள்கள் எடுப்பதாகவும் அங்கு செல்ல அறிவுறுத்தினார். அதன்படி தாயுடன் மீண்டும் வால்பாறைக்கு எனது 18 -ஆவது வயதில் வந்தேன். அப்போது மானாம்பள்ளி வனச்சரகத்தில் வேட்டைத்தடுப்பு காவலராகப் பணியாற்ற ஆள்களைத் தேர்வு செய்தனர்.மொத்தம் 27 பேர் பங்கேற்று 3 பேர் பணியாற்ற தேர்வானவர்களில் நானும் ஒருவன்.

எனக்கு பறவைகள் மீது தனி ஆர்வம் இருந்ததால் அவற்றின் ஓசையைக் கேட்டு ரசிக்கத் தொடங்கினேன். எந்த வனப் பகுதிக்குச் சென்றாலும் பறவைகளைக் கண்டால் நின்று அதன் ஓசை, நடமாட்டம் மற்றும் அதன் இயல்புகளைக் கண்டு ரசித்து வருவேன். தற்போது எனக்கு நூற்றுக்கும் மேற்பட்ட பறவைகளின் ஓசையைக் கேட்டு அதன் இனம், பாலினத்தைச் சொல்லும் திறன் கிடைத்துள்ளது.

குறிப்பாக பருந்துகள், ஆந்தைகள், லங்கன் தவளைப் பறவை, இந்தியன் ஸ்கோப்ஸ், டாலர் பறவை, மரங்கொத்தி, இருவாச்சி உள்ளிட்ட பல்வேறு பறவைகளைப் பார்த்து அதன் ஒசைகளையும் மனதில் வைத்துள்ளேன்'' என்றார்.

இதுகுறித்து வால்பாறை வனச்சரக அலுவலர் மணிகண்டன் கூறும்போது, ""அரவிந்தின் திறமை அசாத்தியமானது. கடுமையாகப் பணியாற்றக் கூடிய அவர், பறவைகள் மீதான தனது ஆர்வத்தின் காரணமாக ஓசையைக் கொண்டே அதன் இனம், பாலினம் போன்றவற்றைச் சொல்லக் கூடிய பறவையிலாளராகத் திகழ்கிறார்' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.