முகப்பு
தமிழ்மணி

ஒளியும் புகழும்

திருக்குறள் போலப் பரிமேலழகர் உரையும் "குறுகத் தறித்த'தாய், விரித்து விளக்கக் கூடிய கருத்து வளத்தை உள்ளடக்கியுளது. திருவள்ளுவர்

Updated On : 15 செப்டம்பர் 2013, 3:53 am IST
பகிர்:

திருக்குறள் போலப் பரிமேலழகர் உரையும் "குறுகத் தறித்த'தாய், விரித்து விளக்கக் கூடிய கருத்து வளத்தை உள்ளடக்கியுளது. திருவள்ளுவர் "புகழ்' என்ற சொல்லுக்கு ஈடாக, "ஒளி' என்ற சொல்லைச் சில இடங்களில் ஆள்கிறார். அங்ஙனமாயின் புகழும் ஒளியும் ஒன்றா? வேறா?

நல்லாட்சி செய்பவனை "வேந்தர்க்கு ஒளி' (390) என்னும்போது, தன்னையொத்த வேந்தர் அனைவருக்கும் ஒளிவிளக்காவான் என்பதாம். போர் நெறி கல்லாது, வெகுண்டுவரின், அவ்வாறு வரும் வலுவற்றவனை வெல்லமாட்டாதவனை புகழாகிய ஒளி பொருந்தாது (870); சூதாடுபவனையும் ஒளி பொருந்தாது (939) அதாவது, செல்வம், கல்வி முதலியவற்றுடன் அவன் விளங்கித்தோன்ற மாட்டான்; செங்கோலாட்சி செய்யாத மன்னர்க்கு ஒளியுடைமை வாய்க்காது (556) என்கிறார்.

""இளிவரின் வாழாத மானம் உடையார்

Advertisement

Advertisement

ஒளிதொழுது ஏத்தும் உலகு'' (976)

மானமுடையவனது ஒளியுடைமையை உலகம் போற்றிப் பாராட்டும்.

""ஒளி ஒருவற்கு உள்ள வெறுக்கை இளிஒருவற்கு

அஃதுஇறந்து வாழ்தும் எனல்'' (971)

உள்ள வெறுக்கை - ஊக்கம் மிகுதி. முன்னேறும் முயற்சியில் தாழாது திகழ்பவனுக்கு, பலரும் போற்றும் "ஒளி'யுடைமை வாய்க்கும். அம் முயற்சியுடைமையைக் கைவிட்டு, வெந்ததைத் தின்று வீண் பொழுது போக்குவோம் என்பது இளிவாகும்.

ஒளி :- "தான் உளனாய் காலத்து மிக்குத் தோன்றுதலுடைமை'. பரிமேலழகர் தரும் இவ்விளக்கம் சிறப்புடைய ஒன்றாகும். இப்போது நமக்கு ஒளி, புகழ் இரண்டின் வேறுபாடு தெளிவாக விளங்குகிறது. "ஒளி' என்பது இவ்வுலகில் ஒருவன் வாழ்கின்றபோதே வாய்ப்பு வசதி மிக்கு, செல்வாக்குடன் திகழ்தல்; "புகழ்' என்பது வாழுங்காலத்து உளதாகிய ஒளியுடன் வாழ்க்கைக்குப் பிறகும் உலகில் நிலைநிற்பதாகும்.

சிலர் ஒளியுடைமை வாய்த்ததுமே, அதனைப் புகழுடைமைக்கு அழைத்துச் செல்லும் வழியில் செல்லாது, ஒளி இழக்கும் செயல்களில் ஈடுபட்டு நல்வாய்ப்பை இழப்பர். ""தான் உளனாய காலத்தில் உயர்வுடன் திகழ்தல்'' என்ற கருத்தைக் கூறிய பரிமேலழகர் சிறப்புடைய உரை வல்லுநராகக் காட்சியளிக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.