முகப்பு
செய்திகள்

தமிழ்க் குடும்பங்களின் புறக்கணிக்க முடியாத கலாசாரம் இளையராஜா!

தமிழ்க் குடும்ப நிகழ்வுகளில் இளையராஜாவின் பாடல்கள் முக்கிய இடம் பிடித்திருப்பது குறித்து...

Updated On : 2 ஜூன் 2026, 1:16 pm IST
இளையராஜா... - DIN
பகிர்:

இசைஞானி இளையராஜா... இந்தப் பெயரைக் கேட்டவுடன் உங்களுக்கு என்னவெல்லாம் நினைவுக்கு வரும், சிலருக்கு அவரின் மகத்தான உருவம், சிலருக்கு அவரின் விடாப்பிடி குணம் ஏதேனும் ஒன்று நினைவில் வந்து நிற்கும். அந்த நினைவைக் கடந்து செல்லுங்கள், ராஜாவின் பெயரைக் கேட்டவுடன் ஆயிரக்கணக்கான பாடல்களில் உங்களுக்கென்று அவர் இசைத்ததாக நீங்கள் உணரும் அந்த ஒரு பாடல் உங்கள் மனதில் கேட்கும். 

அது 1976 ஆம் ஆண்டு, நடிகர் சிவகுமார் நாயகனாக நடித்து தேவராஜ் - மோகன் ஆகிய இயக்குநர்களின் இயக்கத்தில் உருவான “அன்னக்கிளி” எனும் படத்தில் இளம் இசையமைப்பாளரான “ஞானதேசிகன்” எனும் இளைஞர், “இளையராஜா” எனும் பெயரில் கலைஞராக அறிமுகமானார். அன்று முதல் சுமார் 50 ஆண்டுகளைக் கடந்தும் இன்று வரை இளையராஜாவின் பாடல் ஒளிக்காத ஒரு தமிழ் வீடும் இருக்காது. ஆடியோ கேசட், ரேடியோ தொட்டு ஸ்பாட்டிஃபை, யூடியூப் வரை இன்னும் உருவாகிக் கொண்டிருக்கும் இசையின் பாதைகள் அனைத்திலும் இளையராஜாவின் ஆளுமை நீள்கிறது. தமிழ்நாடு மட்டுமின்றி, கேரளம், கர்நாடகம் என இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும், எல்லை கடந்து பிற நாடுகளிலும் வசிக்கும் மனித மனங்களுக்கு இளையராஜா அறிமுகமாகிவிட்டால் அவரை நிச்சயம் ஒரு மனிதரால் புறக்கணிக்கவே முடியாது.

இன்றைய நவீன உலகில் அட்ரினலீனைச் சுரக்கச் செய்யும் புது புது பாடல்கள் வந்துகொண்டேதான் இருக்கின்றன. ஒரு கட்டத்துக்கு மேல் மனித மனங்களுக்கு சலிப்பை உருவாக்கக் கூடிய குறுகிய வாழ்நாளை மட்டுமே இக்கால பாடல்கள் கொண்டிருக்கின்றன. ஆனால், 40 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான இளையராஜாவின் பாடல் அன்று ஏற்படுத்திய தாக்கத்தை வாசம் மாறாமல் இன்றும் ஏற்படுத்தும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. 

Advertisement

Advertisement

தமிழ்க் கலாசாரத்துக்கு இசையும், பாடலும் ஒன்றும் புதியதல்ல! ஆனால், மொழிகளை, இன வேற்றுமைகளை, சாதி மதங்களைக் கடந்து எளிய மனிதனை ஆட்கொள்ள வேண்டுமென்றால் அந்த இசையும் பாடலும் ஒன்று எளிமையாக இருக்க வேண்டும் அல்லது தெய்வீகமாக இருக்க வேண்டும். இளையராஜா இவ்விரண்டிலும் வல்லவர். அவரின் எளிமையான குரல் ஏதோவொரு தெய்வீகத்தைக் கொண்டிருக்கிறது. 

எக்காலத்தில் தொடங்கிய கலாசாரம் என்பது தெரியாது. வீட்டின் வாசலில் குழாய் கட்டி கேசட் பாடலை ஒலிபரப்பியது முதல் பென்டிரைவ், ப்ளூடூத் மூலம் நவீன ஸ்பீக்கரில் கனக்ட் செய்வது வரை தமிழ்க் குடும்பங்களின் கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் இளையராஜாவின் பாடல்கள் இன்றும் அதே ஆதிக்கத்தில்தான் உள்ளன. அப்படி ஒவ்வொன்றுக்கும் இளையராஜா இசைத்த பாடல்களைச் சொல்லவா வேண்டும்! 

தனது மகள் பவதாரிணியுடன் இளையராஜா - கோப்புப் படம்

தாலாட்டு பாடி தூங்கவைத்தது ராஜாதான்! 

என்னால் ஒன்றை மட்டும் உறுதியாகச் சொல்ல முடியும், 1982 ஆம் ஆண்டுக்குப் பிறகு தனது குழந்தையைத் தூங்கவைக்க தாலாட்டும் தாய்மார்கள் “கண்ணே கலைமானே” பாடலின்றி தாலாட்டியது இல்லை! யேசுதாஸின் குரலில் வெளியான பாடலை நாம் பெரும்பாலும் நம் தாயின் குரலில் கேட்டு தூங்கியிருப்போம். ஏனெனில், தாலாட்டு பாடல்களில் G.O.A.T. ஆகக் கருதப்படும் “கண்ணே கலைமானே” உருவானதும் பல G.O.A.T.-களின் கூட்டு முயற்சியில்தான். 

சிறந்த இயக்குநர்களில் மூத்தவரான பாலு மகேந்திரா, நடிகர்களில் சிறந்தவர்களான கமல்ஹாசன் மற்றும் ஸ்ரீதேவி நடிப்பில் உருவாகி 1982 ஆம் ஆண்டு வெளியாகி தமிழ்த் திரையுலகை புரட்டிய படம் “மூன்றாம் பிறை”. யாரைத் தாலாட்ட நினைத்து கவியரசு கண்ணதாசன் எழுதினாரோ தெரியாது! யாரைத் தூங்கவைக்க இசைஞானி இசைத்தாரோ தெரியாது! எதற்காக அந்த இசைக்கு யேசுதாஸ் அசைந்தாரோ தெரியாது. இவர்களின் கூட்டணியில் உருவானது “கண்ணே கலைமானே” பாடல். 

இன்றளவும் எங்கேனும் ஓரிடத்தில் இப்பாடல் ஒலிப்பதைக் கேட்டவுடன் யாராக இருந்தாலும் தங்களின் அன்னை மடியில் கிடைக்கும் நிம்மதியான உறக்கத்தை ஒரு முறையாவது நினைத்துப் பார்ப்பார்கள். இப்பாடல் மட்டுமின்றி, தூளியிலே ஆடவந்த (சின்னதம்பி), தேனே தென்பாண்டி மீனே (உதயகீதம்), பச்சமலப்பூவு (கிழக்கு வாசல்), பூவே பூச்சூடவா, சின்ன சின்ன ரோசா பூவே (பூவிழி வாசலிலே) உள்ளிட்ட பாடல்கள் தாலாட்டும் தாய்மார்களின் மனதுக்குள் பிளே லிஸ்ட்டாக இருக்கின்றன. 

ஸ்டுடியோவில் இளையராஜா... - கோப்புப் படம்

காதலுக்கு ராஜாவே துணையா? 

அதில் என்ன சந்தேகம் காதலுக்கு உயிரூட்டுவதே ராஜாவின் இசைதான்! மனிதர்கள் பலவித எண்ணங்களைக் கொண்டு பலதரப்பட்ட குணங்களுடையவர்களாக இருக்கிறோம். இதில், அனைத்து உயிர்களுக்கும் நிச்சயமானவை பிறப்பு, இறப்பு மற்றும் காதல். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வித காதலுண்டு. என் காதல் உங்களுடையதுபோல் இருக்காது. உங்களுடையது எனக்கு ஏற்றதாக இருக்காது. ஆனால், அனைத்து வித காதலுக்கும் ராஜாவிடம் இசையுண்டு.

இளையராஜா இசையமைத்த பாடல்களுக்குத் திரையில் உதடுகளை அசைத்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சத்யராஜ், மோகன், ராமராஜன், ரஹ்மான், பிரபு, கார்த்திக், மம்மூட்டி உள்ளிட்ட எத்தனையோ நாயகர்களை தங்கத் தமிழ்நாடு காதல் நாயகர்களாக தலையில் தூக்கிக் கொண்டாடியுள்ளது. தடைகளைக் கடக்கும் கிராமத்து காதல், நவீனமயமான நகர காதல், வகுப்புகளைக் கடக்கும் கல்லூரி காதல், வயதுக்கு வந்த பள்ளிக்கூட காதல், ”சேது” போன்ற கபாலத்தைத் திறந்த காதல் என பல்வேறு காதலுக்கும் அவர் இசையமைத்துள்ளார். 

மறைந்த பாடும் நிலா எஸ். பி. பாலசுப்பிரமணியம் குரலும் இளையராஜாவின் இசையும் ஒன்றிணைகையில் தனியொரு மனிதனால் காதல் செய்ய மறுக்க முடியுமா என்ன? 1986 இல் வெளியான மௌன ராகம் படம் காதல் படங்களுக்கு ஒரு நல்ல உதாரணம். இன்றளவும் இப்படத்தைத் தழுவியோ அல்லது இப்படத்தின் கதையை காப்பியடித்தோ உருவாகும் காதல் படங்கள் தொடர்ந்து ஹிட் அடித்து வருகின்றன. 

இப்படத்தின் வெற்றிக்கு இளையராஜாவின் இசை முக்கிய காரணம் என்று சொன்னால் மிகையாகாது. அதுவரை தமிழ் சினிமா கண்டிராத ஒரு படத்தை, அதுவரை தமிழ் ரசிகர்களின் கண்கள் காணாத ஒளிப்பதிவை, கதையை, நடிப்பை அந்தப் படம் கொண்டிருந்தது. மேலும், இப்படத்தின் “ஓஹோ மேகம் வந்ததோ”, “நிலாவே வா”, “மன்றம் வந்த தென்றலுக்கு” போன்ற 5 பாடல்களும் வெளியான உடன் மாபெரும் வெற்றியடைந்து படத்தை உச்சத்திற்கு அழைத்துச் சென்றன. 

பெரிய வாத்தியங்கள் இல்லை, அயல்நாட்டு கலைஞர்களும் இல்லை. அனைத்தும் நம் மரபுக்கு பரிட்சியமானவைதான். இருப்பினும், ஒவ்வொன்றிலும் இளையராஜா உருவாக்கிய இசை வேறு. காத்திருப்பு, ஏக்கம், பரிதவிப்பு, அணைப்பு, முத்தம், காமம் என காதலுக்குள் இருக்கும் ஒவ்வொரு உணர்வு, பிரிவுக்கும் இசைஞானி இசையமைத்துள்ளார். இதில், நம்மால் சொல்ல முடியாத சில உணர்வையும் உணர்ந்து இசையமைத்துள்ள இளையராஜாவுக்கு இசைஞானி எனும் பட்டம் மட்டும் போதுமானதாக எனக்குத் தோன்றவில்லை. 

இசைக்கு ஏற்றவாறு பாடகர்களும் தெய்வீகக் குரலுடையவர்கள் எஸ்.பி. பாலசுப்பிரமணியம், சித்ரா, எஸ். ஜானகி, யேசுதாஸ், ஆஷா போஸ்லே உள்ளிட்ட பலரும் இளையராஜாவின் காதல் பாடல்களுக்கு முக்கியமானவர்கள். “கேளடி கண்மணி”, “குருவாயூரப்பா”, “மாங்குயிலே பூங்குயிலே”, “பூங்காற்று புதிதானது”, “பூவே செம்பூவே”, “சுந்தரி கண்ணால் ஒரு சேதி”, “நீ பார்த்த பார்வைக்கு” உள்ளிட்ட ஏராளமான பாடல்கள் காதில் பட்டவுடன் காதலை உருவாக்கிவிடும்.

இதில், ஒரு சிறப்பு வாய்ந்த பாடலுமுண்டு! நடிகர் நாசர் இயக்கி நாயகனாக நடித்து வெளியான படம் “அவதாரம்”. இப்படத்தின் கதையை அறியாதவர்களும் உண்டு, இப்படத்தை பார்க்காத கண்களும் உண்டு. ஆனால், இப்படத்துக்கு இளையராஜா உருவாக்கிய பாடலைக் கேட்காத மனங்கள் தமிழ்நாட்டில் இல்லை என்பதுதான் உண்மை. இப்படத்தின், “தென்றல் வந்து தீண்டும்போது, என்ன வண்ணமோ மனசுல” எனும் பாடலைக் கேட்கையில் எத்தகைய வயதுடையவருக்கும் எத்தனை உறவுகளைக் கடந்தவருக்கும், இளம்பருவத்தில் வெகுளியாக தனக்கு ஏற்பட்ட அந்த முதல் காதலின் வாசம் செவிவழியாக நினைவுக்கு வரும். 

இளையராஜாவின் எளிமையான குரல் செவிகளில் விழத் துவங்கியதும் பல அடுக்குகளைக் கொண்டு மறைந்திருக்கும் மனதை ஏதோவொரு விசை அடித்து எழுப்பி அமரவைக்கும். புல்லரிப்புகளுக்கும், மெய்சிலிர்ப்புகளுக்கும் இடையில் சிக்கிய நம்மால், நினைவலைகளை கிளரிவிடும் இப்பாடலை விட்டு வெளியேறவே முடியாது. அப்படியான ஒரு சூழலில், “எவரும் சொல்லாமலே பூக்களும் வாசம் வீசுது” என ஜானகியம்மாவின் குரல் ஒரு உலுக்கு உலுக்கும். 

இறுதியாக, காதலைப் பாடி மனதை வருடி நினைவைக் கிளறி திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ நினப்புல என இப்பாடல் முடியும்போது மனதுக்குள் மூன்றாம் உலகப் போர் முடிந்திருக்கும். 

இதேபோல், ஒருதலைக் காதலர்களின் கீதமாகத் தலைமுறைகளைக் கடந்தும் நிலைத்து நிற்கிறது இதயம் படத்தின் “பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா” எனும் பாடல். இப்பாடலின் இசையும் கவிஞர் வாலியின் வரிகளும் யேசுதாஸின் குரலும், இன்றும் வெளியே சொல்லாமல் தனக்குள் மறைத்து வைத்துக்கொள்ளும் திறன் வாய்ந்த ஒருதலைக் காதலின் புனிதத்தை உணர்வு மாறாமல் உணர்த்தும். 

இளையராஜா - கோப்புப் படம்

பயணங்களில் வழித்துணையே…!

நீண்ட நெடிய பயணங்கள் செய்ய நம் அனைவருக்கும் ஆசை இருக்கும். ஆனால், அந்தப் பயணம் தொடங்கியதும் தொடக்கத்தில் இருக்கும் புத்துணர்வு ஏதோவொரு இடத்தில் கரைந்து சலிப்பை ஏற்படுத்தும். அந்த சலிப்பை உருவாகவிடாமல் தடுக்க வேண்டுமா! அதற்கும் இளையராஜா ஒரு வழியை ஏற்படுத்தியுள்ளார். இன்றும், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் சுட்டெரிக்கும் வெயிலில், பொட்டல்காடாக இருக்கும் கிராமங்களுக்கு இடையே ஓடும் இரும்பு பேருந்தின் உள்ளே பாடல் வழியே ஏசி காற்றாய் வீசுகிறார் நம் இசைஞானி. ஒவ்வொரு பேருந்து ஓட்டுநரும், நடத்துனரும் தங்களுக்கும் தங்களுடன் பேருந்தில் பயணிக்கும் பயணிகளுக்கும் ஏற்படும் மனச்சோர்வை போக்குவதற்காகப் இளையராஜாவின் பாடல்கள் நிரம்பிய ஒரு தனிப்பட்ட பிளே லிஸ்ட்டை வைத்துள்ளனர். 

அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் சிற்றூர்களுக்கும் டவுண்களுக்கும் இடையே ஓடும் தனியார் பேருந்துகளிலும், பாயிண்ட் டூ பாயிண்ட் பேருந்துகளிலும் நீங்கள் ஒருமுறையாவது பயணித்திருந்தால், “என்னை தொட்டு”, “அடி பூங்குயிலே”, “தேடும் கண்பார்வை”, “சொர்கமே என்றாலும்”, “ஆடியிலே சேதி சொல்லி”, “நான் ஏரிக்கரை”, “ஆசையிலே பாத்திக்கட்டி”, “ஓ பட்டர்ஃபிளை”, “புது ரூட்டுலதான்” போன்ற எண்ணற்ற இளையராஜாவின் பாடல்கள் பேருந்து டிக்கெட் இன்றி வழித்துணையாகக் கூடவே வருவதைக் காணமுடியும்.

அந்தப் பேருந்தில் ஜன்னல் சீட் கிடைத்தாலும் சரி, சீட்டே கிடைக்காமல் நின்றபடி பயணித்தாலும் சரி பேருந்தின் கரகர சத்தத்துக்கு இடையே கேட்கும் இந்தப் பாடல்கள் நிச்சயம் அந்தப் பயணத்தின் மீதான உன்னதத்தைப் பாதுகாக்கும். இதில், உங்களுக்கு சீட்டும் கிடைக்காமல், நிற்க இடமும் கிடைக்காமல் படியில் தொங்கியபடி நீங்கள் ஃபுட்போர்ட் அடித்தாலும் அதற்கும் இசைஞானி இசைத்துள்ளார். ஃபுட் போர்டில் பயணிக்கும் ஒவ்வொரு இளைஞனின் மனதிலும் ஒரு முறையாவது “வளையோசை கல கல கலவென கவிதைகள் படிக்கிது” எனும் சத்யா பட பாடல் நினைவுக்கு வராமல் இருக்காது. அப்படத்தில், நடிகர்கள் கமல்ஹாசனும் அமலாவும் காதலர்களாகப் பயணிக்கும் அந்தக் காட்சி ஃபுட்போர்டில் உயிருக்கு ஆபத்தான நிலையில் பயணிக்கும்போது நினைவுக்கு வருகின்றது என்றால் புரிந்துக்கொள்ளுங்கள் ராஜாவின் மகத்துவத்தை!

பிரம்மிக்க வைக்கும் இளையராஜா... - கோப்புப் படம்

வீட்டு விசேஷங்களுக்கு ராஜாவின் ஆசிர்வாதம்..!

தமிழ்க் குடும்பங்களின் வீட்டில் நடைபெறும் நிகழ்ச்சிகள் தொடர்ந்து பரிணாமம் பெற்று வந்தாலும், நிகழ்ச்சி அன்று நடைபெறும் சாதி சடங்குகள், பந்தி சண்டைகள் என சில வழக்கங்கள் காலம் மாறாமல் இன்றும் தொடர்கின்றன. இதில், கடந்த 50 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் மஞ்சள் நீராட்டு விழா, திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் இளையராஜாவின் பாடல்கள்தான் சிறப்பு விருந்தினர்களே. அதுவும், ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் இளையராஜா இசைத்த பல்வேறு விதமான பாடல்கள் உண்டு. நிகழ்ச்சி நடக்கும் வீட்டின் பின்னணியில் அந்தப் பாடல் ஒலித்தால்தான் அந்நிகழ்ச்சி முழுமை பெறும் என்பதில் ஐயமே இல்லை! 

திருமணங்களுக்கு என்றே சில பாடல்கள் உள்ளன. திருமண ஜோடிகள் உள்பட அந்த நிகழ்ச்சிக்குத் தலைமை வகிக்கும் ஒவ்வொரு உறவின் அன்பிற்கும் கௌரவத்திற்கும் பிரதிநிதியாக அங்கு இளையராஜாவே களம் காண்கிறார்.  

இதுவரை சவுண்ட் செட் அமைத்து நடைபெற்ற திருமணங்களிலும் சரி, இனி நடக்கப்போவதிலும் சரி; “மாமா உன் பொண்ண குடு..” எனும் பாடல் ஒலிக்கத்தான் போகிறது. இப்பாடலை, ஒலித்து தனது மாமனாரை அன்பாகச் சீண்டிவிட வேண்டுமெனும் ஆசை, ஒவ்வொரு தமிழ்நாட்டு மாப்பிள்ளையின் மனதிலும் இருக்கிறது. “கல்யாண மாலை”, “புது மாப்பிள்ளைக்கு”, “நூறு வருஷம்”, “மாறுகோ மாறுகோ”, ”கல்யாண தேன் நிலா” உள்ளிட்ட பாடல்கள் புரோகிதரின் மந்திரங்களுக்கு முன்னதாகவே நிகழ்ச்சி நிரலில் இடம்பிடித்து விடுகின்றன. ஸ்பீக்கர் வைத்து பாடலை ஒலியிட்டாலும், மேடை பாடகர்கள் பாடினாலும் இப்பாடல்தான் அங்கு மணமக்களை ஆசீர்வாதம் செய்கின்றன. 

இளையராஜா... - கோப்புப் படம்

சோகமா? ராஜா இருக்கிறார்! 

ஒரு நாளுக்குள் மனித மனங்கள் எவ்வளவு நேரம் மகிழ்ச்சியில் திளைத்திருந்தாலும் இறுதியில் ஒரு அமைதியை நோக்கி சென்று முடிவடைகிறது. மகிழ்ச்சியான நிமிடங்களைக் கடந்ததாலோ என்னவோ தெரியாது. முடிவு பெற்ற அமைதி பெரும்பாலும் சோகமானதாகவே இருக்கிறது. மனதின் இறுக்கத்தை மேலும் அதிகரிக்காமல், உங்கள் சோகத்திலும் பங்கெடுக்க வேண்டும், ஆறுதலையும் கூற வேண்டுமா? இளையராஜா இருக்கிறார். 

”தென்பாண்டிச் சீமையிலே”, “பாப்பா லாலி”, “ராசாத்தி உன்ன” ”ஊருசனம் தூங்கிருச்சி” ஆகியவற்றில் தொடங்கி “ வழி நெடுக”, “உன்னோட நடந்தா” என விடுதலை பெறவைத்து சோகத்திலிருந்து வெளியே அழைத்து வருகிறார் நம் இசைஞானி. பாடலின் தேவையே அதுதான்! நமக்குள் இருக்கும் உணர்ச்சிக்கு ஏற்றவாறு இசைய வேண்டும். ஆனால், அளவுக்கு மீறி அதிகரிக்கக் கூடாது! அதில் நம் இளையராஜா வல்லவர் அவர் மிகவும் நல்லவர் என்றே கூறலாம்.

இரவு நேரங்களில் பணிபுரியும் பணியாளர்கள், ஊழியர்கள், லாரி மற்றும் பஸ் போன்ற கனரக வாகனங்களை இயக்கும் ஓட்டுநர்கள் என பலரும் கடவுளுக்கு அடுத்தபடியாக இளையராஜாவின் துணையையேத் தேடுகின்றனர்.

இத்துடன், இளையராஜாவின் மேன்மையே கொண்டாட்டங்கள் மட்டுமின்றி துக்கத்தில் வாடும் மனங்களுக்கு ஆறுதலாக இருப்பதுதான். கரோனா பெருந்தொற்று காலத்தில், லாக்டவுனில் உறவுகளை விட்டு பிரிந்து வீட்டில் அடைக்கப்பட்ட பலரையும் இணைத்ததே ராஜாதான். இத்தாலி, பிரான்ஸ் போன்ற நாடுகளில் வாழும் தமிழர்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாத சூழலில், அவரவர் தங்களின் பால்கனியில் அமர்ந்துகொண்டு “இஞ்சி இடுப்பழகி” என கோரஸாக பாடிய விடியோக்கள் காண்போருக்கும் இளைப்பாற்றின.

கரோனா சிகிச்சை அளிக்கப்பட்ட மருத்துவமனைகளில், தொடர்ந்து வந்துகொண்டே இருந்த நோயாளிகள் மற்றும் அவர்களுக்காகத் தங்களின் உயிரைப் பணயம் வைத்து சிகிச்சையளித்த மருத்துவர்களுக்கும் புத்துணர்வை ஊட்ட இளையராஜாவின் பாடல்கள் ஒலிபரப்பட்டன. இவையாவும், அத்தகைய துயரமான நேரத்திலும் நம்பிக்கையூட்டின.

இப்படி, மனிதர்களின் பண்பாட்டிலும் கலாசாரத்திலும் புறக்கணிக்க முடியாத ஒன்று இசை! ஆனால், தமிழர்களுக்கு அந்த இசையே ராஜாதான்! “இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்” என தான் இசைத்த பாடல் வரிகளுக்கு ஏற்ப இன்னும் எத்தனை காலம் ஆயினும் தலைமுறைகளைக் கடந்து வாழப்போகும் நம் இசைஞானி இளையராஜா, ஒரு சாகாவரம் பெற்ற கலைஞர்தான்! 

summary

Ilayaraja is an irreplaceable culture of Tamil families

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.