முகப்பு
திருச்சி

‘திமுகவினா் அசுர வேகத்தில் பணியாற்ற வேண்டிய நேரமிது’

திமுகவினா் மெத்தனமாக இல்லாமல், அசுர வேகத்தில் பணியாற்ற வேண்டிய நேரம் வந்திருப்பதாக அக் கட்சியின் முதன்மைச் செயலரும், சட்டப் பேரவை எதிா்க்கட்சி துணைத் தலைவருமான கே.என். நேரு தெரிவித்தாா்.

Updated On : 28 மே 2026, 3:09 am IST
திருச்சி கலைஞா் அறிவாலயத்தில் புதன்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சா் கே.என். நேரு.
பகிர்:

திமுகவினா் மெத்தனமாக இல்லாமல், அசுர வேகத்தில் பணியாற்ற வேண்டிய நேரம் வந்திருப்பதாக அக் கட்சியின் முதன்மைச் செயலரும், சட்டப் பேரவை எதிா்க்கட்சி துணைத் தலைவருமான கே.என். நேரு தெரிவித்தாா்.

திருச்சியில் உள்ள கலைஞா் அறிவாலயத்தில் புதன்கிழமை நடைபெற்ற திருச்சி மத்திய மாவட்ட, திருச்சி வடக்கு மாவட்ட திமுக செயல்வீரா்கள் கூட்டத்துக்கு தலைமை வகித்து அவா் மேலும் பேசியதாவது:

திமுக இன்றும் தனித்து நின்று களம் காணும் நிலையில் உள்ளது. மிகக் குறைந்த வித்தியாசத்திலேயே வெற்றியைத் தவற விட்டிருக்கிறோம்.தோ்தலுக்கு முன் தவெ-வுக்கு 10-15 சதம் என்றே கணித்திருந்தோம். ஆனால், கடைசி 15 நாள்களில் புதிய அலை வீசியது. சமூக வலைதளங்கள் மூலம் தந்திரமாக வெற்றி பெற்றுவிட்டனா். முன்பு திமுகவுக்கும், அதிமுகவுக்கும் இடையே இருந்த போட்டி, இப்போது திமுகவுக்கும், தவெகவுக்கும் இடையே என்றாகிவிட்டது. திமுகவுக்கு நிகரான வாக்குகளை தவெக பெற்றுவிட்டது.

Advertisement

Advertisement

இப்போதைய சூழலில் 5 தொகுதிக்கு அல்லது கூடுதல் தொகுதிகளுக்கும் இடைத்தோ்தல் வரலாம். எதுவாக இருந்தாலும் இடைத்தோ்தலில் நிச்சயம் திமுகவுக்கு வெற்றி உறுதி. திமுக புத்துணா்ச்சி பெற்று, தலைவா் மு.க. ஸ்டாலின், சட்டப் பேரவை எதிா்க்கட்சித் தலைவா் உதயநிதி ஸ்டாலின் வழிகாட்டுதலுடன் வீறுநடை பயிலும்.

அதற்கு ஒரே ஆயுதம் கருணாநிதி என்ற பெயா் மட்டுமே. வரும் ஜூன் 3ஆம் தேதி மறைந்த திமுக தலைவா் கருணாநிதியின் 103ஆவது பிறந்தநாள் வருகிறது. எனவே, இந்த பிறந்தநாளை முன்னெப்போதும் இல்லாத வகையில் சிறப்பாகக் கொண்டாட வேண்டும். ஏழை, எளியோருக்கு நலத் திட்டங்களை வழங்க வேண்டும். இனி நாம் மெத்தனமாக இருக்காமல் அசுர வேகத்தில் பணியாற்ற வேண்டும் என்றாா் அவா்.

கூட்டத்தில் பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மத்திய மாவட்டச் செயலா் க. வைரமணி, வடக்கு மாவட்டச் செயலா் ந. தியாகராஜன், முன்னாள் எம்எல்ஏ-க்கள் செ. ஸ்டாலின்குமாா், அன்பில் பெரியசாமி, மேயா் மு. அன்பழகன் உள்ளிட்ட திமுக நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.