முகப்பு
தமிழ்மணி

ஓங்கார அணை மீது ஒருத்தி...

சங்க காலத் தலைவியர் பூஞ்சோலைகளில், புதர் நிறைந்த இடங்களில், குன்றுகளின் அருகில், கடற்கரை அருகில் எனப் பல்வேறு இடங்களில் தலைவனுக்காகக் காத்திருந்தனர்.

Updated On : 29 ஆகஸ்ட் 2021, 4:57 pm IST
பகிர்:


சங்க காலத் தலைவியர் பூஞ்சோலைகளில், புதர் நிறைந்த இடங்களில், குன்றுகளின் அருகில், கடற்கரை அருகில் எனப் பல்வேறு இடங்களில் தலைவனுக்காகக் காத்திருந்தனர். வேங்கை மர நிழலில், மரக்கிளையில் என "மணம்' வீசத் தலைவியர் பலர் காதல் வளர்த்துக் கொண்டனர்.

குறிஞ்சி நிலத் தலைவன் வேலன் வள்ளியைச் சந்தித்ததும் வேங்கை மர நிழலிலும், தினைப்புனம் காக்கும் பரணிலுமே. பின்னர் கடற்கரையிலிருந்து குளத்தங்கரை, கேணி எனத் தலைவன்-தலைவியர் சந்திப்பு இடங்கள் அமைந்தன.

இவ்வளவு இடங்கள் இருந்தும், ஓங்கார அணை மீது காத்திருந்தாள் தலைவி ஒருத்தி.  ஓங்கார அணைமீது இருப்பவன் "முத்தமிழ் அடைவினை முற்படுகிரிதனில் முற்பட எழுதிய முதல்வோனாய்' இருத்தல் வேண்டும். அன்றேல் "முக்கட் பரமற்குச் சுருதியின் முற்பட்டது கற்பித் திருவருள் முப்பத்து மூவர்க்கத் தமரரும்' அடிபேணக் கூடியவனாக இருத்தல் வேண்டும்.

Advertisement

Advertisement

தலைவி ஓங்கார அணை மீது காத்திருக்கிறாள் என்றால், அவள் எப்படிப்பட்டவள்? காத்திருந்தவளது நிலை பின் என்னவாயிற்று? ஆடிய பொற்பாதம் கொண்டவன் அழகு பொன்னுருவாய்க் காண ஆசை கொண்டாள் தலைவி. அவனோ சிவந்த வடிவகன்று மாணிக்க ஒளி வீசும் பளிங்கு வடிவில் நிற்க, அதிசயித்து அதிர்ந்த தலைவி, பெருமை தோன்ற "உட்காருங்கள்' என எழுந்தாள். 

ஆங்காரப் பெருமை அகல, அவனோ "ஆங்காரம் ஒழி' என்றுரைக்க, "ஈசனோடாயினும் ஆசையை அறுமின்' என ஆங்காரம் ஒழிய, அவனுள் தன்னுரு கண்டு அதிர்ந்தாள் தலைவி. தன்னுரு மறைந்து தலைவன் உரு தோன்றி இரண்டுருவம் ஒன்றாகக் கலக்க, தன்னை மறைத்தது யார் எனத் தேடியது தலைவியின் மனம். அப்போது பெருவெளியில் கலந்தனர் அவ்விருவரும். பாடலைப் பார்ப்போமா!

ஓங்கார அணைமீது நான் இருந்த தருணம்
உவந்தெனது மணவாளர் சிவந்தவடி வகன்றே
ஈங்காரப் பளிங்குவடி வெடுத்தெதிரே நின்றார்
"இருந்தருள்க' என எழுந்தேன்! "எழுந்திருப்பதென்நீ
ஆங்காரம் ஒழி' என்றார் ஒழித்தனன் அப்போது
அவர் நானோ நான் அவரோ 
அறிந்திலன்முன் குறிப்பை
ஊங்கார இரண்டுருவம் ஒன்றானோம் ஆங்கே
உறைந்தஅனு பவம்தோழி நிறைந்தபெரு வெளியே!
(திருவருட்பா,  தனித் திருஅலங்கல், 125:145)

தனித் திரு அலங்கல் பகுதியில் அருட்பிரகாச வள்ளலார் ஆன்ம நேய ஒருமைப்பாடு பற்றிக் குறிப்பிடுகிறார். மேற்குறித்த இப்பாடலில் அத்துவிதம் (வேறின்மை) பேசப்படுகிறது. "அத்துவிதம்' என்பதை "கடவுள் நிலையறிந்து அம்மயமாதல்' என்பார் வள்ளலார். அத்துவிதத்தை நாம் அடைய வேண்டுமானால் நமக்கு ஜீவ ஒழுக்கம் தேவை.

மனித நேயமே ஜீவ ஒழுக்கமாகும். "ஜீவ ஒழுக்கத்தை யார் கடைப்பிடிக்கிறார்களோ அவரே, தன்னைப் போன்றே இறைவனும் என்ற உறுதிப்பொருளை அடைவார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.