முகப்பு
தமிழ்மணி

கள்ளிக்கியான் தாய்க் கள்ளி!

தலைவனோடு தன் மகள் உடன் போயினள் என்பதையறிந்தாள், தாய். மகளைத் தேடிச் சென்றாள்.

Updated On : 15 ஆகஸ்ட் 2016, 9:12 am IST
பகிர்:

தலைவனோடு தன் மகள் உடன் போயினள் என்பதையறிந்தாள், தாய். மகளைத் தேடிச் சென்றாள். கள்ளிச் செடிகளும், மூங்கில் மரங்களும் நிறைந்துள்ள பாலை நிலத்தில் தன் மகளின் காலடிச் சுவடுகளைக் கண்டாள். அந் நிலத்தில் நிலவும் வெப்பத்தால் தீ தானாகவே பற்றிக் கொள்ளும் தன்மையில் கள்ளிச் செடிகள் கரிந்துபோய் நேராக நிற்காமல் அதன் தன்மைக்கேற்பத் திருகி வளைந்து நிற்கின்றன.

 இத்தகைய கள்ளிச்செடிகள் நிறைந்த காட்டு வழியில் மகள் தலைவனுடன் சென்றாள் என்பதை அறிந்து துயர் மிக்கவளாய், ஆற்றாளாகக் கள்ளிச்செடிகளிடம் கூறிப் புலம்புகிறாள். "பெருமை பொருந்திய சேகர வேந்தனது பாலை வெற்பிடத்தே தோன்றித் திருகி நிற்கும் கள்ளிகளே! (கள்ளிச் செடிகளே) பெற்ற தாயான என்னையும் தன்னுடைய தோழிகளையும் மறந்து தலைவனே துணையாக இவ்வழியே வந்த கள்ளிக்கு(பெண்ணுக்கு) யான் தாய் என்னும் உறவுடைய கள்ளியாவேன். என் துன்பத்தைக் காண்பீர். இவ்விடத்தே காணும் அடிச்சுவடு கண்டு அது என் மகளுடையது என்பதை அறிந்து எனது உயிர் தவிக்கின்றதே! மேற்கொண்டு அவள் சென்ற வழியைக் கூறுங்களேன்; என் செய்வது எனத் தெரியாமல் யான் தவிக்கின்றேன்' என்கிறாள். அத்தாயின் கண்ணீர்ப் பாடல் வருமாறு:

""வேய்க்கள்ளி கூரியமாக்குப சேகரன்விஞ்ஞை வெற்பில்

Advertisement

Advertisement

தீக்கள்ளியாகப் புதைந்தே எழுந்து திருகிநிற்கிறாய்

காக்கள்ளிகாள் காக்கள்ளிகாள் இங்கணே வந்தகள்ளிக்கியான்

தாய்க்கள்ளி காணிவ்வடி கண்டேன் ஆவிதவிக்கின்றதே!''

 

தன் மகள் களவொழுக்கத்தால் உடன் சென்றதனாலும், தன்னை வஞ்சித்துச் சென்றதனாலும் அவளைக் "கள்ளி' என்று கூறினாள். அவளுக்குத் தாயான தானும் மகளிடம் ஏமாந்த நிலையில் இருப்பதால் தன்னையும் கள்ளி என்றாள். கள்ளி என்னும் சொல்லை ஆறு இடங்களில் வெவ்வேறு பொருள்களில் கையாண்டமை இப்பாடலின் சிறப்பாகும். ஆனால், இப்பாடலை இயற்றிய புலவர் யாரென்று அறியப் பெறவில்லை. சில தனிப்பாடல் பதிப்புகளில் மட்டும் இப்பாடல் காணக் கிடைக்கிறது.

 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.