முகப்பு
தினமணி கதிர்

இலங்கையின் அழகு..!

தமிழ்நாட்டுக்கும் இலங்கைக்கும் உள்ள தொடர்பை சங்க கால இலக்கியங்களும், புராணங்களும் எடுத்துரைக்கின்றன.

Updated On : 5 ஜூலை 2026, 4:05 am IST
பகிர்:

தமிழ்நாட்டுக்கும் இலங்கைக்கும் உள்ள தொடர்பை சங்க கால இலக்கியங்களும், புராணங்களும் எடுத்துரைக்கின்றன. இலங்கையில் தமிழர்கள் அதிகம் பேர் வசிக்கின்றனர். எனவே இங்குள்ளோர் இலங்கைக்கு சுற்றுலா செல்ல விரும்புகின்றனர். அங்கு சுற்றுப்பயணத்தில் பார்க்க வேண்டிய சில இடங்கள்.

கண்டி

'இலங்கையின் பண்பாடு, வரலாற்றின் மையம்' எனக் கூறப்படும் கண்டி நகரமானது மேடு, பள்ளமான குன்றுகளுக்கு இடையில் அமைந்துள்ளது. தேயிலைத் தோட்டங்கள், மசாலாப் பொருள்கள், தோட்டங்களுக்கும் பெயர் போனது.

Advertisement

Advertisement

1807-ஆம் ஆண்டில் கண்டியின் கடைசி மன்னர் ஸ்ரீவிக்ரமராஜ சிங்கனால் செயற்கையாக உருவாக்கப்பட்ட கண்டி ஏரி, நகரத்தின் மையத்தில் உள்ளது. நடைபாதைகளால் சூழப்பட்டுள்ளதே கூடுதல் அழகு. இதனை சுற்றி காலனித்துவ காலகட்டடங்கள், சுற்றிலும் உள்ள மலைக் காட்சிகளைக் காணலாம். ஏரிக்கரையிலிருந்து மீன்கள், வாத்துகள், அன்னப்பறவைகளுக்கு உணவை அளிக்கலாம். குரங்குகளுடன் சேர்ந்து ஆமைகள், உடும்புகள் குளிப்பதைக் காணலாம்.

யுனெஸ்கோ பாரம்பரியத் தலமான இங்குள்ள புனித பல் நினைவுச் சின்னம் 16-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. நன்கு பரந்து விரிந்துள்ள வளாகத்தில் இருப்பது கெளதமபுத்தரின் இடது கோரைப் பல் என்கின்றனர். தங்கப் பேழையில் அதைக் காணும் பாக்கியத்தைப் பெறலாம். ஒவ்வொரு புதன்கிழமையும் புத்தருக்கு அபிஷேகம் விசேஷம்.

கண்டியில் அழகன் குமரனுக்கு அற்புதமான சிறிய கோயில் உள்ளது.

10 ஹெக்டரில் அமைந்துள்ள பின்னவலா யானைகள் காப்பகத்தில் உலகிலேயே சிறைப்பிடிக்கப்பட்ட நிலையில் உள்ள யானைகளின் மிகப் பெரிய கூட்டத்தைக் காணலாம். இங்கு பல்வேறு தாவரங்களுடன் அரிய வன விலங்குகள், பறவைகளையும் காணலாம். பிரம்மாண்ட வெள்ளை புத்தர் சிலை பகிரவோ கந்தா என்ற இடத்தில் உள்ளது. அங்கிருந்து கண்டி நகரின் அழகை ரசிக்கலாம். இலங்கையின் மிக நீளமான நதி மகாவலி இங்கு ஓடுகிறது.

கொழும்பிலிருந்து கண்டி சுமார் 115.2 கி.மீ. தொலைவில் உள்ளது.

நுவரேலியா

குளிர்ந்த காற்று, நீர்வீழ்ச்சி, பனிமூட்டம் சூழ்ந்த குன்றுகளுடன் தேயிலைத் தோட்டங்கள் என அழுகுற அமைந்துள்ள இந்த நகரை 'சின்ன இங்கிலாந்து' என அழைப்பர்.

முடிவில்லாத தேயிலைத் தோட்டமானது ராமாயணப் பாதையின் முக்கிய அங்கமாகும். இங்கு ஓர் அழகிய குன்றின் உச்சியில் அமைந்துள்ள ரம்போடாவில் சீதையைத் தேடி வந்த அனுமன் கால் பதித்த இடமும், ஓய்வெடுத்த இடமும் உள்ளது. சீதையின் அசோகவனமும் உள்ளது. அங்கு சீதைக்கு கோயிலும் உள்ளது.

கடல்மட்டத்திலிருந்து சுமார் 1,668 மீட்டர் உயரத்தில் உள்ள இந்த நகரம்தான் இலங்கையின் மிக உயரமான நகரமாகும். இங்கு கிரிகோரி ஏரி படகு சவாரி சிறப்புடையது. நடைப்பயிற்சிக்கு உகந்த இடமாகும். ஹக்கலா தாவரவியல் பூங்கா பல வகையான மலர்கள், மரங்கள், அழகிய பூங்காக்களைக் கொண்டது. நகரத்தின் வெப்பம்15-20 டிகிரி செல்சியஸ். இரவு நல்ல குளிர் இருக்கும். தரமான தேயிலைத் தோட்டங்கள் உள்ளன.

1818-இல் கண்டுபிடிக்கப்பட்ட இந்த நகரில் 1830-இல் காபியும், பின்னர் மாற்றாக தேயிலையும் பயிரிடப்பட்டன. அடுத்ததாக இங்கிலாந்து காய்கறிகள் பயிரிடப்பட்டன.

இன்றும்கூட 'இங்கிலீஷ் காய்கறிகள்' இங்கிருந்தே பிற நாடுகளுக்குச் செல்கின்றன. இலங்கையின் மிக உயரமான பிதுரந்தக்லா சிகரம் இங்குள்ளது.

கொழும்பிலிருந்து 150 கி.மீ.தொலைவில் உள்ளது.

கால்லே

கடலோர நகரமான இங்கு வித்தியாசமான கட்டடக் கலை, குறுகலான சந்துகள், காலி கோட்டை, பழைய கலங்கரை விளக்கம், அருங்காட்சியகம், பழைய கடை வீதி உள்ளன. யுனெஸ்கோ பாரம்பரியத் தலமாகும். 1588-இல் போர்த்துகீசியர்களால் கோட்டை கட்டப்பட்டவுடன் டச்சு நாட்டவர்கள் இந்த நாட்டைப் பிடித்தனர். அடுத்து இங்கிலாந்து நாட்டவர்கள். ஆகவே, மூன்று நாட்டவர்களின் கட்டடக் கலை சார்ந்த கட்டடங்கள் இங்குள்ளன. பொன்னிற மணல் கடற்கரையில், சூரிய அஸ்தமனம் அருமையாக இருக்கும். பழங்கால ஊரை நினைவுபடுத்தும் இந்த நகரம் கொழும்பிலிருந்து

119 கி.மீ. தொலைவில் உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments