முகப்பு
தமிழ்மணி

முத்தான வெண்பாக்கள் மூன்று!

டி.கே.சி.யின் ஒரே மகன் தீபன் என்னும் தீத்தாரப்பன். "செல்லையா' என்பது அவரது செல்லப் பெயர். இவர் 32 வயதிலேயே காலமாகிவிட்டார். அச்சமயம் "கவிமணி' தேசிக விநாயகம் பிள்ளை ரசிகமணிக்கு எழுதியனுப்பிய வெண்பா இது:

Updated On : 28 ஜூலை 2013, 2:40 am IST
பகிர்:

டி.கே.சி.யின் ஒரே மகன் தீபன் என்னும் தீத்தாரப்பன். "செல்லையா' என்பது அவரது செல்லப் பெயர். இவர் 32 வயதிலேயே காலமாகிவிட்டார். அச்சமயம் "கவிமணி' தேசிக விநாயகம் பிள்ளை ரசிகமணிக்கு எழுதியனுப்பிய வெண்பா இது:

""எப்பாரும் போற்றும் இசைத்தமிழ்ச் செல்வாஎன்

அப்பா அழகியசெல் லையா - இப்பாரில்

Advertisement

Advertisement

சிந்தை குளிரச் சிரித்தொளிரும் நின்முகத்தை

எந்தநாள்க் காண்பேன் இனி''

இவ் வெண்பாவைப் படித்து உள்ளம் உருகிய ரசிகமணி, ""தங்கள் உள்ளத்தின் கனிவு வெண்பாவில் தெளிந்து கிடக்கிறது. தமிழுலகில் இந்த வெண்பா எழுத ஒருவர்தான்; அது தாங்கள்தான்... "கவிக்கு உயிரையே கொடுக்கலாம்' என்று சொல்லுவது நம்மவர் மரபு. தங்கள் கவி உயிரைக் கொடுத்து வந்த மாதிரியே இருக்கிறது... தமிழ்ப் பாஷை தங்களுக்கு அருமையாய்த் துணைபுரிகிறது. தாங்களும் தமிழுமாகச் சேர்ந்து எவ்வளவோ ஆறுதலைத் தருகிறீர்கள்'' எனக் கவிமணிக்கு மறுமொழி எழுதத்தூண்டிய வெண்பா இது!

கவிஞர் கண்ணதாசன் நடத்திய இலக்கிய இதழ் "தென்றல்'. அவ்விதழ் ஒருமுறை வெண்பாப் போட்டிக்குக் "கொண்டு வந்து போட்டுக் கொளுத்து' என்ற ஈற்றடியைக் கொடுத்தது. அப்போட்டிக்கு வந்த வெண்பாக்களில் ஒன்று கவிஞரின் நெஞ்சை மிகவும் கவர்ந்தது. அவ்வெண்பா இது:

""அந்திவரை இரந்தேன், அன்பே! பிடியரிசி

தந்தார்; உணவு சமைத்திடுவாய்! - இன்றேனும்

உண்டிடட்டும் நம்சேய்கள்; ஓடிப்போய்க் காய்சருகைக்

கொண்டுவந்து போட்டுக் கொளுத்து''

ஒரு குடும்பம்; கணவன், மனைவி சில குழந்தைகள். பல நாள்கள் பட்டினியாலே பரிதவிக்கிறது அந்தக் குடும்பம். அவதிப்பட்ட கணவன் அல்லும் பகலும் எல்லோரிடமும் யாசிக்கிறான். அந்தியிலே ஒரு பிடி அரிசி அவனுக்குப் பிச்சையாகக் கிடைக்கிறது. அதைக் கையிலே எடுத்துக்கொண்டு வேகமாக ஓடிவந்து தன் மனைவியிடம் கொடுத்து, ""கண்ணே! அந்திவரை யாசித்தேன்; இப்போதுதான் பிச்சை கிடைத்தது; இன்றைக்காவது நம் பிள்ளைகள் உண்ணட்டும்; ஓடிப்போய்க் காய்சருகுகளைக் கொண்டுவந்து போட்டுக் கொளுத்து'' என்கிறான். வறுமையிலே அடிபட்ட ஒரு குடும்பத்தின் உள்ளார்ந்த உணர்வுகளைப் பதினைந்து சொற்களில் இந்த வெண்பா விளக்கிவிடுகிறது.

""நல்ல கவிதைக்கு அடையாளம் படித்தவுடன் அது இருதயத்திலும் கண்களிலும் அப்படியே நின்று கொண்டிருக்க வேண்டும். பாளையங்கோட்டை நண்பர் ம.இலனியன் எழுதிய அந்த வெண்பா நல்ல கவிதைக்கு இலக்கணமாகிறது'' என்று இவ் வெண்பாவின் நலத்தினைப் போற்றியுள்ளார் கண்ணதாசன்.

தமிழ் இலக்கிய வரலாற்றில் காலங்காலமாய்க் கட்டிக் காக்கப்பட்டிருக்கும் வெண்பாவின் கட்டுமானத்தை இன்றைய "எய்ட்ஸ்' என்னும் உயிர்க்கொல்லி நோய்க்கு எதிரான ஆயுதமாக ஏந்தி, கவிஞர் வைரமுத்து படைத்துள்ள கவிதை "நண்பா உனக்கொரு வெண்பா'!

""துணையோடு மட்டும் தொடர்கின்ற வாழ்வுக்கு

இணையாக வேறுமருந் தில்லை - மனைவியெனும்

மானிடத்து மட்டும் மையல் வளர்த்திந்த

மானுடத்தை வாழ்விப்போம் வா!''

சமகாலத் தளத்திலும் களத்திலும் உயிர்ப்புடன் இயங்கும் தனித்திறன் "வெண்பா' வடிவத்திற்கு உண்டு என்பதற்குக் கட்டியம் கூறி நிற்கும் வெண்பா இது!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.