முகப்பு
சிறப்புக் கட்டுரைகள்

இளையராஜா இசைக்கு உயிர் கொடுத்த எஸ்பிபி குரல்!

இளையராஜா - எஸ்.பி. பாலசுப்பிரமணியம் கூட்டணி பற்றி...

Updated On : 2 ஜூன் 2026, 7:00 am IST
இளையராஜா - எஸ்.பி. பாலசுப்பிரமணியம் - கோப்புப் படம்
பகிர்:

தமிழ்த் திரையிசை வரலாற்றில் இசைஞானி இளையராஜா - பாடும் நிலா எஸ்.பி. பாலசுப்பிரமணியம் ஆகியோரின் கூட்டணி ஒரு தனி அத்தியாயம்.

மதுரை மாவட்டம் பண்ணைப்புரத்தில் 1943-ல் பிறந்த இளையராஜாவும், ஆந்திரத்தின் நெல்லூர் மாவட்டத்தில் 1946-ல் பிறந்த எஸ்.பி.பி.யும் கிட்டத்திட்ட ஒரே காலகட்டத்தில் தமிழ்த் திரையிசை உலகின் முடிசூடா மன்னர்களாக வலம்வந்தனர்.

கிராமத்து மெட்டை சிம்பொனி ஆர்கெஸ்ட்ராவுடன் இணைக்கும் திறன்கொண்ட இளையராஜா மற்றும் கர்நாடக இசையின் கனத்தையும், மேற்கத்திய இசையின் வளைவையும் ஒரே நேரத்தில் கையாளும் திறன்கொண்ட எஸ்.பி.பி.யின் கூட்டணி இசை மொழியில் நடந்த உரையாடல் என்றே கூறலாம்.

Advertisement

Advertisement

தமிழ்த் திரையிசை உலகில் 1970-களின் பிற்பகுதி முதல் 1990-களின் முற்பகுதி வரை இளையராஜா - எஸ்.பி.பி. காலம் என்றே அழைக்கப்படுகிறது. 1976-ல் வெளியான பாலூட்டி வளர்த்த கிளி திரைப்படத்தில் முதல்முறையாக இவர்கள் இருவரும் இணைந்தனர். கண்ணதாசன் வரிகளில் உருவான “நான் பேச வந்தேன், சொல்லத்தான் ஒரு வார்த்தையில்லை” பாடலை ஜானகியுடன் இணைந்து எஸ்.பி.பி. பாடினார்.

தொடர்ந்து, கவிக்குயில் படத்தில் குயிலே கவிக்குயிலே... நிறம் மாறாத பூக்களில் ஆயிரம் மலர்களே, முள்ளும் மலரும் படத்தில் செந்தாழம் பூவில், சட்டம் என் கையில் படத்தில் சொர்க்கம் மதுவிலே, பகலில் ஒரு இரவு படத்தில் இளமை எனும் பூங்காற்று ஆகிய பாடல்கள் மெகா ஹிட்டடித்தன.

1980-களில் இளையராஜா - எஸ்.பி.பி. கூட்டணியின் பொற்காலமாக இருந்தது. பாரதிராஜா, பாலு மகேந்திரா, கே. பாலசந்தர், மணிரத்னம் போன்ற முன்னணி இயக்குநர்களின் தவிர்க்க முடியாத இணையாக மாறினார்கள். இந்த காலகட்டத்தில் மட்டும் இவர்கள் கூட்டணியில் ஆண்டுக்கு 100 பாடல்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்கள் உருவாகின.

இன்றளவும் இளமைத் துள்ளலுக்கான பாடலாக ’சம்போ சிவ சம்போ’, அன்றைய காதலர்களின் தேசிய கீதமான ‘இளமை இதோ இதோ’ பாடலும் இருக்கின்றன.

சிந்து பைரவி படத்தில் இடம்பெற்ற "பாடறியேன் படிப்பறியேன்" பாடலில், கர்நாடக இசையின் கம்பீரத்தை இருவரும் பறைசாற்றினர்.

1990-களில் வெளியான கேளடி கண்மணி திரைப்படத்தில் இளையராஜா இசையில் இடம்பெற்ற 'மண்ணில் இந்தக் காதல்' பாடலில் ஒரு முழுப் பத்தியையும் மூச்சுவிடாமல் பாடி எஸ்.பி.பி. அசத்தியிருப்பார். எஸ்.பி.பி. உயிரோடு இருக்கும்வரை, அவர் பங்கேற்ற அனைத்து இசை நிகழ்ச்சியிலும் தவறாமல் இந்தப் பாடலைப் பாடி வந்தார்.

1970-களில் தொடங்கி நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து இன்றுவரை கிராமத்து டீக்கடைகளின் ரேடியோக்கள் தொடங்கி, திருமண நிகழ்ச்சி வரை எஸ்.பி.பி. - இளையராஜா பாடல்கள் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.

பாலிவுட் பாடல்கள் கோலோச்சி இருந்த காலத்தில் தமிழ்த் திரையுலகில் அடியெடுத்து வைத்த இளையராஜா - எஸ்.பி.பி. இணை தமிழ்ப் பாடல்களை தமிழகம் மட்டுமின்றி, தமிழ்த் திரையிசையை மலேசியா, சிங்கப்பூர், இலங்கை மட்டுமின்றி வேறு பல நாடுகளுக்கும் கொண்டு சேர்த்தனர்.

பிரிவும் இணைவும்

1990-களின் நடுப்பகுதியில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் இணைந்து பணியாற்றாமல் இருந்தனர்.

அதன் பின்னர், சில பாடல்களில் மட்டுமே இருவரும் ஒன்றிணைந்து பணியாற்றியுள்ளார்கள். 2000-க்கு பிறகு ஏ.ஆர். ரஹ்மான் உள்ளிட்ட இளம் இசையமைப்பாளர்களுக்கு அதிகளவிலான பாடல்களை எஸ்.பி.பி. பாடத் தொடங்கினார்.

இதனிடையே, 2017-ஆம் ஆண்டில் எஸ்.பி.பி.க்கு தனது வழக்கறிஞர் மூலமாக நோட்டீஸ் ஒன்றை இளையராஜா அனுப்பினார்.

அதில், 'தன்னுடைய இசையமைப்பில் உருவான பாடல்களை முன் அனுமதியின்றி இசை நிகழ்ச்சிகளில் பாடக் கூடாது' என கூறப்பட்டிருந்தது.

இதுதொடர்பாக சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டிருந்த எஸ்.பி.பி., “முன் அனுமதியில்லாமல் இளையராஜா இசையமைத்த பாடல்களை மேடையில் பாடுவது பதிப்புரிமை சட்டத்தை மீறும் செயல். அதற்காக பெருமளவில் அபராதமும் சட்ட நடவடிக்கைகளையும் எதிர்கொள்ள நேரிடும்” என நோட்டீஸில் எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும் அவர் கூறியிருந்தார்.

மேலும், "இளையராஜாவை தவிர, வேறு இசையமைப்பாளர்களின் இசையிலும் நான் பாடியிருக்கிறேன். அந்தப் பாடல்களை வரும் கச்சேரிகளில் பாடுவேன்" எனவும் அவர் கூறியிருந்தார்.

இதனிடையே, 2019 ஜூன் மாதம் இளையராஜாவின் பிறந்தநாளையொட்டி, சென்னையில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் எஸ்.பி. பாலசுப்ரமணியம் பங்கேற்றார். இதனைத் தொடர்ந்து காப்புரிமை பிரச்னை முடிவுக்கு வந்தது.

2020 மே மாதம், இளையராஜா இசையில் எஸ்.பி.பி. பாடிய கடைசிப் பாடல் பாரத பூமி. கரோனா களப் பணியாளர்களுக்காக இருவரும் இணைந்து உருவாக்கிய பாடலாகும்.

கரோனாவால் பாதிக்கப்பட்ட எஸ்.பி.பி., 2020 செப்டம்பர் 25 அன்று காலமானார். அப்போது, "என் இசைக்கு உயிர் கொடுத்தவர் போய்விட்டார்" என்று இளையராஜா கண்ணீருடன் பதிவிட்டிருந்தார்.

இவர்கள் இருவரும் இணைந்து உருவாக்கியது வெறும் பாடல் மட்டுமல்ல. இன்பம், துன்பம், வலி, காதல், தோல்வி உள்ளிட்ட மனித உணர்வுகளின் மொழிப்பெயர்ப்பாக இருந்தன.

இசையும் பாடலும் இருக்கும் வரை இளையராஜா - எஸ்.பி.பி. கூட்டணி அழியாது. இவர்கள் உருவாக்கிய பாடல்களும் காலம் கடந்து பயணித்துக் கொண்டேயிருக்கும்.

summary

SPB's voice—the voice that breathed life into Ilaiyaraaja's music

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.