FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சிறப்புக் கட்டுரைகள்

80களில் இசையுலகை ஆட்சி செய்த இளையராஜா!

80களில் ஹிட்டடித்த இசைஞானி இளையராஜாவின் பாடல்கள் குறித்து...

Updated On : 2 ஜூன் 2026, 12:47 pm IST
இளையராஜா - கோப்புப்படம்
பகிர்:

1980களில் இசைஞானி இளையராஜா தன்னுடைய தனித்துவமான இசையின் மூலம் மக்களை ஆட்சி செய்தார் என்றே சொல்லலாம். மேற்கத்திய இசை, நாட்டுப்புற இசை, கர்நாடக இசை ஆகியவற்றை ஒருங்கிணைத்து காலத்தில் அழியாத பல பாடல்களுக்கு இசையமைத்தார்.

அந்தக் காலக்கட்டத்தில் வெளிவந்த இளையராஜாவின் பாடல்கள் மக்களின் ஒரு அங்கமாகவே இருந்து வந்தது. காதல், பிரிவு, தோல்வி, கொண்டாட்டம், மகிழ்ச்சி, பக்தி என அனைத்து உணர்வுகளுக்கான இசையைத் தன் வசம் வைத்திருந்தார் இளையராஜா.

இளையராஜாவின் தனித்துவம் என்னவென்றால் வரிகளுக்கு ஏற்ப மெட்டமைத்து, கேட்பவரின் ஆழ் மனதிற்குள் நுழையும் விந்தையை ஏற்படுத்தி உருகவைப்பார். அவர், 80களில் இசையமைத்த பாடல்கள் இன்றளவும் காலத்தால் அழியாத பொக்கிஷங்களாக உள்ளன.

Advertisement

Advertisement

இவர் இசைக்கு உயிர்கொடுத்த பாடகர்கள் என ஜானகி, சுசீலா, ஜென்சி, யேசுதாஸ், எஸ்.பி. பாலசுப்பிரமணியம், மலேசியா வாசுதேவன், சித்ரா, ஷைலஜா என சொல்லிக்கொண்டே போகலாம்.

80களில், வானொலியில் மட்டும் இளையராஜாவின் பாடல்களைக் கேட்க முடியும். நாம் விருப்பப் பாடல் ஒலிபரப்புவார்களா! என்று எதிர்பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும். தொழில்நுடபம் வளர்ந்த பிறகு, விரும்பியப் பாடலை டேப்ரிக்கார்டில் பதிவு செய்து கேட்ட காலமும் உண்டு. இப்போது எந்தப் பாடலையும் எப்போதும் இணையத்தில் கேட்கும் வசதி வந்துவிட்டது.

அந்தக் காலக்கட்டத்தில் பொழுதுபோக்கே சினிமா மட்டும்தான். அதிலும் பாடல்கள்தான் படத்தின் உயிர்நாடியாகவும் இருந்து வந்தது. அன்னக்கிளி படத்தின் மூலம் இசையமைப்பாளராக உருவெடுத்த இளையராஜா, தன்னுடைய திறமையினால் இசைஞானியானார்.

மெல்லிசை

இளையராஜா இசையில் ராஜபார்வை படத்தில் எஸ்.பி. பாலசுப்பிரமணியம், ஜானகி பாடிய அந்தி மழை பொழிகிறது, மூடிபனி படத்தில் கே.ஜே. யேசுதாஸ் பாடிய என் இனிய பொன் நிலாவே, பயணங்கள் முடிவதில்லை படத்தில் எஸ்.பி.பி. பாடிய இளைய நிலா பொழிகிறதே, பொத்தி வைத்த மல்லிமொட்டு, மன்றம் வந்த தென்றலுக்கு போன்ற பாடல்கள் பல தசாப்தங்கள் கடந்தும் எவர்கிரீன் மெல்லிசைப் பாடல்கள் என பலதரப்பட்ட ரசிகர்களையும் கவர்ந்துள்ளன.

தங்கமகன் படத்தில் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் மற்றும் எஸ். ஜானகி பாடிய, ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணோ, சத்யா படத்தில் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் மற்றும் லதா மங்கேஷ்கர் பாடிய, வளையோசை கலகலவென, உதயகீதம் திரைப்படத்தில் இடம்பெற்ற, சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம் போன்ற பாடல்கள் பயண நேரத்தில் கேட்டுக்கொண்டிருந்தால் பயண தூரமே தெரியாது.

80களில் இளையராஜா இசையமைத்த ஆயிரக்கணக்கான பாடல்கள் இன்றளவும் உயர்ப்புடன் இருக்கின்றன என்றால் அவரின் தனித்துவமான இசையமைப்புதான் இதற்குக் காரணம்.

துள்ளல் இசை

மேற்கத்திய இசைத் தாளத்துடன் இளமை உற்சாகத்தை வெளிப்படுத்தும் பல துள்ளலிசைப் பாடல்களை இளையராஜா உருவாக்கினார். பாப், டிஸ்கோ, ராக் போன்ற மேற்கத்திய இசையை கிராமிய இசையுடன் இணைத்து புதிய பரிணாமத்தை மக்களிடன் கொண்டு சேர்த்தார்.

இளையராஜாவின் பல பாடல்கள் பள்ளி, கல்லூரி நிகழ்ச்சிகள் மற்றும் மேடை நிகழ்ச்சிகளில் கொண்டாடப்பட்டு வருகின்றன. பாடல் கேட்டாலே தானாக ஆட்டம் போட வைக்கும் பல பாடல்களை கம்போஸ் செய்தார்.

இவர் இசையமைத்த அண்ணாத்த ஆடுறார், ஆசை நூறு வகை, ராக்கம்மா கையத் தட்டு, ஆட்டமா தேரோட்டமா, ஓஹோ மேகம் வந்ததோ, நிலா அது வானத்து மேலே போன்ற துள்ளலிசைப் பாடல்கள் எல்லாம் இன்றும் கேட்க தூண்டும் பாடல்களாக உள்ளன.

சகலகலா வல்லவன் படத்தில் எஸ்பிபி குரலில் வாலி எழுத்தில் உருவான இளமை இதோ இதோ பாடல், புத்தாண்டு கொண்டாட்டத்தில் இன்றும் ஒலிக்கப்படுகிறது. இதற்கு மாற்றாக பல பாடல்கள் வந்தாலும், இந்தப் பாடலுக்கான மவுசு குறையவில்லை என்றே சொல்லலாம்.

கிராமிய இசை

இளையராஜாவின் கிராமிய இசைப் பாடல்களில் இயற்கையான ஒலிகளுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. பறவைகள் எழுப்பும் ஒலி, மழை பெய்யும் சப்தம், காற்று வீசும் ஒலி, வண்டி மாட்டு சலங்கை ஒலி என இவரின் பாடல்களில் இந்தத் சப்தங்களில் இடம் பெற்றிருக்கும்.

பாடல் தொடங்கும் முன் இந்தச் சப்தங்களை வைத்தே, பாடல் என்ன என்பதைக் கண்டுபிடிக்கலாம். சின்ன தம்பி படத்தில் போவோமா ஊர்கோலம் என்ற பாடலில் குயில் கீச்சிடும் இசை இடம் பெற்றிருக்கும்.

நாட்டுப்புற கிராமிய இசைப் பாடல்களின் பாமர மக்கள் மற்றும் விவசாயிகளின் உணர்வுகளை, இவரின் இசையின் மூலம் உணரமுடிந்தது. நகர மக்களும் கிராமிய வாழ்வை உணரும் வகையில் மெட்டமைத்து இருப்பார்.

பொதுவாக எம்மனசு தங்கம், ஆசைய காத்துல தூது விட்டு, மாங்குயிலே பூங்குயிலே, ஊரு சனம் தூங்கிருச்சு, அடி ஆத்தாடி, மதுர மரிக்கொழுந்து வாசம், செண்பகமே செண்பகமே போன்ற பாடல்கலை மண் வாசனையோடு இசையமைத்திருப்பார்.

இவரது பல பாடல்கள் இப்போதும் கிராமத்து திருவிழாக்களில் கொண்டாடப்பட்ட வருகின்றன. கரகாட்டக்காரன் படத்தில் இடம்பெற்ற அனைத்துப் பாடல்களும் ஹிட் அடித்தன.

தவில், நாதஸ்வரம், உடுக்கை, பம்பை உள்ளிட்ட கிராமிய வாத்தியங்களை மேற்கத்திய இசையோடு இணைத்து புதிய இசையை உருவாக்கி தனித்துவத்தை உருவாக்கிக் காட்டினார்.

இளையராஜாவின் இசை நூற்றாண்டுகள் கடந்தும் ரசிகர்களின் இதயங்களில் என்றும் ஒலித்துக் கொண்டே இருக்கட்டும்!

summary

Regarding the songs by Isaignani Ilaiyaraaja that became hits in the 1980s.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments