முகப்பு
தமிழ்மணி

இந்த வாரம் கலாரசிகன் - 22-3-2026

சாகித்திய அகாதெமி விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.

Updated On : 22 மார்ச், 2026 at 11:53 AM
பகிர்:

சாகித்திய அகாதெமி விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. மத்திய கலாசாரத் துறையின் கீழ் செயல்படும் இலக்கிய அமைப்பான சாகித்திய அகாதெமி ஆண்டுதோறும் 24 மொழிகளில் வெளிவரும் கவிதை, சிறுகதை, நாவல், இலக்கிய விமர்சனம் உள்ளிட்ட படைப்புகளில் சிறந்ததாக ஒன்றைத் தேர்ந்தெடுத்து, அதன் படைப்பாளிக்கு இந்த விருதை வழங்கி வருகிறது.

2025-ஆம் ஆண்டுக்கான தமிழ் மொழிக்கான சாகித்திய அகாதெமி விருது எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வனின் 'தமிழ்ச் சிறுகதையின் தடங்கள்' என்கிற இலக்கிய விமர்சன நூலுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. கடந்த நூறு ஆண்டுகளுக்கும் மேலாக வெளிவரும் தமிழ்ச் சிறு

கதைகளின் பரிமாணங்களை ஆய்வு செய்து பதிவு செய்திருக்கிறார் தமிழ்ச்செல்வன். கதைகளின் போக்கை விவரிப்பதுடன், அந்தக் கதை எழுதப்பட்ட காலகட்டத்தின் அரசியல், கலாசாரத் தாக்கம், சமூக மாற்றங்கள் உள்ளிட்டவை

எவ்வாறு அந்த சிறுகதைகளில் பிரதிபலித்தன என்பதையும் அந்த நூலில் பதிவு செய்திருக்கிறார் அவர்.

வெயிலோடு போய், வாளின் தனிமை, மிதமான காற்றும் இசைவான கடலலையும் உள்ளிட்ட 25-க்கும் அதிகமான சிறுகதைத் தொகுப்புகள் உள்ளிட்ட படைப்புகளுக்குச் சொந்தக்காரர் தமிழ்ச்செல்வன். பழம்பெரும் நாடகக் கலைஞரும், பாடலாசிரியருமான மதுரகவி பாஸ்கரதாஸ் இவரது தாய் வழித் தாத்தா. சிறுகதை எழுத்தாளரான தமிழ்ச்செல்வனுக்கு, ஆய்வு நூலுக்கு விருது வழங்கப்பட்டிருக்கிறது.

படைப்புக்கு வழங்கப்படும் விருது என்பதைவிட, சாகித்திய அகாதெமி விருது படைப்பாளிக்கு வழங்கப்படும் விருதாகத்தான் இருந்து வருகிறது.

இந்திய அளவில் வழங்கப்படும் அரசின் மிக உயர்ந்த விருது என்று கூறப்படும் சாகித்திய அகாதெமி விருதுகள் சர்ச்சையில் சிக்குவது வருத்தமளிப்பதாகத்தான் இருக்கிறது.

புரட்சிக் கவிஞர் பாரதிதாசனுக்கு 'பிசிராந்தையார்' நாடகத்துக்கும், கவியரசர் கண்ணதாசனுக்கு 'சேரமான் காதலி' நாடகத்துக்கும் சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்டிருக்கும்போது, சிறுகதை எழுத்தாளர் தமிழ்ச்செல்வனுக்கு அவரது 'தமிழ்ச் சிறுகதையின் தடங்கள்' என்கிற ஆய்வு நூலுக்கு விருது வழங்கப்பட்டிருப்பதில் வியப்பொன்றும் இல்லைதான். இன்னாருக்கு விருது வழங்க வேண்டும் என்று தீர்மானிக்கப்படுகிறதே தவிர, அவரது தனிச் சிறப்புக்கு முன்னுரிமை வழங்கப்படுவதில்லை என்பதுதான் வேடிக்கை.

தமிழக அரசின் விருதுகள் பெரும்பாலும் திராவிட இயக்கச் சிந்தனையாளராக இருந்தால் மட்டுமே வழங்கப்படுவது வழக்கமாகி விட்டது. அதேபோல, மத்திய அமைப்புகளில் இடதுசாரி சிந்தனையாளர்களின் ஆதிக்கம்தான் சாகித்திய அகாதெமி போன்ற அமைப்புகளில் மேலோங்கி இருக்கின்றன.

விருதுத் தேர்வுக் குழுக்களில் ஜாதிய மேலாதிக்கம் தலைதூக்கத் தொடங்கியிருக்கிறது என்கிற விமர்சனத்திலும் உண்மை இல்லாமல் இல்லை. இதற்கு என்னதான் தீர்வு என்று பரிந்துரைக்கத் தெரியாததால், இத்துடன் எனது ஆதங்கத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து விடுகிறேன்.

2025-ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதெமி விருது பெற்றிருக்கும் எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வனுக்கு வாழ்த்துகள்!

எண்பதுகளில் சென்னை மாநகரத்தில் கலை, இலக்கியப் பரப்பில் எனக்குத் தெரிந்து நான்கு 'ராதாகிருஷ்ணன்கள்' இயங்கினார்கள். 'ராணி மைந்தன்' என்கிற ராதாகிருஷ்ணன், இதழியலாளர்; 'ராது' என்கிற ராதாகிருஷ்ணன் இதழியலிலும் நாடக மேடைகளிலும் இயங்கியவர்; 'ஏர்வாடி' ராதாகிருஷ்ணன் கவிஞர், 'கவிதை உறவு' இதழாசிரியர்; கடைசியாக டி.வி.ராதாகிருஷ்ணன் நாடக நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர்.

இவர்களில் முதல் மூன்று பேர்களும் எனது நண்பர்கள். நான்காமவர் எனக்கு அறிமுகம் இல்லாதவர். அவர்களுக்குள் இன்னொரு ஒற்றுமையும் இருந்தது. அந்த நான்கு ராதாகிருஷ்ணன்களும் பொதுத் துறை வங்கிகளில் பணியாற்றி வந்தனர்; பணி ஓய்வு பெற்ற பிறகும் இயங்கி வந்தனர்.

டி.வி. ராதாகிருஷ்ணன் எழுதிய 'கம்பன் கவி அழகும் நயமும்' என்கிற புத்தகம் விமர்சனத்துக்கு வந்திருந்தது. கம்பன் குறித்த நூல் என்று சொன்னாலே நான் ஈர்க்கப்படுவேன்.

அதிலும் டி.வி. ராதாகிருஷ்ணன் எழுதியது என்று பார்த்தபோது உடனடியாக எடுத்துப் புரட்டிப் படிக்கத் தொடங்கி விட்டேன்.

கம்பகாதை குறித்தும், கம்பனின் கவிநயம் குறித்தும் நாளும் ஒரு படைப்பு வெளிவருகிறது என்றால், அதன் ஆழ அகலமும், ஈர்ப்பின் வீரியமும் அப்படிப்பட்டது. அந்த வரிசையில் இணைகிறது டி.வி. ராதாகிருஷ்ணனின் 'கம்பன் கவி அழகும் நயமும்.'

கம்பகாதையில் தான் படித்து வியந்த, ரசித்த 125 பாடல்கள் குறித்த தனது கருத்தை எழுத்தில் வடித்திருக்கிறார். பாடலுக்கான பின்னணியுடன், பாடலையும் பொருளையும் தந்து கம்பனின் கவி அழகையும், கவி நயத்தையும் வியந்தோதுகிறார் ராதாகிருஷ்ணன். பாடல்கள் வரிசைக் கிரமப்படி அமையாமல் இருப்பது படிப்பதற்கு சற்று நெருடலாக இருக்கிறது. அடுத்த

பதிப்பில் கதைப் போக்குடன் வரிசைப்படுத்திக் கொண்டால், இன்னும்கூட சுவாரஸ்யமாக இருக்கும் என்பது எனது கருத்து.

பொன்னாடைகள் போர்த்துவதில் எனக்கு எப்போதுமே உடன்பாடு கிடையாது. புகைப்படம் எடுக்கும்போது வண்ணமயமாக இருக்கும் என்பதற்காகத்தான் பலரும் பொன்னாடை போர்த்த விரும்புகிறார்கள். தொடர்ந்து பொன்னாடை பெறும்போது, அதையெல்லாம் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்ப நேரும்.

பொன்னாடை வியர்வையையும் துடைக்காது; கண்ணீரையும் துடைக்காது. குளிருக்கு இதமாக இருக்குமா என்றால் அதுவும் கிடையாது. துண்டு போர்த்தினால் பயன்படுத்தலாம்.

கம்பளி சால்வை போர்த்தினால், நாம் சந்திக்கும் மூத்த அறிஞர்களுக்கும், முதியோருக்கும் போர்த்தி வாழ்த்துப் பெறலாம். பொன்னாடைகளை என்ன செய்வது? பெண் குழந்தைகளுக்குப் பாவாடை சட்டைகூடத் தைக்க முடியாது.

பயன்படுத்த முடியாது; தூக்கிப் போடவும் முடியாது என்பதால், கிடைக்கும் அடுத்த வாய்ப்பில் மடிப்புக் கலையாமல் அதை அடுத்தவர்களுக்குப் போர்த்தி மகிழ்வது என்பதுதான் பலரும் கையாளும் உத்தி. 'கலைமாமணி'

கவிஞர் அரிமதி இளம்பரிதியின் 'கனல்' கவிதைத் தொகுப்பில் வெளிவந்திருக்கும் சால்வை பற்றிய கவிதையைப் படித்தபோது தோன்றிய எண்ணங்கள்தான் மேலே குறிப்பிட்டவை...

சால்வைகளும்

பூமியைப் போலத்தான்

சுற்றிச் சுற்றி

வருகின்றன...!!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.