வெளவால்கள் வாழும் தஞ்சாவூர் கண்டி ராஜா அரண்மனை!
தஞ்சாவூர் மகர்நோன்புசாவடி ஆடக்காரத் தெரு வாயிலில் உள்ள பழைமையான கட்டடம், 'கண்டி ராஜா அரண்மனை என அழைக்கப்படுகிறது.
தஞ்சாவூர் மகர்நோன்புசாவடி ஆடக்காரத் தெரு வாயிலில் உள்ள பழைமையான கட்டடம், 'கண்டி ராஜா அரண்மனை என அழைக்கப்படுகிறது. கண்டியைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்த கடைசி மன்னர் இங்கே சில காலம் தங்கியிருந்தார். அவருக்காகக் கட்டப்பட்டதே இந்த அரண்மனையாகும்.
இதுகுறித்து வரலாற்று ஆய்வாளரும், சோழர் வரலாற்று ஆய்வு சங்கத் தலைவருமான அய்யம்பேட்டை என். செல்வராஜ் கூறியது:
'மாமன்னர் ராஜராஜசோழன் தனது கல்வெட்டு மெய்கீர்த்தியில் 'எண்டிசை புகழ் தர ஈழமண்டலமும்' என்கிறார். ஈழத்துடன் பாண்டிய மன்னர்கள் உறவும், நட்பும் கொண்டிருந்தாலும், சோழர்களுக்கு எதிரிகளாகவே இருந்தனர். ஈழம் முந்நூறு ஆண்டுகளுக்கும் மேலாக பல வம்சாவளியைச் சேர்ந்த மன்னர்களின் ஆட்சிக்கு உள்பட்டிருந்தது.
Advertisement
Advertisement
இலங்கையைக் கடைசியாக ஆட்சி செய்த மதுரை நாயக்க மன்னர்கள் வம்சாவளியினர் விஜயநகரத்து வேந்தர்களின் கீழ் பாளையக்காரர்களாக இருந்து, மதுரையின் மன்னர்களாகத் தங்களை பிரகடனப்படுத்திக் கொண்டனர். மதுரை நாயக்கர்கள் இலங்கை மன்னர் குடும்பத்தில் பெண் கொடுத்து, பெண் எடுக்கும் அளவில் நெருக்கமாக இருந்தனர்.
இலங்கையை ஆட்சி செய்த நாயக்க மன்னர்கள் நான்கு பேர். இவர்களில் மூன்றாவதாக ஆட்சி செய்த வீரபராக்ரம நரேந்திர சிம்மராஜாவுக்கு ஆண் வாரிசு இல்லை. இவருடைய மனைவி மதுரை நாயக்கர் மன்னர் குடும்பத்துப் பெண். இவரது சகோதரர் கண்ணுசாமி நாயுடுவை அழைத்து, கண்டி ராஜ்ஜியத்துக்கு இளவரசனாக பிரகடனப்படுத்துகிறார் கண்டி மன்னர். இவரது இயற்பெயரான 'கண்ணுசாமி நாயுடு' என்பதைத் தவிர்த்து, 'ஸ்ரீ விக்ரமராஜா சிங்கம்' என அழைக்கப்பட்டார். இவர்தான் இலங்கையை ஆட்சி செய்த கடைசி மன்னர்.
இவரது காலத்தில் அரசியல் சதிகள் அந்தரங்கமாக அரங்கேறின. ஆட்சிப் பீடத்தைக் கைப்பற்றத் துணிந்த சிங்கள அமைச்சரால் விக்ரமராஜா ஆட்சியில் கலவரமான சூழ்நிலை ஏற்பட்டது. ஒரு பக்கம் பிரெஞ்சுகாரர்களும், மறுபக்கம் ஆங்கிலேய கிழக்கிந்திய நிறுவனத்தினரும் வலைவிரித்துக் காத்துக் கொண்டிருந்தனர். ஆங்கிலேயருடன் நிகழ்ந்த போரில் மன்னர் தனது குடும்பத்துடன் தப்பித்து வனத்துக்குள் சென்று ஒளிந்து கொண்டார். பணத்தாசை பிடித்தவரால் காட்டிக் கொடுக்கப்பட்ட மன்னர் குடும்பத்துடன் ஆங்கிலேயர்களால் கைது செய்யப்பட்டார்.
1815-ஆம் ஆண்டு பிப்ரவரி 10 -இல் ஏற்பட்ட கண்டி ஒப்பந்தத்தின்படி அந்த நாடு ஆங்கிலேயர்கள் வசம் சென்றது. மன்னரும், மன்னர் குடும்பத்தினர் 50 பேரும் 1816-இல் ரகசியமாக இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டனர். கப்பலில் போர்க் கைதியாக இவர்கள் அனுப்பி வைக்கப்பட்டதுடன், இலங்கையில் தமிழ் மன்னராட்சி முடிவுக்கு வந்தது.
இதையடுத்து, கண்டி மன்னர் குடும்பம் வேலூர் கோட்டையில் சிறை வைக்கப்பட்டனர். அவர்கள் அங்கேயே போர்க் கைதிகளாக சொற்ப தொகையை ஓய்வூதியமாகப் பெற்று வாழ்ந்து, மரணமடைந்தனர். இவர்களுக்காக வேலூர் பாலாற்றங்கரையில் அமைக்கப்பட்ட நினைவுச் சின்னங்களை முத்து மண்டபமாகத் தமிழ்நாடு அரசு கட்டி, இன்றும் பாதுகாத்து வருகிறது.
தஞ்சாவூரில் கண்டி ராஜா அரண்மனை இப்போதும் உள்ளது. இதுதொடர்பாக தஞ்சாவூர் சரசுவதி மகால் நூலகத்திலுள்ள மராட்டிய மன்னர் கால மோடி ஆவணங்களில் (சுருக்கெழுத்து), ' கண்டி மன்னர் உள்பட குடும்பத்தினரை ஆங்கிலேயர்கள் முதலில் நாகப்பட்டினம் துறைமுகத்துக்கு அழைத்து வந்து, பின்னர் தஞ்சாவூருக்குக் கொண்டு சென்றனர். தஞ்சாவூர் கோட்டையில் அவர்கள் மன்னருக்குரிய மரியாதையுடன் வரவேற்கப்பட்டனர்.
அரண்மனைக்கு எதிரே உள்ள பகுதியில் மன்னர் பார்வையில் சில மாதங்கள் இருக்க ஏற்பாடு செய்யப்பட்டது' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுவே, அரண்மனைக்கு எதிரே உள்ள 'கொண்டி ராஜாபாளையம்' என அழைக்கப்படுகிறது. 'கொண்டி' என்றால் 'வேற்று தேசத்தவர்' எனப் பொருள். 'வேற்று தேசத்து மன்னர்' இங்கே தங்கியிருந்ததால், ' கொண்டி ராஜாபாளையம்' என மாறியது.
இவர்களுடைய பராமரிப்புச் செலவை தஞ்சாவூர் மராட்டிய மன்னர் இரண்டாம் சிவாஜியே ஏற்றார். ஆனால், ராஜ்ஜியம் இல்லாத மன்னரான சிவாஜி, இவர்களுக்கு முழுப் பாதுகாப்பு அளிக்கக் கூடிய நிலையில் இல்லை.
எனவே, சிறிது காலம் கழித்து தஞ்சாவூர் கோட்டையின் தென் கிழக்குத் திசையில் ஆடக்காரத் தெருவில் பாதுகாப்பான, அனைத்து வசதிகளுடன் சிறிய அரண்மனை கட்டிக் கொடுக்கப்பட்டது. இதனிடையே, கண்டி மன்னர், ராணி உள்பட மிக நெருங்கிய உறவினர்களை ஆங்கிலேயர்கள் வேலூர் கோட்டைக்கு அழைத்துச் சென்று, கண்டி மகாலில் சிறை வைத்தனர். தஞ்சாவூரில் இருந்தால் தப்பித்துச் செல்ல வாய்ப்புகள் அதிகம் என்பதால், ஆங்கிலேயர்கள் இவ்வாறு செய்திருக்கலாம். மன்னரின் மற்ற உறவினர்கள் தஞ்சாவூர் கண்டி ராஜா அரண்மனையிலேயே தங்கிவிட்டனர்.
இந்த அரண்மனையில் நூறு ஆண்டுகளுக்கு முன்பு வரை கண்டி மன்னரின் அடுத்த தலைமுறை வாரிசுகள் வாழ்ந்து வந்த நிலையில், கடன் பிரச்னை காரணமாக தனியார் வசம் மாறியது. குதிரை லாயமாக இருந்த முன் பகுதி இப்போது வணிக வளாகமாக உள்ளது. ஆனால், சிதிலமடைந்த நிலையிலுள்ள இந்த அரண்மனையில் தற்போது வெளவால்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன'' என்கிறார் செல்வராஜ்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.