மார்லன் பிராண்டோவின் சுயசரிதையின் பொறி!
வரம்பு மீறிய காதல், பெற்றோர்களை ஏமாற்றுவது, பொய் சொல்லுவது உள்பட பல மீறல்களைத்தான் பல சினிமாக்கள் அர்த்தப்படுத்தி வந்திருக்கின்றன.
'வரம்பு மீறிய காதல், பெற்றோர்களை ஏமாற்றுவது, பொய் சொல்லுவது உள்பட பல மீறல்களைத்தான் பல சினிமாக்கள் அர்த்தப்படுத்தி வந்திருக்கின்றன.
இது அது மாதிரி இல்லாமல் வேறொரு மீட்டுருவாக்கத்தில் கைக்கு வந்து சேர்ந்திருக்கிறது. பெரு நகர வாழ்க்கை தேடல்கள் நிறைந்தது. ஆனாலும், எப்போதைக்குமான மனசு அந்தப் பள்ளி, கல்லூரி என காதல் வாழ்க்கையிலேயே சிலாகிக்க விரும்புகிறது. சக தோழர்கள், ஆசிரியர்கள், அந்த மர நிழல், குளம், ஆறு என எதையும் மறக்க மறுக்கிறது மனசு.
ஆயிரங்களில் இருந்து லட்சங்களுக்கு மாறின வாழ்க்கை கிடைத்தாலும், இன்னொரு முறை அந்த வாழ்க்கையை வாழவே முடியாது. வெற்றிடத்தைக் காற்று நிரப்பும் என்பது மாதிரி, முகத்தால்... குரல்களால்... செயல்களால்... சாயல்களால்தான் நம் பிரிவுகளையும் பிரியங்களையும் நிரப்பிக் கொண்டே இருக்கிறோம்' என உள் வாழ்க்கையின் அர்த்தம் தெரிந்து பேசுகிறார் இயக்குநர் எம்.ஆர். பாரதி. நல்ல சினிமாவுக்கான மெனக்கெடல்களில் எப்போதும் இருப்பவர். இப்போது 'சைக்கிள் கேப்' படத்தின் மூலம் கதை சொல்ல வருகிறார்.
Advertisement
Advertisement
கதையின் உள்ளடகத்துக்கான முதல் புள்ளி எது?
என்னை ரொம்பவே கவர்ந்த ஹாலிவுட் கலைஞன் மார்லன் பிராண்டோ. அவன் பெற்றோரின் காதல் கடிதத்தை உலகத்துக்குச் சாட்சியாக, தன் சுயசரிதைப் புத்தகத்தில் தந்திருப்பான். மார்லனின் அப்பா, அம்மா இரண்டு பேருமே குடிகாரர்கள்.
பிள்ளைகள் வெறுக்கிற அளவுக்கு சண்டையிட்டுக் கொண்டவர்கள். அடி, உதை, திட்டு... இப்படி தினம் தினம் சண்டை போடுகிறவர்கள். எதற்காக கல்யாணம் செய்தார்கள்? என்று சொந்த பிள்ளைகளே நினைக்கிற ஒரு வாழ்க்கையை வாழ்ந்தவர்கள். ஆனால், இரண்டு பேரும் உயிருக்கு உயிராகக் காதலித்து கல்யாணம் செய்து கொண்டவர்கள்.
காதலிக்கும் போது மார்லன் அம்மா, நமக்கு இணையான இன்னொரு காதல் ஜோடி இந்த உலகத்தில் இருக்க முடியாது என்று உருக்கமாக எழுதிய கடிதத்துக்கு மார்லன் அப்பா, ' நாம் இருவரும் ஒருவரையொருவர் புரிந்து கொண்டதைப் போல, நம் காதலின் மேன்மையை இந்த உலகமும் நிச்சயம் அறிந்து கொள்ளும்' என உருகியிருப்பார்.
இப்படி நேசித்த காதலர்கள் கல்யாணம் ஆனதற்குப் பிறகு சேர்ந்து இருக்கிறது சந்தோஷம் என்று சொல்லாமல், பிரிந்து வாழ்வது நிம்மதியென்று பேசினார்கள். உயிருக்கு உயிராக நேசித்த இரண்டு காதலர்களுக்கு இடையில் காலம் எந்த முள்ளால் கோடு கிழித்தது என மார்லன் சுயசரிதையில் குறிப்பிட்டு இருப்பார். ஒரு வகையில் இந்தச் சினிமாவுக்கான பொறி இதுதான். காதல் காலத்தில் நிகழும் ஈகோவும், சச்சரவுகளும்தான் களம். அதை சுவாரசியம் கூட்டிச் சொல்லியிருக்கிறேன்.
காதலை அர்த்தப்படுத்துகிற தலைமுறை பிள்ளைகள் மாறியிருக்கிற காலம்தானே இது?
எல்லாவற்றுக்கும் இங்கே முன் மாதிரிகள் இருப்பதால், உங்களுக்கு அப்படித் தோன்றும். ஆனாலும், இன்னும் உண்மையான அன்புக்குக் கிடையாய் கிடப்பவர்கள் இங்கே இருக்கத்தான் செய்கிறார்கள்.
காதல் என்கிற சந்தோஷம் இருப்பதால்தான் சமூகம் வாழ்கிறது. படித்தது, பார்த்தது, கேட்டது, உணர்ந்ததுதான் படைப்பாக வருகிறது. இது கூட சென்டிமெண்ட் சினிமாவுக்கான வார்த்தையாக இருக்கலாம். அப்படிப் பார்த்தால் இது கூட சென்டிமெண்ட்தான்.
இந்தக் கதை, உறவுகள் கூட பழையதுதான். ஆனால், அதை எனக்கான உணர்வாக, மனிதனாகக் காட்சிப்படுத்தியதுதான் புதிது. என் கடவுள், என் மதம், என் ஜாதி, என் பயம், என் பணம்... இப்படி எத்தனை எத்தனை விஷயங்கள் ஆட்டிப் படைக்கின்றன. இந்த எல்லாவற்றையும் கடந்தவர்கள் மரணத்தை அடையத் துடிக்கிறார்கள்.
ஒரு சிலர்தான் நல்ல நிமிடங்களைத் தவிர வேறு எதையும் விட்டுப்போகக் கூடாது என நினைக்கிறார்கள். இந்த மாய மந்திரம் இந்தச் சினிமாவுக்கும் பொருந்தும். மனித உறவுகளின் மகத்துவத்தை, ஆழத்தை முன் வைக்கிற கதை. காதலைச் சொல்லாமல் கூட இருக்கலாம். காதல் பேசுகிற விஷயம் இல்லை. தயவு செய்து அதை உணருங்கள் இளைஞர்களே....
நடிகர்கள் எல்லோரும் புதுமுகங்களாக இருக்கிறார்களே?
இதுதான் கதை என முடிவான வேகத்தில் எல்லா நடிகர்களையும் முடிவு செய்து விட்டேன். கதையின் உண்மைத் தன்மைக்குப் பக்கத்தில் இருப்பவர்களை மட்டும்தான் இந்தப் படத்துக்காக விரும்பினேன். இப்படி வந்தவர்கள்தான் நவாஸ், ஷெரி அகர்வால்.
இந்த இருவரும்தான் கதைக்கு உயிர் கொடுத்திருக்கிறார்கள். புதுமுகங்கள் மாதிரியெல்லாம் இல்லை. சரியான பயிற்சிகள் தந்து, உதகை நகரத்தில் 30 நாள்களுக்கு மேல் தங்கி படப்பிடிப்பை முடித்து வந்தேன். லயோலா கல்லூரி மாணவர்கள் 5 பேர் துணைக்கு வந்தார்கள்.
அவர்களே உதவி இயக்குநர்கள். அவர்களே நடிகர்கள். அவர்களே உடையலங்கார நிபுணர்கள்... என இப்படி அனைத்து வேலைகளையும் செய்து உதவினார்கள். சின்ன பட்ஜெட்தான். ஆனால், உழைப்பு பிரம்மாண்டம். வாய்ப்பு தந்த டியூப் லைட் புரொடக்ஷன் நிறுவனத்துக்கு நன்றி.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.