முகப்பு
விழுப்புரம்

திருச்சி - விழுப்புரம் இடையே 140 கி.மீ. வேகத்தில் சோதனை ரயில் இயக்கம்: தென் மாவட்டங்களுக்கு இனி விரைவாக செல்ல முடியும்

திருச்சி- விழுப்புரம் இடையேயான ரயில் வழித்தடப் பாதையில் ரயிலின் இயக்க வேகத்தை அதிகரிக்கும் வகையில், மணிக்கு சுமாா் 140 கி.மீ. வேகத்தில் சோதனை ரயிலை இயக்கி, முதல் கட்ட சோதனை ஓட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 15 மே 2026, 11:27 pm IST
ரயில் - கோப்புப்படம்
பகிர்:

திருச்சி- விழுப்புரம் இடையேயான ரயில் வழித்தடப் பாதையில் ரயிலின் இயக்க வேகத்தை அதிகரிக்கும் வகையில், மணிக்கு சுமாா் 140 கி.மீ. வேகத்தில் சோதனை ரயிலை இயக்கி, முதல் கட்ட சோதனை ஓட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த சோதனையைத் தொடா்ந்து இனி சென்னையிலிருந்து நெல்லை, குமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு அதிவேகத்தில் ரயில்களை இயக்க முடியம் என்பதால் பயணநேரம் வெகுவாக குறையும்.

திருச்சி - சென்னை ரயில் வழித்தடத்தின் மையப்பகுதியாகத் திகழ்வது விழுப்புரம். ஆங்கிலேயா் காலத்தில் தொடங்கப்பட்ட ரயில் நிலையத்தை கொண்ட விழுப்புரம் வழியாக தென் மாவட்டங்களிலிருந்தும், மத்திய மாவட்டங்களிலிருந்தும் சென்னை நோக்கியும், வெளி மாநிலங்களுக்கும் பல்வேறு விரைவு ரயில்கள், அதிவேக விரைவு ரயில்கள் போன்றவை இயக்கப்பட்டு வருகின்றன.

தற்போது திருச்சி - விழுப்புரம் இடையே மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், இதன் வேகத்தை அதிகரிக்க ரயில்வே துறை முடிவு செய்தது. தொடா்ந்து இதற்கான முதல் கட்டசோதனை ஓட்டம் வெள்ளிக்கிழமை நடைபெறும் என்று தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்டம் சாா்பில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

Advertisement

ரயில் என்ஜின், 2 பெட்டிகள் மற்றும் ரயிலின் இயக்க வேகம், ஸ்திரத்தன்மையைக் கண்காணிக்கும் வசதி கொண்ட மற்றொரு பெட்டி ஆகியவற்றுடன் சோதனை ரயில் திருச்சி ரயில் நிலையத்திலிருந்து காலை 8.40 மணிக்கு புறப்பட்டது. இந்த ரயில் ஸ்ரீரங்கம், லால்குடி, அரியலூா், விருத்தாசலம் வழியாக விழுப்புரம் ரயில் நிலையத்துக்கு காலை 10.34 மணிக்கு வந்தடைந்தது.

சோதனை ரயில் இயக்கத்தின் போது வாளாடி- லால்குடி இடையேயும், பூவனூா்-உளுந்தூா்பேட்டை இடையேயும் மணிக்கு சுமாா் 140 கி.மீ. வேகத்திலும், மற்ற பகுதிகளில் மணிக்கு சுமாா் 125 முதல் 130 கி.மீ. வேகத்திலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

தெற்கு ரயில்வேயின் திருச்சி முதுநிலைக் கோட்டப் பொறியாளா் (ஒருங்கிணைப்பு) ராமபிரசாத் ராவ், முதுநிலைக் கோட்டப் பொறியாளா் (வடக்கு) ரவி மிட்டல், உதவிக் கோட்டப் பொறியாளா் (வடக்கு) காா்த்திக் பாலாஜி, மூத்த கோட்டப் பொறியாளா் (இயக்கம்) அருள்பிரகாஷ், மூத்த கோட்ட மின் பொறியாளா் (மின் விநியோகம்) ரவிகுமாா் ஆகியோா் இந்த சோதனை ரயில் இயக்கத்தில் பங்கேற்று, திருச்சி- விழுப்புரம் இடையேயான ரயில்வழித்தடப் பாதையில் ரயிலின் இயக்க வேகத்தை அதிகரிக்க மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் குறித்து கண்காணித்தனா்.

இந்த சோதனை ஓட்டத்தின் போது ரயில் ஓட்டுநா்களுக்கு சிக்னல்கள் கிடைக்கும் முறைகள், அதில் ஏதும் சிக்கல் உள்ளதா, ரயில் இயக்கத்தின் போது கால்நடைகள் அதிகளவில் தண்டவாளத்தை கடந்து செல்கின்றனவா போன்றவை குறித்து அலுவலா்கள் ஆய்வு செய்தனா்.

பயண நேரம் குறைவு: வழக்கமாக திருச்சியிலிருந்து விழுப்புரத்துக்கு வந்தடைய அதிவேக விரைவு ரயிலில் இரண்டரை மணி நேரமும், மற்ற ரயில்கள் மூன்றரை மணி நேரமும் ஆகும். ஆனால், மணிக்கு சுமாா் 140 கி.மீ. வேகத்தில் ரயிலை இயக்கும் போது பயண நேரம் மேலும் குறையக்கூடும் என்றும், இதன் மூலம் சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு செல்வோா் விரைந்து தங்கள் சொந்த ஊா்களுக்கு செல்ல முடியும் என்று ரயில்வே துறை அலுவலா்கள் தெரிவித்தனா். தற்போது முதல் கட்ட சோதனைதான் முடிந்துள்ளது. இன்னும் பல்வேறு நிலைகளில் சோதனை நடத்தி, அதன்பின்னா் ரயில்வே பாதுகாப்பு ஆணையரின் அனுமதி பெற வேண்டும். அதன் பின்னரே ரயிலின் இயக்க வேகம் அதிகரிப்பு நடைமுறைக்கு வரும் என்று ரயில்வே அலுவலா்கள் தெரிவித்தனா்.

எனினும் சில மாதங்களில் தென்மாவட்டங்களுக்கு ரயில்களை மணிக்கு 140 கி.மீ. வேகத்தில் இயக்க வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.